கீரிமலை புனிதப் பிரதேசம் அசுத்தமாக்கப்படும் அவலம்!

3 Min Read

  ரலாற்றுச் சிறப்பும் ஆன்மிக முக்கியத்துவமும் கொண்ட யாழ். கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகள் தற்போது கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களைக் குடியேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ‘நல்லிணக்கபுரம்’ கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கேட்பார் எவருமின்றி கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், அப்பகுதி மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதுடன், வரலாற்றுத் தலங்களின் புனிதத்தன்மையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாவிட்டபுரத்திலிருந்து கீரிமலை செல்லும் பாதையில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய காலத்தில் சுண்ணாம்புக்கற்கள் அகழப்பட்டதால் பாரிய குழிகள் உருவாகின. 1990ஆம் ஆண்டு போர்ச்சூழல் காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, நிலப்பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டன.

பின்னர் 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் அப்பகுதிகள் விடுவிக்கப்பட்ட போது, காணியற்ற மற்றும் தற்காலிக முகாம்களில் வசித்த மக்கள், அந்தப் பாரிய குழிகளை அண்டிய பகுதியில் கிராமம் அமைக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.

குடியிருப்பு அமைக்கப்பட்ட சில வருடங்களிலேயே அப்பகுதியில் உள்ள குழிகளுக்குள் பிளாஸ்டிக், இறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படத் தொடங்கின.

மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, தென்கொரிய நாட்டின் நிதி உதவியுடன் ‘சுகாதார நில நிரவகைத் திட்டம்’ என்ற பெயரில் கழிவுகளை நிரப்பி குழிகளை மூடும் திட்டம் முன்வைக்கப்பட்டது. இருப்பினும், 25 முதல் 30 வருடங்கள் எடுக்கும் இத்திட்டத்தால் துர்நாற்றமும் நோய்களும் பரவும் என அஞ்சி மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.   தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கழிவு கொட்டும் நடவடிக்கைகள் மீண்டும் வலி. வடக்கு, வலி. தெற்கு பிரதேச சபைகள் மற்றும் கடற்படையினரால் தொடங்கப்பட்டன.

நல்லிணக்கபுரம் கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின்படி, குடியிருப்புப் பகுதியின் முன்புறமாக தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதால் பின்வரும் பாரிய சிக்கல்கள் உருவாகியுள்ளன:

அதிக துர்நாற்றம், ஈக்களின் பெருக்கம் மற்றும் தூசுக்களால் உணவுகள் மாசடையும் அபாயம்.

வீடுகளுக்குள் மக்கள் வசிக்க முடியாத சூழல் நிலவுவதுடன், கர்ப்பிணிப் பெண்கள் சமைக்கவும் உணவருந்தவும் சிரமப்படுகின்றனர். மேலும், அப்பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், வாந்தி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இது குறித்து சுகாதாரப் பரிசோதகர், சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பிரதேச சபைக்கு பலமுறை புகாரளித்தும் எவ்வித நேரடி விசாரணையோ அல்லது நடவடிக்கையோ மேற்கொள்ளப்படவில்லை. கழிவுகள் கொட்டப்படும் பகுதிக்கு மிக அருகில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம், சித்தர்களின் சமாதி கோவில்கள் மற்றும் தேவாலயங்கள் அமைந்துள்ளதால், அப்பகுதியின் புனிதத்தன்மை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

கழிவு கொட்டப்படும் இடத்திற்கு அருகில் கடல் அமைந்திருப்பதால், மழைக்காலத்தில் கழிவுகள் கடலில் கலந்து பாரிய கடல்சார் சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் அபாயம் உள்ளது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பகுதியில் முதலீட்டு வலயம் அமைக்கும் திட்டங்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகையை முதலீட்டாளர்களுக்குக் கையளித்து சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டங்களுக்கும் இக்கழிவுப் பிரச்சினை பாரிய முட்டுக்கட்டையாக அமையும்.

மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, வலி. வடக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் களத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன், கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்றினர்.  அண்மையில் கழிவுகளை ஏற்றி வந்த கடற்படையினரின் டிப்பர் வாகனங்கள் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபையின் கழிவு வாகனங்கள் உறுப்பினர்களாலும் தவிசாளராலும் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன.

பூட்டப்பட்ட வாயில்களைத் தாண்டி மாற்றுப் பாதைகள் வழியாக கழிவு வாகனங்கள் நுழைவதைத் தடுக்க நிரந்தர வேலிகளை அமைக்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கீரிமலையில் குப்பை கொட்டுவதற்கு எதிராக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் சூழல் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலத் திட்டமிடலின்றி குடியிருப்பு மற்றும் புனிதப் பகுதிகளுக்கு அருகில் கழிவுகளைக் கொட்டுவது அப்பகுதி மக்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதோடு, எதிர்கால அபிவிருத்தியையும் பாதிக்கும். எனவே, நல்லிணக்கபுரம் மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலையின் புனிதத்தைப் பேணவும் சம்பந்தப்பட்ட உயர்மட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, கழிவுகள் கொட்டப்படுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *