இலங்கையின் தற்போதைய அரச பொறிமுறையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான உயர் அதிகாரிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் முந்தைய ஆட்சிக்காலங்களில் நியமிக்கப்பட்டவர்களாவர். இவர்கள் நீண்டகாலமாகப் பழைய அதிகாரத்துவக் கட்டமைப்பிற்குள் பழகிப்போனவர்கள் என்ற போதிலும், நாட்டில் ஒரு முறையான முறைமை மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற அவாவில் இருந்தனர். அதன்படி, கீழ்நிலை ஊழியர்கள் பலர் தற்போதைய திசைகாட்டி அரசாங்கத்திற்கு ஆதரவாகத் தமது தபால் மூல வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். அதன் விளைவாகவே தபால் வாக்குகளில் அரசாங்கத்திற்கு அமோக வெற்றி கிட்டியது.
ஆயினும், அரச நிறுவனங்களின் பணிபுரியும் ஒரு சில தரப்பினர், இன்னமும் பழைய அரசியல் கலாசாரத்தின் எச்சசொச்சங்களைப் பாதுகாப்பதிலேயே கண்ணும்கருத்துமாய் இருக்கின்றனர். இதனைப் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவரின் மனநிலைக்கு ஒப்பிடலாம். பழைய முறைமையின் சுகபோகங்களுக்கு வசியப்பட்ட இவர்களுக்குப் புதிய அரசியல் கலாசாரம் ஒருவித ஒவ்வாமையையே ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, பழைய அரசியல் கலாசாரத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான திரைமறைவு வேலைகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள், அபிவிருத்திக் கருத்திட்டங்கள் அல்லது அமுல்படுத்த முனையும் சட்டமூலங்கள் ஆகியவற்றின் ஏதேனும் ஒரு பகுதியை மட்டும் கிள்ளியெடுத்து, பழைய அரசியல்வாதிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியை இத்தரப்பினர் செய்கின்றனர். அந்தத் தகவல்களின் பின்னணி அல்லது முழுமையான உள்ளடக்கத்தை ஆராயாமல், எதிரணியினர் அதனைத் திரிபுபடுத்தி மக்கள் மத்தியில் தற்காலிகப் பதற்றத்தையும் குழப்பத்தையும் விளைவிக்கின்றனர். எவ்வாறாயினும், விழிப்புணர்வுள்ள மக்களால் இத்தகைய அரசியல் பித்தலாட்டங்கள் இறுதியில் முறியடிக்கப்பட்டு விடுகின்றன.
இவ்வாறு அரசாங்கத்தின் முற்போக்கான நகர்வுகளைத் திரிபுபடுத்தி முட்டுக்கட்டை போடும் எதிரணியினரின் நாடகம் இன்று நேற்றல்ல, கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றது. கல்வித் துறையில் காத்திரமான சீர்திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் முயன்றபோது, எதிரணி அரசியல் செயற்பாட்டாளர்கள் அதனைத் தீங்கான ஒன்றாகவே சித்தரித்தனர். குறிப்பாக, இலங்கையின் தற்போதைய பிரதமரும் கல்வியமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நாகரிகமற்ற, அருவருக்கத்தக்க பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. புதிய பாடநூல்களின் அட்டைப்படத்தில் வரையப்பட்டிருந்த இயற்கை வானவில் ஓவியத்தைக் கூட, சமபாலுறவைத் திணிக்கும் முயற்சி என வக்கிரமாக வியாக்கியானம் செய்தனர். இத்தகைய எதிர்ப்புகளால் கல்விச் சீர்திருத்தம் தற்காலிகமாகப் பிற்போடப்பட்ட போது, அதன் உண்மையான தேவையை உணர்ந்த பொதுமக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினர். இதன் பலனாகவே, இச்சீர்திருத்தம் எதிர்காலத்தில் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதேபோன்ற ஒரு முட்டுக்கட்டைதான் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரத்திலும் அரங்கேறியது. அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட 200 ரூபா கொடுப்பனவானது பெருந்தோட்ட நிறுவனங்களுக்கே போய்ச்சேருகிறது என்றும், பொதுமக்களின் வரிப்பணத்தை எவ்வாறு தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கலாம் என்றும் கேள்வி எழுப்பினர். தாம் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும் அச்சுறுத்தினர். இத்தகைய மனிதாபிமானமற்ற போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த தோட்டத் தொழிலாளர்கள், எதிரணியினரின் அரசியலுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து, தேங்காய் உடைத்துத் சாபமிட்டனர். அத்தோடு, எதிரணியின் எதிர்ப்பு அடங்கிப்போனது.
மக்களுக்கான நலத்திட்டங்கள் மட்டுமன்றி, அரசியல்வாதிகளின் வரப்பிரசாதங்களைக் குறைக்கும் சட்டங்களை அரசாங்கம் கொண்டுவந்தபோதும் எதிரணி இதே பாணியில் செயற்பட்டது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அதீத வரப்பிரசாதங்களை ஒழித்துக் கட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, நாடு கொந்தளிக்கும் என்றும், உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து தம்மை வெளியேற்ற முற்பட்டால் கொழும்பு மாநகரையே ஸ்தம்பிக்க வைப்போம் என்றும் எச்சரித்தனர். ஆனால், மக்கள் ஆதரவு இல்லாததால் அவர்களின் மிரட்டல் மண்ணைக் கவ்வியது.
இதேபோன்றே, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய நீக்கச் சட்டமூலம், சுங்கச் சட்டமூலத் திருத்தங்கள் ஆகியவற்றின் போதும் அப்பட்டமான பொய்ப் பிரசாரங்கள் பரப்பப்பட்டன. அண்மையில் தித்வா இயற்கைப் பேரிடர் காலத்தின்போது, பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் சட்டம் ஒழுங்கைப் பேணவும் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தைக் கூட, ஒரு அடக்குமுறைச் சட்டமாகவே சித்தரிக்க முயன்றனர். இதற்குக் காரணம், கடந்த ஆட்சிக்காலங்களில் பழைய அரசியல்வாதிகள் இத்தகைய சட்டங்களை மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு பயன்படுத்தியிருந்தமையினாலாகும்.
இத்தகைய தொடர்ச்சியான முட்டுக்கட்டைகளின் அடுத்த கட்டமாகவே, தற்போது நீதித்துறைக்குள்ளும் பதற்றத்தை ஏற்படுத்த எதிரணியினர் முயன்று வருகின்றனர். குறிப்பாக, இலங்கையின் சகல நீதிபதிகளினதும் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பது குறித்து அரசாங்க மட்டத்தில் தற்சமயம் ஆரம்பகட்டக் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான எந்தவொரு உத்தியோகபூர்வ வரைபோ அல்லது சட்டமூலமோ இன்னும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. சுருக்கமாகக் கூறின், இதுகுறித்த முறையான சட்டவாக்க நடவடிக்கைகள் எதுவும் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை.
இவ்வாறானதொரு பின்னணியில், அந்தச் சட்டமூலத்தின் உள்ளடக்கம் என்னவென்று கூடத் தெரியாமல், எதிரணியினர் தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். தங்களின் இந்த எதிர்ப்பிற்கான முறையான மற்றும் தர்க்கரீதியான காரணத்தைக் கூட அவர்களால் பகிரங்கமாக முன்வைக்க முடியவில்லை. நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் இந்த யோசனைக்குக் கடுமையான எதிர்ப்பைக் காட்டுபவர்கள் யார் மற்றும் அதற்கான பின்னணி என்னவென்று ஆராய்ந்தால், நாம் ஊகித்த உண்மைகளே வெளிவருகின்றன. இந்தச் சட்ட மாற்றத்தை எதிர்ப்பவர்களில் பெரும்பாலானோர் கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்து, தற்போது மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளாவர். மேலும், இப்போராட்டத்தின் முன்னணியில் நிற்பவர்கள் பலர் பல்வேறு நிதி மோசடிகள், ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வருபவர்களாவர் என்பதே உண்மை.
குறிப்பாக, இப்போராட்டத்தின் முன்னணியில் நிற்கும் தயாசிறி ஜயசேகராவுக்கு எதிராக நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் கணக்கு வழக்குகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ரணில் – மைத்திரி கூட்டு ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ‘கோப்’ குழு அறிக்கையின் அடிக்குறிப்பில், பிரதிவாதிகளுக்குச் சாதகமாக மறுப்புத் தெரிவித்த விவகாரத்தில் அஜித் பி. பெரேரா சம்பந்தப்பட்டுள்ளார். மேலும், இந்த மோசடியுடன் தொடர்புடைய பிரதிவாதிகளுக்குச் சாதகமான வகையில் சுஜீவ சேனசிங்க ஒரு புத்தகத்தை எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவர்களே தற்போதைய நீதித்துறை சார்ந்த சீர்திருத்தங்களுக்குத் தடையாக நிற்கின்றனர்.
அதுபோல, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பொதுஜன பெரமுனவினவும், சட்டத்தின் உள்ளடக்கம் பற்றிய எவ்விதப் புரிதலுமின்றி, காழ்ப்புணர்ச்சி காரணமாக இதனை எதிர்க்கின்றனர். இவர்களில் பலருக்கு எதிராக நீதிமன்றங்களில் பாரிய ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தமக்குச் சாதகமற்ற நீதிபதிகள் நீடித்த காலம் பதவியில் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அன்டிஜன் இறக்குமதி விவகாரத்தில் நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கு சுமத்தப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வரை சென்று வந்தவரும் புதிய சட்ட மாற்றத்தைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்.
சுருக்கமாகக் கூறின், கடந்த காலங்களில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டு, தற்போது நீதிமன்றக் கூண்டுகளில் ஏறி நிற்கும் அரசியல்வாதிகளே நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிக்கும் யோசனைக்குத் தங்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். தங்களுக்கு எதிரான தீர்ப்புகள் வந்துவிடுமோ என்ற அச்சமே இவர்களை இவ்வாறு இயங்க வைக்கிறது. ஆனால், இத்தகைய சுயநல அரசியல் முட்டுக்கட்டைகளைத் தாண்டி, நாட்டுக்கும் மக்களுக்குமே சாதகமான சட்டங்களையும் திட்டங்களையும் தங்குதடையின்றி நடைமுறைப்படுத்துவதற்காகவே, இலங்கை மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்கிற பலமிக்க ஆணையை வழங்கியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.




