இலங்கையின் சுகாதாரத் துறையில் மிகவும் சக்திவாய்ந்த அடித்தளமாகத் திகழும் ‘சமூக சுகாதார சேவை’ (Community Health Service) தனது 100 ஆண்டுகாலப் பயணத்தைச் சாதனைகளுடன் பூர்த்திசெய்கிறது. பொதுச் சுகாதார அலுவலர்களின் வழிகாட்டலில் இயங்கும் ‘சுகாதார மருத்துவ அதிகாரி’ அலுவலகக் கட்டமைப்பு, இன்று நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் விரிவடைந்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தி வருகிறது.
1926 ஆம் ஆண்டு களுத்துறைப் பகுதியில் ஆசியாவின் முதலாவது ‘சுகாதார அலகு’ (Health Unit) எனத் தொடங்கப்பட்ட இச்சேவை, இன்று நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடையும் அளவுக்கு மாபெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
சமூக அடிப்படையிலான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் பயனாக, இலங்கையில் டெங்கு நோய் இறப்பு விகிதம் 0.05% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது உலக அளவிலேயே மிகக் குறைந்த அளவீடுகளில் ஒன்றாகும். எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் டெங்கு இறப்புகளற்ற இலங்கையை உருவாக்குவதே இதன் முதன்மை இலக்காகும்.
தொற்றுநோய் தடுப்புடன் மட்டுமன்றி, மனநல மேம்பாடு, தற்கொலைத் தடுப்பு, பாடசாலை மற்றும் குடும்ப நலன், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுகாதாரச் சவால்களை எதிர்கொள்ளுதல், தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை உறுதிசெய்தல் எனப் பரந்த அளவில் இச்சேவை செயலாற்றுகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றாண்டு நிறைவு விழா நேற்று ஜூலை 21அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. இதன் 100 ஆண்டுகாலப் பயணத்தை விளக்கும் சுகாதாரக் கண்காட்சியும் திறக்கப்படவுள்ளது.
இலங்கை சமூக வைத்தியர்கள் கல்லூரியின் தலைவர் டொக்டர் விந்தியா குமாரபேலி குறிப்பிடுகையில், இக்கொண்டாட்டங்களின் முக்கிய நோக்கமே மக்களிடையே ‘சமூக நலன் மற்றும் ஆரோக்கியம்’ குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிப்பதே எனக் கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, ஜூலை 22 முதல் 24 வரை கொழும்பில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் உலக சுகாதார அமைப்பு, உலக வங்கி, உலக உணவுத் திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் நிபுணர்களும் உள்ளூர் சுகாதார வல்லுநர்களும் பங்கேற்கின்றனர்.
கடந்த நூறாண்டுகளில் பெற்ற வெற்றியைக் கடந்து, நவீன உலகளாவிய மருத்துவத் தொழில்நுட்பங்களை இலங்கை சமூக சுகாதாரத் துறையில் ஒருங்கிணைப்பதே எதிர்காலத்திற்கான பிரதான சவாலாகவும் தேவையாகவும் அமைகிறது.
எஸ்.அபிலாஷினி…
திறந்த பல்கலைக்கழகம்




