செயற்கை நுண்ணறிவு: இந்தியாவின் AI தொழில்நுட்பப் புரட்சியும் நமக்கான பாடமும்!

4 Min Read

நெருப்பு, சக்கரம், மின்சாரம், இணையம் எனத் தொடர்ந்த மனித குலத்தின் பரிணாமப் பயணத்தில், தற்போதைய உலகின் அச்சாணியாக மாறியிருக்கிறது செயற்கை நுண்ணறிவு (AI). மேற்கத்திய நாடுகள் இதனைப் பெருநிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கும் ஒரு வணிகக் கருவியாகப் பார்த்துக்கொண்டிருக்க, நமது அண்டை நாடான இந்தியாவோ, இதனைச் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சமூகப் புரட்சிக்கான ஆயுதமாகக் கையிலெடுத்திருக்கிறது.
ஒரு வளரும் நாடாக, இலங்கையைச் சேர்ந்த நாம் இந்த மாற்றத்தை மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய தருணம் இது.

எண்களின் பாய்ச்சலும், தொலைநோக்குப் பார்வையும்

செயற்கை நுண்ணறிவு என்பது இன்று நான்காவது தொழிற்புரட்சியின் மையப்புள்ளி. இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தை உள்வாங்குவதில் இந்தியா உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சமீபத்திய போஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் (BCG) ஆய்வறிக்கை இதையே உறுதிப்படுத்துகிறது. AI தொழில்நுட்ப செயலாக்கத்தின் சர்வதேச சராசரி 26 சதவீதமாக இருக்கும்போது, இந்தியா அதனை விஞ்சி 30 சதவீதத்தை எட்டிப் பிடித்துள்ளது.

இது வெறும் எண்களின் பாய்ச்சல் அல்ல; ஒரு தேசத்தின் தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடு. இந்தத் தொழில்நுட்பப் பாய்ச்சலுக்கு, அரசாங்கத்தின் கொள்கை ரீதியான ஆதரவும் முக்கியக் காரணம். நிர்வாகச் செயல்பாடுகளில் தரவுகளையும் செயற்கை நுண்ணறிவையும் திறமையாகப் பயன்படுத்த வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அதேநேரம், “தொழில்நுட்பம் முடிவுகளை எடுக்க உதவலாம்; ஆனால் இறுதி முடிவெடுக்கும் இடத்தில் மனிதர்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும்” என்ற அவரின் அறிவுறுத்தல், தொழில்நுட்பத்தை மனிதக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

தரவுச் சுரங்கமும், ஏகபோகத்தை உடைக்கும் கட்டமைப்பும்

140 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா, இன்று வெறும் நுகர்வோர் சந்தை அல்ல; உலகின் மிகப்பெரிய தரவுச் சுரங்கம். அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஆதார், யு.பி.ஐ (UPI) போன்ற ‘டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புகள்’ (Digital Public Infrastructure) ஒட்டுமொத்த தெற்காசியாவிற்கே ஒரு சிறந்த முன்னுதாரணம். இந்த மாபெரும் தரவுகள்தான் இந்தியாவின் AI இயந்திரத்தை இயக்கும் பிரதான எரிபொருள்.

இத்தகைய சாதகமான சூழலைத் துல்லியமாகக் கணக்கிட்டே, ‘இந்தியா AI மிஷன்’ (IndiaAI Mission) என்ற பிரம்மாண்டமான திட்டத்தை இந்திய அரசு முன்னெடுத்துள்ளது.

‘’இந்தியா AI மிஷன்” திட்டம் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை வளர்க்கவும், அதன் பயன்பாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இந்திய அரசால் மார்ச் 2024 இல் தொடங்கப்பட்ட ₹10,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டுடன் கூடிய ஒரு முக்கியத் திட்டமாகும். இது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் செயல்படுகிறது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் ‘GPU உள்கட்டமைப்பு’. AI மாதிரிகளைப் பயிற்றுவிக்கத் தேவையான அதிவேக கம்ப்யூட்டிங் திறனை வெளிநாடுகளை நம்பியிராமல், உள்நாட்டிலேயே மானிய விலையில் வழங்குவதன் மூலம், பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகத்தை இந்தியா இதன் மூலம் உடைத்தெறிந்துள்ளது. இதனால், அங்குள்ள ஒரு சாதாரண ஸ்டார்ட்-அப் நிறுவனம் கூட உலகத் தரத்திலான AI ஆய்வுகளில் துணிந்து இறங்க முடிகிறது.

கண்ணாடி மாளிகைகளைத் தாண்டி…

தொழில்நுட்பம் என்பது பெருநகரங்களில் உள்ள கண்ணாடி மாளிகைகளுக்குள் முடங்கிவிடக் கூடாது என்பதில் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.

‘பியூச்சர்ஸ்கில்ஸ்’ (FutureSkills) திட்டத்தின் மூலம், இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் உள்ள கல்லூரிகளில்கூட அதிநவீன AI ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன. வெறும் தொழில்நுட்பப் பயனர்களாக இருந்த மாணவர்களை, புதிய AI மாதிரிகளை உருவாக்குபவர்களாக மாற்றும் இந்தப் பயணம் வெற்றிகரமானது.

இதன் பலன்கள் ஏற்கனவே அடித்தட்டு மக்களைச் சென்றடையத் தொடங்கிவிட்டன. கிராமப்புறங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட, நோய்களைத் துல்லியமாகக் கண்டறியும் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. விவசாயிகளின் விளைச்சலைப் பெருக்க வானிலை, மண் வளம் மற்றும் சந்தை விலையைப் பகுப்பாய்வு செய்யும் அமைப்புகள் கைகொடுக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, ‘பாஷினி’ (Bhashini) போன்ற திட்டங்கள் மொழித் தடைகளை சுக்குநூறாக உடைத்து, தாய்மொழியிலேயே தொழில்நுட்ப அறிவைச் சாமானியர்களுக்கும் கொண்டு சேர்க்கின்றன. பன்மொழி பேசும் சமூகமான நமக்கும் இத்தகைய திட்டங்கள் எவ்வளவு பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சவால்களும் அதற்கான தீர்வுகளும்

நிச்சயமாக, இது சவால்கள் இல்லாத பயணம் அல்ல. தொழில்நுட்பம் என்பது இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி. வேலைவாய்ப்புகளில் AI ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள், ‘டீப்ஃபேக்’ (Deepfake) போன்ற போலித் தகவல்கள், தரவுத் திருட்டு போன்ற அபாயங்களை இந்தியாவும் எதிர்கொள்ளவே செய்கிறது.
இவற்றைச் சமாளிக்க, புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்பத் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவதும், தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களை இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாக அங்கே மாறியுள்ளது.

நமக்கான பாடம் என்ன?

இன்று, இந்தியா வெறும் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யும் நாடாக இல்லை. “உலகிற்காக இந்தியாவில் உருவாகும் AI” என்ற முழக்கத்துடன், புதிய உலகின் விடிவெள்ளியாகப் பரிணமித்து வருகிறது.

பாக்கு நீரிணைக்கு அப்பால் நிகழும் இந்தத் தொழில்நுட்பப் பாய்ச்சல், வெறுமனே ஆச்சரியப்படுவதற்கு மட்டுமானதல்ல. ஒரு புதிய தொழில்நுட்பத்தை எப்படி ஆக்கபூர்வமாக, தற்சார்புடன், அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு செல்ல முடியும் என்பதை நமது அண்டை நாடு நமக்குச் செயல்முறையில் விளக்கிக் கொண்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியது, அந்தப் பாடங்களை உள்வாங்கி, நமது மண்ணுக்கேற்றவாறு, நமது நாட்டின் தொழில்நுட்பக் கொள்கைகளைத் தொலைநோக்குப் பார்வையுடன் வகுப்பதுதான்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *