வவுனியா முதல்வர், சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்கம்: குற்றச்சாட்டுகளும் விசாரணைப் பின்னணியும்!

3 Min Read

வவுனியா மாநகர சபை முதல்வர் இ. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் அ. கிஷோர் ஆகியோரை பதவிகளிலிருந்து நீக்குவதற்கு வட மாகாண ஆளுநர் க. வேதநாயகன் அண்மையில் (கடந்த மாதம் 24ஆம் திகதி) நடவடிக்கை எடுத்திருந்தார். இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, வட பகுதியில் பல்வேறு தரப்பினரிடையே அரசியல் ரீதியான விவாதங்களும், கண்டன அறிக்கைகளும், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பதவி நீக்க நடவடிக்கை தன்னிச்சையானது அல்ல என்றும், ஓய்வுபெற்ற நீதிபதி அரியநாயகம் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னரே, இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக ஆளுநர் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி மன்றங்களின் சட்டதிட்டங்கள் மற்றும் நிர்வாக நடைமுறைகளை மீறியதாகக் கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த 2025 அக்டோபர் 14ஆம் திகதி வவுனியா மாநகர சபையின் ஆறு உறுப்பினர்கள் இணைந்து ஆளுநருக்கு சமர்ப்பித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவ்விசாரணை ஆரம்பமானது. அதில் பல முக்கிய விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள சபைக்குரித்தான காணியை வாடகைக்கு வழங்குவதில், உரிய அமைச்சரின் அனுமதி பெறப்படாமை மற்றும் சபை தீர்மானம் நிறைவேற்றப்படாமை.

அக்காணிகள் வாடகைக்கு விடப்பட்ட போது, அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ மதிப்பீடுகள் பெறப்படாமை.

திருநாவற்குளம் தூர்வாரல் திட்டத்தின் போது சபையின் முறையான அனுமதி பெறப்படாமை மற்றும் அதற்கான ஒப்பந்தத்தில் மாநகர ஆணையாளர் கையொப்பமிடாது, முதல்வர் மாத்திரம் கையொப்பமிட்டுள்ளமை.

தூர்வாரல் மூலம் அகழப்பட்ட மண், உரிய கனியவள அளவீடுகள் செய்யப்படாமல் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டமை என்பனவாகும்.

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் மீதான குற்றச்சாட்டுகளை பின்வருமாறு குறிப்பிடலாம்.

கடந்த 2026 ஜனவரி 20ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வின் போது, உள்ளூராட்சி ஆணையாளரின் உத்தியோகபூர்வ வழிகாட்டல் கடிதத்தை நிராகரித்து, சபையை தவறான வழியில் வழிநடத்தியமை. குறிப்பாக, குறிப்பிட்ட சில கட்டடக் கட்டுமானங்களுக்குக் கட்டட அனுமதி பெறத் தேவையில்லை எனக் கூறி சபைக்குத் தவறான விளக்கமளித்தமை என்பனவாகக் கூறப்படுகின்றது.

இந்த அதிரடிப் பதவி நீக்கத்தினை அடுத்து, சாவகச்சேரிப் பகுதியில் கடையடைப்பும், வவுனியாவில் “ஜனநாயகப் படுகொலை”, “மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளி” போன்ற வாசகங்கள் தாங்கிய சுலோகங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இவ்விடயம் குறித்து வெளியிட்ட அறிக்கையில், “இது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகள் மீதான தாக்குதல்” எனக் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த. சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட பல தமிழ் அரசியல் தலைவர்களும் இவ்வரசியல் நகர்வுக்கு எதிராகத் தமது கண்டனங்களை வெளியிட்டனர். இலங்கை வரலாற்றில் உள்ளூராட்சிப் பிரதிநிதிகள் மீது இவ்வாறான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில்லை என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும், கடந்த காலங்களில் முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸின் பதவிக்காலத்திலும் மன்னார் நகர சபை தவிசாளர் மீதான பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற வகையில், தமக்குரிய அதிகார எல்லைக்குள்ளும் சட்ட வரம்புகளுக்குள்ளும் நின்று செயலாற்ற வேண்டியது அவசியமாகிறது. அதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக உத்தியோகத்தர்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கருத்து முரண்பாடுகள் மற்றும் நாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகங்கள் பொது நிர்வாகக் கட்டமைப்பில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக நடுநிலையான சமூக ஆய்வாளர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

மக்களின் பிரதிநிதிகள் தவறிழைக்கும் பட்சத்தில், அவர்கள் மீதான சட்டபூர்வ விசாரணைகளைத் தடுப்பது ஆரோக்கியமான ஜனநாயக வழிமுறை ஆகாது. எனவே, அரசியல் கட்சிகளும், தமிழ் ஊடகவியலாளர்களும், ஆய்வாளர்களும் உணர்ச்சிபூர்வமான அரசியலுக்கு அப்பாற்பட்டு, உள்ளூராட்சி மன்றங்களின் தூய மற்றும் வெளிப்படையான நிர்வாகச் செயல்பாட்டை உறுதிப்படுத்த முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *