இளம் இந்திய கிரிக்கெட் வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீதான நடத்தை மீறல் விவகாரங்களை கையாண்ட விதம் தொடர்பில் கேள்வி எழுப்பி இருக்கும் இந்திய முன்னாள் வீரர் சஞ்சே மஞ்ச்ரேகர், சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐ.சி.சி.) மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
‘அண்மையில் இந்திய ‘ஏ’ அணிக்காக வைபவ் செய்ததும், இப்போது ஜெய்ஸ்வால் செய்ததும்… இதுபோன்ற நடத்தைகளில் இருந்து அவர்களைத் தொடர்ந்து தப்பிக்க விட்டால், அதேபோன்ற நடத்தையை மீண்டும் மீண்டும் செய்வதற்கு அவர்களை நீங்களே பழக்கப்படுத்திவிடுவீர்கள்,’ என்று மஞ்ச்ரேகர் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்.
கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது மோதலில் ஈடுபட்ட ஜெய்ஸ்வால் மற்றும் அசித்த பெர்னாண்டோவுக்கு ஐ.சி.சி. போட்டிக் கட்டணத்தில் தலா 25 வீத அபராதமும் ஒரு தகுதி இழப்புப் புள்ளியையும் வழங்கிய நிலையிலே மஞ்ச்ரேகர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜெய்ஸ்வாலை பெர்னாண்டோ ஆட்டமிழக்கச் செய்த பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றது. ஐசிசியின் தகவலின்படி, ஜெய்ஸ்வால் பெர்னாண்டோவை நோக்கி நடந்து சென்றதுடன், இருவரும் வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டனர். பின்னர் அவர்களின் தலைகள் ஒன்றுடன் ஒன்று மோதின.
இரு வீரர்களும் தாங்கள் செய்த விதிமீறல்களை ஒப்புக்கொண்டு, விதிக்கப்பட்ட தண்டனைகளை ஏற்றுக்கொண்டனர். இதனால், முறையான விசாரணைகள் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடியபோது வைபவ் தொடர்பான ஒழுக்காற்று சம்பவத்தையும் மஞ்ச்ரேகர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இளம் வீரர்கள் இதுபோன்ற செயல்களுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த தண்டனைகளுடன் தொடர்ந்து தப்பிக்க அனுமதிப்பது, அதேபோன்ற நடத்தையை மீண்டும் செய்வதற்கு அவர்களை ஊக்குவிக்கக்கூடும் என்று அவர் வாதிட்டார்.
‘இது விளையாட்டுக்கு நல்லதல்ல. குறிப்பாக, அவர்களின் சொந்த எதிர்காலத்திற்கும் இது நல்லதல்ல,’ என்று மஞ்ச்ரேகர் கூறினார்.




