பறிபோன நிலமும் ஓயாத கண்ணீரும்!

7 Min Read

ஒரு மனிதனுக்கு அவன் பிறந்த மண்ணும், வாழ்ந்த வீடும் தரும் நிம்மதியும் பாதுகாப்பும் வேறு எதுவும் தந்துவிடாது. அதனால்தான் “சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா … என்ற திரைப்பட பாடல் வரிகளை நம்மை அறியாமலேயே நாங்கள் முணுமுணுக்கின்றோம். சொந்த ஊர் திரும்ப வேண்டும் சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்ற ஏக்கம் கிராமப்புற வாழ்வின் அழகியலை விரும்பும் அனைவருக்கும் சொந்தமானது. தங்கள் சொந்த ஊருக்கும் வீட்டுக்கும் திரும்ப வேண்டும் என்று 36 வருடங்கள் கடந்தும் போராடி வருகின்றனர் யாழ்ப்பாணம், வலி. வடக்கை சேர்ந்த மக்கள். உள்நாட்டு யுத்தம் ஆரம்பமான போது1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் வலி. வடக்கில் சொந்த இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த மக்கள் வெளியேறிய பின்னர் அது உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னரான காலப் பகுதியில் யுத்தம் தீவிரமடைந்து, அந்த மக்கள் ஊர் ஊராக இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களிலும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தனர். உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவுக்கு வந்தது. வடக்கின் பல பகுதிகளில் இருந்தும் வெளியேறிய மக்கள் கட்டம் கட்டமாக தமது சொந்த இடங்களில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறான நிலையில் வலி. வடக்கு மக்களும் தமது சொந்த இடங்களுக்கு மீளத் திரும்ப வேண்டும் எனக் கோரி வந்தனர். அவர்களின் மீள் குடியேற்றம் தாமதப்பட்டது. அதனால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி தம்மை தமது சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்ற வேண்டும் எனக் கோரினார்கள். மக்களின் போராட்டங்களின் பயனாக கட்டம் கட்டமாக மீள் குடியேற்றம் சாத்தியமானது. அவ்வாறான நிலையில் 2013ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி வலி. வடக்கில் 6ஆயிரத்து 317 ஏக்கர் காணிகளை பொதுத் தேவைக்காக சுவீகரிப்பதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அதனால் முற்று முழுதாக அப்பகுதி காணிகள் சுவீகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மக்கள் வீதியில் இறங்கி போராடினார்கள். பாராளுமன்றில் தமிழ் அரசியல்வாதிகள் குரல் கொடுத்தனர். காணிகள் சுவீகரிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட காணி உரிமையாளர்கள் சுமார் 2 ஆயிரம் பேரைத் திரட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து உச்ச நீதிமன்றில் காணி சுவீகரிப்பு வர்த்தமானி மீளப் பெற வேண்டும் எனக் கோரி வழக்குத் தொடர்ந்தனர். அவ்வாறான நிலையில், ” மக்களின் காணி மக்களுக்கே” என்ற தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதிக்கமைய வலி. வடக்கு மக்கள் தமது வாக்குகளை அள்ளி வழங்கி இருந்தனர். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து சில மாதங்களில் பலாலி வீதியில், உயர் பாதுகாப்பு வலயம் ஊடாகச் செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் நீளமான வீதியை சுமார் 36 வருடங்களின் பின்னர் சில கட்டுப்பாடுகளுடன் திறந்து விட்டனர். அத்துடன் இது வரையில் சுமார் 61 ஏக்கர் காணி யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது. ஏனைய காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமாக இருக்கின்ற போதிலும், கால தாமதங்கள் ஏற்படுவதனால், காணி உரிமையாளர்கள் தற்போது போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், மயிலிட்டி மக்கள், பிரதி வெள்ளிக்கிழமைகள் தோறும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை 19ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர். பலாலி மக்கள், பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையுடன் 11ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதேபோன்று மயிலிட்டி மக்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். இவ்வாறான நிலைமையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டக் கூட்டத்தில், தனியார் காணிகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு பணித்துள்ளார். அது மாத்திரமின்றி, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்குத் தேவையான காணிகளை சுவீகரிக்கும் போது, காணி உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணங்களும் இழப்பீடுகளும் வழங்குமாறும் பணித்துள்ளார்.

இன்றும் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. காணிகளை அளவீடு செய்யாமல் அவற்றை சுவீகரிக்க முடியாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. சட்ட ஏற்பாடுகளின்படி, காணிகளை அளவீடு செய்வதற்கு நில உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே அறிவித்து அவர்களின் சம்மதத்தைப் பெற வேண்டும். ஆனால், காணிகளை அளவீடு செய்ய முயன்ற போதெல்லாம் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அளவீட்டுப் பணிகளை முன்னெடுக்க முடியாமல் போனது. இதன் காரணமாக, காணிகளை சட்டரீதியாக சுவீகரிப்பதிலும் முடக்கம் ஏற்பட்டது.

இதனால், வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை சட்டப்படி சுவீகரிக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, அவற்றுக்கு ‘தேசிய பாதுகாப்பு’ என்ற முத்திரை குத்தப்பட்டது. அதனடிப்படையில், அப்பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தி முப்படைகளும் தம் வசப்படுத்திக் கொண்டன.

பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, சுவீகரிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டன. அதன்படி, மொத்தம் கையகப்படுத்தப்பட்ட 6,317 ஏக்கர் காணிகளில் இதுவரை சுமார் 4,283 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் சுமார் 2,034 ஏக்கர் காணிகள் மட்டுமே மேலும் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன.

பலாலி விமான நிலைய விரிவாக்கத்திற்காக காணிகள் சுவீகரிக்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பான கலந்தரையாடல் ஒன்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நில உரிமையாளர்களுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட சத்தியக் கடதாசியில், “அனைத்து காணிகளையும் ‘LOT – 01’ எனக் குறிப்பிட்டு அவற்றுக்கு இழப்பீடு வழங்குதல்” என்றும், குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகை எதையும் சுட்டிக்காட்டாமல் “வழங்கப்படும் இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளச் சம்மதம்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் நில உரிமையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியதோடு, அக்கூட்டமும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இது குறித்து யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

“அனைத்து காணிகளையும் ‘LOT – 1’ எனக் குறிப்பிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறுவது முற்றிலும் தவறானது. சுவீகரிக்கப்படவுள்ள காணிகளில் மக்கள் 2022ஆம் ஆண்டு வரை வசிக்க முடியாத சூழல் இருந்ததால், அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு.

மேலும், 2022ஆம் ஆண்டிலேயே காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டது. எனவே, 2022ஆம் ஆண்டில் அக்காணிகளுக்கு நிலவிய சந்தைப் பெறுமதியைக் கணக்கிட்டு, அதிலிருந்து இழப்பீட்டுத் தொகை இறுதியாக வழங்கப்படும் ஆண்டு வரையிலான வட்டியையும் சேர்த்து வழங்க வேண்டும் என்றே ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையிலேயே காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

எனினும், அன்றைய கூட்டத்தில் அதிகாரிகள் ஏன் அவ்வாறான ஒரு சத்தியக் கடதாசியை வழங்கி கையொப்பம் பெற முயன்றார்கள் என்பது தெரியவில்லை. சில அரச அதிகாரிகளின் அசமந்தப்போக்கையே இது காட்டுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டார். அதேவேளை அன்றைய ஊடக சந்திப்பின் போது, போக்குவரத்து , நெடுஞ்சாலை துறை அமைச்சர் பிமல் ரத்னாயக்க கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய வீதியின் கிழக்குப் பகுதியில் தற்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வீடுகளை அமைத்து நிரந்தரமாகக் குடியேறுவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் பலாலி கிழக்கில் பெருமளவான காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை வசாவிளான் பகுதியில் அமைந்துள்ள காணிகளில் பாதுகாப்புத் தேவைகளுக்கு அத்தியாவசியமான காணிகளைத் தவிர்ந்த ஏனைய காணிகளை மீள வழங்குவது தொடர்பிலும், நிரந்தரமாகத் தேவைப்படும் காணிகளுக்குப் பொருத்தமான தற்போதைய மதிப்பின் படி இழப்பீட்டை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்தார். செப்டெம்பர் மாதமளவில், ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி வருகையின் போதோ, அல்லது அதற்கு முன்னரோ, வலி. வடக்கில் பெருமளவான காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

இதேவேளை, வலிகாமம் வடக்கு பகுதியில் காணிகளைச் சுவீகரிப்பதற்காக 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 4,000 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டு, மக்கள் அவற்றில் குடியேறியுள்ளனர்.

எனினும், இது முழுமையான சட்டபூர்வமான காணி விடுவிப்பு அல்ல என்றும், மக்கள் வெறும் குடியேற்றத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார். “குறிப்பிட்ட காணிகள் இன்றும் வர்த்தமானி அறிவித்தலின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகளாகவே தொடர்கின்றன. அதனாலேயே அந்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீளப் பெற வலியுறுத்துகிறோம்” என்றும் அவர் தெரிவித்திருந்தார். எனவே, மக்களின் காணிகளைப் பகுதி பகுதியாக விடுவிப்பதுடன் நிறுத்தாமல், 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட காணி சுவீகரிப்பு வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் முற்றாக இரத்து செய்ய வேண்டும் என்பதே மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்வது ஒரு சமூகத்திற்கு வழங்கப்படும் மிகப்பெரும் தண்டனையாகும். பத்தாண்டு காலப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும், தமது வீடுகளும் வாழ்வாதார நிலங்களும் இராணுவ முகாம்களாகவும் உயர் பாதுகாப்பு வலயங்களாகவும் இருப்பதை எண்ணி வேதனையில் வாழும் வலிகாமம் வடக்கு மக்களின் கண்ணீருக்கு இந்த அரசாங்கம் நிரந்தரத் தீர்வு தரும் என்ற நம்பிக்கையை ஜனாதிபதியின் செயற்பாடுகள் கட்டியம் கூறுகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *