- 51 பேர் பலி, 5000 பேர் இடம்பெயர்வு
- நிலநடுக்கத்தின் பின் 341 அதிர்வுகள் பதிவு
இந்தோனேசியாவின் புளோரஸ் தீவை நேற்று முன்தினம் 7.7 ரிக்டர் அளவிலான ஆழமற்ற நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து 341 பின் அதிர்வுகள் பதிவானதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ முகவரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கத்தினால் 51 பேர் உயிரிழந்ததோடு 5000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மீட்புக் குழுவினர் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளைத் தோண்டி, உடல்களையும், உயிர் பிழைத்திருக்கக் கூடியவர்களையும் தேடும் பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் அந்த முகவரகம் கூறியுள்ளது.
இது தொடர்பில் அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், இந்நிலநடுக்கத்தினால் 1,300 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன, அவற்றில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, சுகாதார வசதிகள், பாடசாலைகள், அரச அலுவலகங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன.
இந்நில நடுக்கத்தையும் அதனைத் தொடர்ந்த அதிர்வுகளையும் மேற்கே பீமா வரையும் வசிப்பவர்கள் உணர்ந்துள்ளனர். நிலநடுக்கத்தினால் மங்காராய் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக விளங்குவதோடு அங்கு 24 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தரவுகள் தெரிவிக்கின்றன,
அதேநேரம் கிழக்கு மங்காராய் மாகாணத்தில் 17 இறப்புகளும், சிக்கா மாகாணத்தில் மூன்று இறப்புகளும், மேலும் ங்காடா, எண்டே மற்றும் மேற்கு மங்காராய் மாகாணங்களில் தலா ஒரு இறப்பும் பதிவாகியுள்ளன.
சிக்காவில் 3,356 பேர் இடம்பெயர்ந்துள்ள அதேநேரம் மங்காராயில் இருந்து 2,078 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
சி.சி.என், பி.பி.சி




