இலங்கை என்னை வெட்கப்பட வைத்துவிட்டது’ என, சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர், சமூகவலைதளத்தில் இட்ட பதிவானது பெரும் பேசுபொருளாகியிருந்தது. அதாவது, பிரான்ஸில் வசிக்கும் அப்பெண் சில மாதங்களுக்கு முன்னர், இலங்கைக்குச் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டார்.
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் மக்களின் இயல்பு குறித்துப் பலவிதமான சந்தேகங்களும் அச்சங்களும் அவரது மனதில் நிறைந்திருந்தன. எங்கும் பரவியிருந்த எதிர்மறையான தகவல்களால், இலங்கையைப் பற்றிய தவறான பிம்பத்தையே அவர் தனது எண்ணத்தில் உருவாக்கி வைத்திருந்தார்.
ஆனால், இலங்கையில் கால்பதித்த சில நாட்களிலேயே அவரது சந்தேகங்கள் அனைத்தும் சுக்குநூறாக உடைந்தன. அவர் சென்ற இடங்களிலெல்லாம் இலங்கை மக்கள் காட்டிய பேரன்பும், ஆதரவும், தூய்மையான விருந்தோம்பலும் அவரை மனமுருகச் செய்தன. இலங்கை மக்களின் அன்பைக் கண்டு அவர் நெகிழ்ந்தார்.
அப்பெண், மனமுருகி ஒரு காணொளியை வெளியிட்டார். அதில், “இவ்வளவு தூய்மையான அன்பும் மனிதநேயமும் கொண்ட இலங்கை மக்களைப் பற்றி, எந்தவொரு உண்மையும் தெரியாமல் மனதில் தவறான எண்ணங்களை வளர்த்து வைத்திருந்ததற்காக என்னை நினைத்து நானே வெட்கப்படுகிறேன்” என்று உணர்ச்சிபூர்வமாகக் குறிப்பிட்டார்.
இலங்கை என்பது வெறும் இயற்கை அழகு நிறைந்த நாடு மட்டுமல்ல, மாறாக அன்பான மனிதர்கள் வாழும் பாதுகாப்பான சொர்க்கம் என்பதை உலகுக்கு உணர்த்திய இந்தச் சம்பவம், சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளானது. பலரும் இக்காணொளியைப் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டனர்.
இலங்கையின் சுற்றுலாத்துறையின் சிறப்பைப் பற்றிக் கூற இச்சம்பவம் சிறந்ததொரு உதாரணம்.
இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கடற்கரைகள், பசுமை போர்த்திய தேயிலைத் தோட்டங்கள், வனவிலங்குகள் நிறைந்த தேசியப் பூங்காக்கள் மற்றும் தொன்மைமிக்க வரலாற்றுச் சின்னங்கள் என ஒரு சுற்றுலாப் பயணி எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள நாடு இலங்கை. நாட்டின் பொருளாதார மீட்சிக்கும், சர்வதேச நற்பெயரைப் பெறுவதற்கும் சுற்றுலாத்துறை மிக முக்கிய தூணாக விளங்குகிறது.
அண்மைக் காலமாக இலங்கைக்கு வருகை தரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான வேகமான வளர்ச்சி தென்படுகிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே, இலட்சக்கணக்கான பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில், வழமையாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளை விடவும், ஆசிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள், குறிப்பாக இந்தியாவிலிருந்து வருவோர் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகின்றனர்.
அதாவது, இலங்கைக்கு வருகை தரும் மொத்த சுற்றுலாப் பயணிகளில் சுமார் கால்வாசி பகுதியினர் இந்திய நாட்டினராவர். இந்த அதீத ஆர்வத்துக்குப் பின்னால் பல சாதகமான காரணங்கள் அமைந்துள்ளன.
குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையிலான புவியியல் அருகாமை மற்றும் போக்குவரத்து வசதிகள் இதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. சென்னை, மும்பை, புதுடில்லி, பெங்களூர் போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருந்து கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இயக்கப்படும் குறுகிய நேர விமான சேவைகள் பயணங்களை மிகவும் எளிதாக்கியுள்ளன. மேலும், அரசு நடைமுறைப்படுத்தியுள்ள மின்னணு பயண அனுமதி மற்றும் இலவச அல்லது எளிமையாக்கப்பட்ட விசா நடைமுறைகள் பயணிகளின் வருகையை மேலும் தூண்டியுள்ளன.
இவற்றுடன், இராமாயணத்துடன் தொடர்புடைய வரலாற்றுத் தலங்களை உள்ளடக்கிய ஆன்மிகச் சுற்றுலா, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார ஒற்றுமை மற்றும் குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்த சொகுசு அனுபவங்களைப் பெற முடியும் என்ற பொருளாதாரச் சாதகம் ஆகியவை இந்தியப் பயணிகளின் முதன்மைத் தேர்வாக இலங்கையை மாற்றியுள்ளன.
இவ்வாறு வெளிநாட்டுப் பயணிகள் அதிகளவில் வருகை தருவது இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பெரும் அனுகூலங்களை வழங்கி வருகிறது. சுற்றுலாத்துறையின் மூலம் நாட்டுக்குள் நேரடியாக பில்லியன்கணக்கிலான அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியாக அதிகரித்து வருகின்றது. இது நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதோடு, உள்நாட்டுப் பணமதிப்பையும் பொருளாதாரத்தையும் சீராக வைத்திருக்க உதவுகிறது.
மேலும், விடுதிகள், உணவகங்கள், பயண வழிகாட்டிகள், உள்ளூர் போக்குவரத்து ஓட்டுநர்கள், சாகச விளையாட்டு அமைப்பாளர்கள் மற்றும் கைவினைப்பொருள் தயாரிப்பாளர்கள் என நேரடி மற்றும் மறைமுக வழிகளில் இலட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் இத்துறை உருவாக்கித் தருகிறது. கிராமப்புற மற்றும் கடலோரப் பகுதிகளின் உள்ளூர் பொருளாதாரமும் இதன் மூலம் கணிசமான வளர்ச்சியை அடைந்து வருகின்றன.
மேலும், இலங்கைக்கு வரும் பயணிகள் இங்கு மறக்க முடியாத, மகிழ்ச்சியான பல அனுபவங்களைப் பெறுகின்றனர். பெந்தோட்டை, மிஸ்ஸா மற்றும் அருகம்பே போன்ற உலகப் புகழ்பெற்ற கடற்கரைகளில் ஓய்வெடுப்பது, கண்டி மற்றும் நுவரெலியா பகுதியின் பசுமையான இயற்கைச் சூழல் மற்றும் நீர்வீழ்ச்சிகளை இரசிப்பது, எல்ல பகுதியை நோக்கிய புகழ்பெற்ற மலைநாட்டு ரயில் பயணம் ஆகியவை பயணிகளைப் பெரிதும் பரவசப்படுத்துகின்றன. வரலாற்று ஆர்வம் கொண்டவர்களுக்கு சிகிரியா, அநுராதபுரம், பொலன்னறுவை போன்ற உலகப் பாரம்பரியச் சின்னங்கள் வியப்பை அளிக்கின்றன.
அதேவேளையில், யால மற்றும் மின்னேரியா போன்ற தேசியப் பூங்காக்களில் யானைகள் மற்றும் சிறுத்தைகளை அருகிலிருந்து காணும் வனவிலங்கு சரணாலய சுற்றுலா அனுபவமும் கிடைக்கின்றது. இதேசமயம், சுற்றுலாத்துறை இத்தகைய எழுச்சியைக் கண்டு வந்தபோதிலும், பயணிகள் எதிர்கொள்ளும் சில கசப்பான அனுபவங்களும் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
உதாரணமாக, கடந்த வருடம், அறுகம்பைக்கு அருகிலுள்ள பகுதியில் வெளிநாட்டுப் பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சுற்றுலாப் பொலிஸாரும் உள்ளூர் பொலிஸாரும் இணைந்து நடத்திய விசாரணையின் மூலம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அதேபோல், நியூசிலாந்தைச் சேர்ந்த தனியாகப் பயணித்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவருக்குப் பகல் வேளையில் உள்ளூர் நபர் ஒருவரால் பாலியல் அத்துமீறல் அளிக்கப்பட்ட சம்பவம் காணொளியாகப் பதிவாகி சர்வதேச அளவில் பேசப்பட்டது. இப்படி ஒருசில இடங்களில் இத்தகைய கசப்பான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
அதுபோல், சில உள்ளூர் முச்சக்கரவண்டி மற்றும் கட்டண வாகன ஓட்டுநர்கள், தற்காலிக வியாபாரிகள் மற்றும் முறையான உரிமம் பெறாத வழிகாட்டிகள் வெளிநாட்டுப் பயணிகளிடம் அளவுக்கு அதிகமான கட்டணங்களை வசூலிப்பதும், ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதுமான பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கிராமப்புறப் பகுதிகளில் போதிய மொழித்திறன் கொண்ட வழிகாட்டிகள் இல்லாததும் ஒரு குறைபாடாகவே நீடிக்கிறது.
இலங்கை சுற்றுலாத்துறையை மேலும் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கு சில மேலதிக ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். கட்டண வாகனங்களுக்கு மீட்டர் கட்டண முறையைக் கட்டாயமாக்குதல் அல்லது செயலி அடிப்படையிலான போக்குவரத்துச் சேவைகளை நாடு முழுவதும் விரிவாக்குவது, நியாயமற்ற கட்டண வசூலைத் தடுக்கும். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘சுற்றுலாப் பொலிஸ்’ பிரிவைப் பலப்படுத்துவதோடு, பிரத்தியேக உதவி எண்களையும் அமைத்தல் வேண்டும். சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, கழிவு மேலாண்மையைச் சீரமைப்பதுடன், சூழல் நட்புச் சுற்றுலாவை ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், ஆயுர்வேத மற்றும் யோகா அடிப்படையிலான மருத்துவச் சுற்றுலா, சாகச விளையாட்டுக்கள் மற்றும் சர்வதேச மாநாடுகளை நடத்தும் வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பல்வேறு தரப்பட்ட பயணிகளையும் ஈர்க்க முடியும்.




