தெற்காசியாவில் சீனாவின் விரிவாக்கமும் இந்தியாவின் மூலோபாயமும்.

4 Min Read

இன்றைய புவிசார் அரசியலில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியங்கள் வல்லரசுகளின் முதன்மை ஆதிக்கக் களங்களாக உருவெடுத்துள்ளன. சீனா தன் அசுரப் பொருளாதாரப் பலத்தையும் இராணுவ வலிமையையும் மூலதனமாகக் கொண்டு, ‘பட்டுப் பாதைத் திட்டம்’ (Belt and Road Initiative) மற்றும் ‘முத்து மாலைத் தத்துவம்’ (String of Pearls) என்ற பிராந்தியக் கோட்பாடுகளின் மூலம் தெற்காசியாவிலும் இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் தனது ஆதிக்கத்தை வேகமாகக் கட்டமைத்து வருகிறது.

இலங்கையின் ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், பாகிஸ்தானின் குவாதர் துறைமுகம், மியான்மர் மற்றும் பங்களாதேஷில் மேற்கொள்ளப்படும் பிரம்மாண்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஆகியவை சீனாவின் இந்த விரிவாக்கத்திற்குச் சிறந்த சான்றுகளாகும்.

பாரம்பரியமாகத் தனது செல்வாக்கிற்கு உட்பட்ட பகுதியாகக் கருதப்படும் பிராந்தியத்தில் சீனாவின் இந்த அதிரடி நகர்வுகள், இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கும் கடல்சார் வர்த்தகப் பாதைகளுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளன. இச்சவாலை எதிர்கொள்வதற்கு இந்தியா பல மூலோபாயத் திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது.

இந்தியாவின் மூலோபாயம்
சீனாவின் பொருளாதாரப் பலத்தைச் சமாளிக்க இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் இரு முக்கியத் திட்டங்களை நிலைநிறுத்தியுள்ளது. இதில் முதலாவது, ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ (Neighborhood First) என்ற திட்டமாகும். தெற்காசிய அண்டை நாடுகளுடன் நிலவும் வரலாற்று ரீதியான நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும், அவசர பொருளாதார நெருக்கடிக் காலங்களின் போது, உடனடி நிதியுதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு நிவாரணங்களை வழங்கவும் இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது.

இரண்டாவது, ‘கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை’ (Act East Policy). தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வெறும் வர்த்தக உறவோடு நின்றுவிடாமல், பாதுகாப்பு, கடல்சார் நுட்பங்கள் மற்றும் கலாச்சாரத் தொடர்புகளை ஆழமாக மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பை (ASEAN) தனது மையப்புள்ளியாகக் கொண்டு, ஆசிய-பசிபிக் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியங்களுடன் ஆழமான பொருளாதார, மூலோபாயத் தொடர்புகளைக் கட்டியெழுப்புவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது.

முத்து மாலைக்கு’ எதிர்வினையாக ‘வைர மாலை’
சீனாவின் கடல்சார் கொள்கையான ‘முத்து மாலை’ (String of Pearls) திட்டத்தை எதிர்கொள்ள இந்தியா ‘வைர மாலை’ (Necklace of Diamonds) என்ற பதில் மூலோபாயத்தைக் கையாண்டு வருகிறது. இதன்கீழ், இந்தியப் பெருங்கடலிலும் அதற்கு அப்பாலும் உள்ள முக்கிய மூலோபாயத் துறைமுகங்களில் இந்தியா தனது இருப்பை உறுதி செய்துள்ளது.

ஈரானின் சபஹார் துறைமுகம் மூலம் பாகிஸ்தானைத் தவிர்த்து மத்திய ஆசியாவை அடையும் பாதையை இந்தியா உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல், மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ள இந்தோனேசியாவின் சாபாங் துறைமுகம் மற்றும் ஓமானின் துக்ம் துறைமுகம் (Port of Duqm) ஆகியவற்றில் இந்தியக் கடற்படையின் கண்காணிப்பை வலுப்படுத்த தளங்களைப் பெற்றுள்ளது.

இதனுடன் சேர்த்து, “பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி” என்ற SAGAR தொலைநோக்கு திட்டத்தின் கீழ், மாலைதீவு, மொரிஷியஸ், சிஷெல்ஸ் போன்ற தீவு நாடுகளுக்குக் கடற்படை கண்காணிப்புச் சாதனங்கள் மற்றும் ரேடார் அமைப்புகளை இந்தியா வழங்கித் தன் கடல்சார் அரணை வலுப்படுத்தி வருகிறது.

‘கடன் வலை’அற்ற மாற்று திட்டங்கள்
சீனாவின் பட்டுப் பாதைத் திட்டங்கள் பல வளர்ந்து வரும் நாடுகளைக் கடன் வலையில் வீழ்த்துவதாகப் சர்வதேச அளவில் விமர்சிக்கப்படும் சூழலில், இந்தியா வெளிப்படையான மற்றும் கடன் சுமையற்ற மாற்று உள்கட்டமைப்புத் திட்டங்களை முன்வைக்கிறது.

இந்தியாவின் கொல்கத்தாவை மியான்மரின் சிட்வே துறைமுகத்துடன் இணைக்கும் ‘கலாடன் பன்முகப் போக்குவரத்துத் திட்டம்’ வடகிழக்கு இந்திய மாநிலங்களுக்கான பாதுகாப்புப் பாதையை எளிதாக்குகிறது. அதேபோல், தரைவழியாகத் தென்கிழக்கு ஆசியாவை இணைக்கும் ‘இந்தியா-மியன்மhர்-தாய்லாந்து முப்பக்க நெடுஞ்சாலை’ வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் தலையீடற்ற பிராந்தியப் பொருளாதார வளர்ச்சிக்காக BIMSTEC மற்றும் BBIN (Bangladesh, Bhutan, India, and Nepal Initiative) போன்ற பிராந்திய கூட்டமைப்புகளை இந்தியா தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.

பன்முக சீரமைப்பும் சர்வதேசக் கூட்டணிகளும்
பாரம்பரியமாக அணிசேராக் கொள்கையைப் பின்பற்றி வந்த இந்தியா, தற்போதைய புவிசார் அரசியல் சூழலுக்கு ஏற்ப ‘பன்முக சீரமைப்பு’ (Multi-alignment) முறையைக் கையாண்டு வருகிறது. எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் அதிகாரப்பூர்வமாக இணையாமல், அதேவேளையில் சீனாவிற்கு எதிரான வல்லரசுகளுடன் மூலோபாயப் பங்கான்மையை இந்தியா வலுப்படுத்தி வருகிறது.

இதன் முக்கிய அங்கமாக, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்த ‘குவாட்’ (Quad) கூட்டமைப்பு செயல்படுகிறது. இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சட்டத்திற்கு உட்பட்ட சுதந்திரமான கடல்சார் அமைப்பை வலியுறுத்துகிறது. தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க, ASEAN அமைப்பின் முதன்மைப் பங்கை இந்தியா ஆதரிப்பதோடு, தன் ‘இந்தோ-பசிபிக் கடல்சார் முன்முயற்சி’ மூலமும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

இந்தியா எதிர்கொள்ளும் சவால்களும் இலக்கும்
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் விரிவாக்கம் இந்தியாவுக்குக் கடுமையான பாதுகாப்பு மற்றும் மூலோபாயச் சவாலாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், இதனை வெறும் இராணுவ மோதலாக அணுகாமல், பொருளாதார மாற்று வழிகள், கடல்சார் கூட்டணிகள், தடையற்ற வர்த்தகப் பாதைகள் மற்றும் மென்சக்தி ராஜதந்திரம் (Soft Power) ஆகியவற்றின் மூலம் இந்தியா திறம்படக் கையாண்டு வருகிறது. பிராந்தியத்தில் எந்தவொரு தனிநாட்டின் ஒருமுக ஆதிக்கமும் உருவாவதைத் தடுத்து, அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட பலதுருவ இந்தோ-பசிபிக் கட்டமைப்பை உருவாக்குவதே இந்தியாவின் முதன்மை இலக்காகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *