தோட்டத் தொழிலாளர்களும் நில உரிமையும்

3 Min Read

இலங்கையின் தோட்டத் தொழிலாளர்கள் என்ற மலையகத் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பல  தலைமுறைகளாக நாட்டில் வாழ்ந்துவரும் சமூகப்பிரிவாக இருந்தும் கூட, நில உரிமை இல்லாமல் வாழ்ந்து வருவது ஒரு வரலாற்றுச் சமூக புறமொதுக்கலாகவே காணப்படுகிறது. நில உரிமை என்பது சமூக நீதியின் அடிப்படை அடையாளமாக காணப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் இவர்கள் நில உரிமையின்றி வாழும் நிலை, சமூக  முன்னேற்றத்துக்கும் வாழ்வாதார பாதுகாப்புக்கும் மிகப்பெரிய தடையாகவே  உள்ளது. காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு  வரப்பட்ட மலையகத் தமிழர்கள், தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் கடுமையான  உழைப்புக்குள் தள்ளப்பட்டனர். ஆனால், இவர்களின் வாழ்க்கையை சீர்தூக்கும்  முக்கியமான உரிமையான நில உரிமை, அவர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை.  அவர்கள் குடியுரிமை, குடியிருப்பு, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை  உரிமைகளிலும் பின்தங்கியே காணப்பட்டனர்.

1972ஆம் ஆண்டு இலங்கையில்  பரந்த அளவிலான நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்  நோக்கம், நிலச் சுமை சமன்பாடு மற்றும் நிலக் குவிப்பை கட்டுப்படுத்துவதாக  இருந்தது. பெருந்தோட்ட காணிகள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டாலும்,  அந்த நிலங்களில் வாழும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் சட்ட ரீதியாக  புறக்கணிக்கப்பட்டன. சட்டத்தின் ஒரு முக்கியமான பிரிவின்படி,  “தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின்  உத்தியோகபூர்வ வீடுகள், வரிசை வீடுகள் (line rooms) விவசாய நில உச்சவரம்பை  கணிக்கும்போது கவனிக்கப்படக்கூடாது”, என குறிப்பிடப்பட்டது. இது,  இத்தொழிலாளர்கள் நில உரிமையிலிருந்து திட்டமிட்ட முறையில் விலக்கப்படுவதை  சட்ட ரீதியாக உறுதி செய்ததாகவே கருதப்படுகிறது. மேலும், இந்தச்  சட்டத்தின் ஊடாக  அவர்களுக்கு 20 பேர்ச்சஸ் நிலம் வழங்கப்படவேண்டும் எனக்  குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது நடைமுறைப்படுத்தப்படுவதில் பல  தெளிவின்மைகள் காணப்படுகின்றன.நில உரிமை தொடர்பாக அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக வாக்குறுதிகளை  வழங்கி வந்துள்ளார்கள். ஆனால் அவை பெரும்பாலும் “அமைச்சுப் பதவிகளுக்கான  அரசியல் நலன்களுக்கு உரிய வாக்கு வங்கியாகவே” மாறியுள்ளன. பலர் தேர்தல்  காலங்களில் நில உரிமையை வாக்குறுதியாக முன்வைத்து மக்களை நம்பச் செய்து  வாக்குகள் பெற்றும், தேர்தலுக்குப் பிறகு மறந்துவிடுகிறார்கள். இதை ஒரு  தொழிலாளியின் அனுபவம் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறது, “7 பேர்ச்சஸ்  தாரேன் என்று ஓட்டு கேட்டாங்க. ஆனா இன்னமும் அதையே கொடுக்கல.” (Young  Researchers Network, Field Notes April 2025). இது போன்ற நேரடி  அனுபவங்கள், தோட்ட மக்களின் மனக்கவலை மற்றும் அரசியல் மீதான  நம்பிக்கையின்மையை வெளிக்கொணர்கின்றன. இந்தச் சமூகத்தினர் இன்னமும் அரசியல்  வாக்குறுதிகளை நம்பிக்கையுடன் எதிர்நோக்கினாலும், அவை பெரும்பாலும்  நிறைவேறவில்லை என்பதுதான் உண்மை. மேலும், 1972 நிலச் சீர்திருத்தச் சட்டம்  தொடர்பான விழிப்புணர்வு, மக்களுக்கும் சில அரசியல்வாதிகளுக்கும் கூட  போதுமான அளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தலைமுறை  அரசியல்வாதிகள் சிலர், இந்த சட்டங்களை ஆழமாகப் புரிந்து கொள்ளாமலே, வெறும்  தேர்தல் பிரசாரக் கருவியாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்த நிலைமையை மாற்ற,  சமூக அமைப்புகளும், குடியுரிமை மற்றும் மனித உரிமை அமைப்புகளும் முக்கிய  பங்கு வகிக்க வேண்டும். மக்களுக்கு நில உரிமை குறித்து விழிப்புணர்வை  ஏற்படுத்தும் முயற்சிகள், சட்ட விளக்கங்கள், உரிமைகள் குறித்த  கருத்தரங்குகள் ஆகியவை அவசியமானவையாக காணப்படுகிறது. புதிய  சீர்திருத்தங்கள் தோட்ட மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட  வேண்டிய அவசியம் தற்போது மிகுதியாக இருக்கிறது. தொழிலாளர்கள் பல  தலைமுறைகளாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒத்துழைத்துக் கொண்டிருப்பதைப்  பொருட்படுத்தாமல், அவர்களுக்கு நில உரிமை வழங்கப்படாமல் இருப்பது ஒரு “சமூக  நீதிக்கே எதிரான செயல்” எனப் பார்க்கப்பட வேண்டும். 1972ஆம் ஆண்டில்  நடைமுறையில் வந்த நிலச் சீர்திருத்தச் சட்டம், தோட்ட மக்களின் வாழ்வை  மேம்படுத்தும் நோக்கத்துடன் இருந்தாலும், அதன் நடைமுறைப்படுத்தலில்  தோன்றும் புறக்கணிப்புகள், குழப்பங்கள் மற்றும் அரசியல் சுயநலங்கள் காரணமாக  அது முழுமையடையவில்லை. இன்றைய அரசியல் மற்றும் சமூக அமைப்புகள்,  இத்தொழிலாளர்களுக்கு நில உரிமையை மனித உரிமையாகவே நோக்கி, “மாற்றத்துக்கான  நடைமுறைகளை சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உருமாற்றம் செய்யும்  நேரம் இது”.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *