முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டிருந்த ஊழல் வழக்கொன்று தொடர்பில் அவருக்கு இன்று (18) பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் அஸங்க எஸ். போதரகம, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை ஆராய்ந்த பின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
குண்டசாலை தொல்லியல் பகுதியிலிருந்து சந்திரவட்டக்கல் திருடப்பட்டமை மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக 6 ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்து, அவர்களை தமது தனிப்பட்ட பணிக்கு அமர்த்தியதோடு, அதற்கான கொடுப்பனவுகளை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊடாக வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கமைய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த விடயங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்பிற்கு அமைய அவர் வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




