இலங்கையின் டிஜிட்டல் துறையின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தி, 2030 ஆம் ஆண்டளவில் டிஜிட்டல் ஏற்றுமதி வருமானத்தை 5 பில்லியன் டொலர்களாக உயர்த்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள மூலோபாய வரைபடத்தை மீளாய்வு செய்வதற்கும், அது குறித்து தொழிற்துறையினரிடையே இணக்கத்தை உருவாக்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “The Road to US$5 Billion” தேசிய செயலமர்வு நேற்று (31) கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்றது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் GovTech Sri Lanka ஆகியவை உலக வங்கிக் குழுமத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தன.

செயலமர்வின் ஆரம்ப உரைகள், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் GovTech Sri Lanka தலைவர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் IFC இன் முதன்மைக் கள அதிகாரி விக்டர் அந்தோணிப்பிள்ளை ஆகியோரால் நிகழ்த்தப்பட்டன.
உலக வங்கிக் குழுமத்தின் தொழில்நுட்ப உதவியின் கீழ், KPMG நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆலோசகர்களால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை மற்றும் முன்மொழியப்பட்ட மூலோபாய வரைபடம் ஆகியவை இந்நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்டன. டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, GovTech Sri Lanka மற்றும் தொழில்துறை அபிவிருத்திக்குழு ஆகியவற்றின் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்ட இந்த வரைபடம் தொடர்பில், தொழில் துறையினரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதே இந்த செயலமர்வின் முக்கிய நோக்கமாகும்.
மனித வளங்கள் மற்றும் எதிர்காலத்திற்குப் பொருத்தமான திறன் அபிவிருத்தி, புத்தாக்கம் மற்றும் சுயாதீன தொழில் நிபுணர்களை வலுப்படுத்தல், உலகளாவிய சந்தைப் பிரவேசம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி அத்துடன் நிலைபேறான வளர்ச்சிக்கு அவசியமான கொள்கைகள், முதலீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளை மையமாகக் கொண்டு குழு கலந்துரையாடல் அமர்வும் இங்கு இடம்பெற்றன.

அதன்போது, அறிக்கையின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை மீளாய்வு செய்வதற்கு மேலதிகமாக, அடையாளம் காணப்படாத இடைவெளிகள், புதிய ஆலோசனைகள், செயற்படுத்தும் முன்னுரிமைகள், நிறுவனப் பொறுப்புகள், முன்னேற்றத்தை அளவிடும் குறிகாட்டிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் நடைமுறைப் பங்களிப்பு குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.










