ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி சக்தியானது ஆட்சியை கைப்பற்றுமானால் இந்த நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியாது, முஸ்லிம்கள் வாழுகின்ற பிரதேசங்களில் கலாசாரம் சீரழிக்கப்படும் என்று பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்தார்கள்.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில் முஸ்லிம் பெண்களின் ஆடைச் சுதந்திரம் மற்றும் தனித்துவ உரிமைகள் தொடர்பான விவகாரங்கள் மிகத் தீவிரமாக அரசியலாக்கப்பட்டு வந்தது.
குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல் தலைமைகள், இந்த உணர்வு பூர்வமான விவகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் மத உணர்ச்சிகளைத் தூண்டுவதாகவும், தங்களது குறுகிய அரசியல் இலாபங்களுக்காகச் சமூகத்தைப் பிரித்தாளும் அருவருக்கத்தக்க அரசியலில் ஈடுபடுவதாகவும் பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அவை எல்லாவற்றுக்கும் தக்க பதிலடியாக, 2026 ஆம் ஆண்டிற்கான 42ஆவது தேசிய மீலாதுன் நபி விழா கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் “சகவாழ்வு, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை” (Coexistence, Brotherhood, and Unity) என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் அரச விழாவாக நடத்தப்பட்டமை உள்நாட்டு முஸ்லிம்களின் உள்ளங்களை மட்டுமல்லாது சர்வதேச முஸ்லிம் நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இவ்வாறான உணர்ச்சிவசப்பட்ட மற்றும் மதவாத ரீதியிலான கருத்துகள், பல்லின சமூகங்கள் வாழும் இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அருவருக்கத்தக்க அரசியல் உத்தி என்பதில் முஸ்லிம் சமூகமானது ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தெளிவடைந்து வருகின்றமை தற்போது வெளிப்படையாகியுள்ளது.
அத்தோடு, நாட்டின் சட்ட ஒழுங்கு மற்றும் கலாசார விழுமியங்களை மீறும் வகையில் NPP அரசாங்கமானது எந்தவொரு விடயத்திலும் செயற்படவில்லை என்பதால், கடந்த தேர்தல் காலத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்வைத்த கருத்துகள் எல்லாம் மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்டவை என்பதை தேசிய மீலாத்துன் நபி போன்ற நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன.
அமோக வரவேற்புக்கு மத்தியில் 42ஆவது மீலாதுன் நபி நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, நபிகள் நாயகம் அவர்களின் போதனையான ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பதை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் கடந்த காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது என்பதையும் வலியுறுத்தினார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, மீண்டும் எந்த வித்திலும் இனவாதத்திற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும், சர்வதேச ரீதியில் கௌரவத்திற்கும் அங்கீகாரத்திற்கும் பாத்திரமான ஒரு நாடாக இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் முடிந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக பொதுமக்களுக்குச் சட்டத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதும், நீதியை நிலை நாட்டுவதுடன், அதனை வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் தெரிவித்தார்.
அந்த வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) தரப்பினர் நிலையான கொள்கைவாதிகளாக அனைத்து மதத்தினதும் கலாசார உரிமைகளையும், சமத்துவத்தையும் பாதுகாப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வெற்றிகளுக்குப் பின்னரும், அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய ஒரு தேசிய நல்லிணக்க ஆட்சியைக் கொண்டு நடத்தும் பொறுப்புடனே NPP அரசாங்கம் மிகவும் பக்குவமாக செயற்திட்டங்களை முன்னோக்கி நகர்த்தி வருகின்றது என்பது ஜனாதிபதியின் மீலாத்துன் நபி நிகழ்வின் உரையிலிருந்து தெளிவாகியுள்ளது.
தேசிய நல்லிணக்கத்திற்கான புதிய அணுகுமுறை என்பது சிறுபான்மை மக்களை வெறும் வாக்கு வங்கியாகப் பார்க்காமல், நாட்டின் அனைத்து சமூகங்களையும் சமத்துவத்துடனும் மரியாதையுடனும் நடத்தும் புதிய அரசியல் கலாசாரத்தின் தொடக்கமாகப் பார்க்கப்பட வேண்டும்.
இனவாத அல்லது மதவாத ரீதியான கருத்துகளால் மக்களைப் பிரித்து அரசியல் செய்த தனித்துவ முஸ்லிம் தலைமைகளின் பிடியிலிருந்து மக்கள் தூரமாகி வருவதுடன், தேசிய ஒருமைப்பாட்டை நோக்கி முஸ்லிம் மக்கள் நகரத் தொடங்கியுள்ளனர் என்ற செய்தியை நீர் கொழும்பு தேசிய மீலாதுன் நபி நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளதுடன், பாரம்பரிய மற்றும் தனித்துவ முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் தெளிவுபடுத்தி உள்ளது.
இடதுசாரிக் கொள்கை மற்றும் கலாசார அரசியல் சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு சிறுபான்மை சமூகத்தின் மத மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு, அதன் கருப்பொருளை “சகவாழ்வு, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை” என முன்வைத்திருப்பதானது சமூகங்களுக்கு இடையிலான சந்தேகங்களையும், பயத்தையும் போக்க வழி வகுத்துள்ளது.
அதனால், அரசியலுக்காக மதவாதக் கருத்துகளை ஆயுதமாக பயன்படுத்த நினைக்கும் அல்லது பிரித்தாளும் தந்திரங்களை கச்சிதமாக மக்கள் மயப்படுத்திய முஸ்லிம் தலைமைகளை மெளனிக்கச் செய்துள்ள வரலாற்று நாளாகவும் அரசியல் அவதானிகளால் அன்றைய தினம் பார்க்கப்படுகின்றது.
தற்போதைய புதிய அரசியல் கலாசாரத்தில், கடந்த கால அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி போன்ற அழியா வடுக்களுக்கு பின்னர் வெறுப்புப் பேச்சுகளையும், இனவாத அரசியலை முன்னிறுத்தும் தலைவர்களையும் மக்கள் பகிரங்கமாகவே நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர்.
பேரினவாத மற்றும் குறுகிய இன அடையாள அரசியலுக்குப் பதிலாக, ஊழல் எதிர்ப்பு, பொருளாதார மீட்சி மற்றும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய பொதுவான தேசிய அரசியல் முன்னெடுப்புகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளதுடன், தற்கால இளைஞர்கள் சமூக வலைத்தளங்களூடாக உண்மை நிலையினை கண்டறியும் புதிய சமூகமாக உருவாகவும் தொடங்கியுள்ளார்கள்.
மேலும், மேடைகளில் பேசப்படும் உணர்ச்சிபூர்வமான அல்லது இன, மத முரண்பாடான பேச்சுகள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் கேள்விக்கும் உள்ளாக்கப்படுவதால், பழைய பாணியிலான பிரசாரங்களை மேற்கொள்ள சந்தர்ப்பவாத மற்றும் தனித்துவ அரசியல் தலைவர்கள் தயக்கம் காட்டத் தொடங்கியுள்ளார்கள்.
இன, மத அடிப்படையிலான மேடைப் பேச்சுகள் தேர்தல் காலத்தில் தற்காலிக வாக்குகளைப் பெற்றுத் தந்தாலும், அது நீண்டகால ரீதியில் சமூகப் பிரிவினையையும் நாட்டின் பாதுகாப்பற்ற தன்மையையுமே அதிகரிக்கும் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். அத்தோடு, சுயலாபத்துக்காக சிறுபான்மை சமூகத்தை அடகு வைக்கும் அரசியல் தலைவர்களையும் மக்கள் ஓரங்கட்டத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் இலங்கை போன்ற பல்லின, பல்சமய சமூகத்தில், வாக்கு வங்கிக்காக சிறுபான்மை அல்லது பெரும்பான்மை மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் பிரித்தாளும் அரசியலை மக்கள் தங்களின் பகுத்தறிவால் நிராகரிக்க வேண்டும் என்ற புதிய அரசியல் கலாசாரம் இளைஞர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
அதனால், தேர்தல் காலத்தில் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள அரசியல் இலாபங்களை மக்கள் புரிந்து கொள்ள தொடங்கியுள்ளமை ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள இன்னுமொரு மக்கள் அங்கீகாரமாகவே சிரேஷ்ட அரசியல்வாதிகளால் பார்க்கப்படுகின்றது.
ஆகவே, சாதி, மதம் மற்றும் இனத்தைக் காட்டி வாக்குகளைப் பெறும் முயற்சிகளுக்கு மக்கள் இனியும் இடம் கொடுக்க மாட்டார்கள். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் தவிர்க்கப்படும். அதனால், நாட்டின் நீண்டகால நலன் மற்றும் தங்களின் அன்றாட வாழ்வாதார முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு
வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை முன்னெடுக்கும் அரசியல் கலாசாரத்தை மக்கள் விடுதலை முன்னணி (JVP) உருவாக்கியுள்ளது என்பதே உண்மை.




