“மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்”

5 Min Read

இந்த அரசாங்கம் மக்களுக்குச் சிறந்த சேவையைத் தான் ஆற்றுகிறோம் என்றிருந்தால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் மூலம் அரசாங்கத்தின் மீது மக்களுக்குள்ள செல்வாக்கினை அறிந்துகொள்ள முடியும். விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர்கள், கைத்தொழிலாளர்கள் கூட மாகாண சபைத் தேர்தல் வரும் வரை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நாட்டின் புதிய பயணத்தின் புதிய பாதை, திருப்புமுனை ஐக்கிய மக்கள் சக்தி மூலமாகவே உருவாக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம விஜிதபுர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் பிரச்சினைகள் எண்ணற்ற அளவில் காணப்படுகின்ற போதிலும், அரசாங்கம் கனம் நீதிமன்றத்தின் கனம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க முயற்சிக்கின்றது. அரசாங்கத்திடம் மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில்கள் இல்லை. இந்நாட்டின் ஜனநாயகத்தை அழித்து, நீதிமன்றத்தின் சுதந்திரத்தை அழிக்கும் வேலையையே இந்த அரசாங்கம் செய்து வருகின்றது. நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டை பலவீனப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை அழிப்பதற்கே இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அரசாங்கம் நீதிமன்றத்தில் தலையிட்டு அழுத்தம் கொடுத்து ஜனநாயகத்தை அழித்து நாட்டில் தனிக் கட்சி ஆட்சியை ஸ்தாபிக்கவே முற்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

விவசாயச் சங்கம் முதல் சகல நிறுவனத்தினதும் அதிகாரத்தைக் கைப்பற்றி தனிக் கட்சி ஆட்சியை நாட்டில் ஸ்தாபிக்கவே இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. நீதிமன்றத்தின் சுதந்திரத்தை அழித்து கனம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க முற்படுவது இதனால்தான் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று எமது நாட்டில் வாழும் 220 இலட்சம் மக்கள் பல துன்பங்களிற்கும் சவால்களுக்கும் மத்தியில்தான் மிகவும் சிரமப்பட்டு தமது வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றனர். சமூகத்தில் உள்ள பெரும் பணக்காரர்கள், கோடீஸ்வரர்களைத் தவிர பெரும்பாலான மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் வாழ்கின்றனர். பல துயரங்களுக்கு மத்தியில்தான் சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். கடந்த மூன்று தேர்தல்களிலும் இந்நாட்டுப் பெரும்பான்மையான மக்கள் தெரிவு செய்த ஜே.வி.பி. அரசாங்கம் தொடர்ச்சியாக வாக்குறுதிகளை மீறி, மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் பொய் உரைக்கும், ஏமாற்றும், நாட்டு மக்களை ஏமாளிக்கும் அரசாமாகவே மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் விருது பெற்ற பொய்யாளர்களாக மாறியுள்ளது. இந்த பொய் சொல்லல், ஏமாற்றுதல் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற வேண்டும். அந்தளவுக்குப் பொய்யான, புளுகும், சுத்தப்பொய்யையே அரசாங்கம் பேசி வருகின்றது. இந்நாட்டின் வரலாற்றிலேயே இவ்வாறான ஒரு அரசாங்கம் உருவாகவில்லை. முறைமையில் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் வாக்களித்தாலும், உண்மையை விட பொய்யே வெற்றி பெற்றுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தற்போது கோதுமை மா ஒரு கிலோகிராம் 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாண் மற்றும் பேக்கரி தயாரிப்புகள் மற்றும் மா சார்ந்த தயாரிப்புகளுக்கு என்ன நடக்கும் என்று கேள்வி எழுகின்றது. இதனால் மக்கள் எடுக்கும் உணவு வகைகளுக்குப் பாரிய தாக்கம் ஏற்படும். இதனால் இந்நாட்டின் மக்கள் மேலும் துயரத்தின் பாதாளத்திற்கே தள்ளப்படுகின்றனர். சர்வதேச நிறுவனம் ஒன்று நாடுகளின் குறைந்தபட்ச ஊதியம் தொடர்பில் 130 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்திய கணக்கெடுப்பின்படி எமது நாடு 120 ஆவது இடத்தில் இருக்கின்றது. எமக்கு முன்னால் பாகிஸ்தான், நேபாளம், வங்களாதேசம் ஆகிய நாடுகள் இருக்கின்றன. தெற்காசிய நாடுகளில் எமது நாடு பின்னடைவில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டு மக்கள் வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச வருமானம், ஊதியம் ஆகியவை கீழ் மட்டத்தில் உள்ளதாக சர்வதேச ஆய்வுத் தரவுகள் கூறுகின்றன. எமது நாட்டின் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின்படி ஒரு நபர் 30 நாட்கள் வாழ்வதற்கு 17315 ரூபா போதுமானதாது என கூறுகின்றது. தனிநபர் ஒருவரால் 30 நாட்களுக்கு இத்தொகையைக் கொண்டு வாழ முடியுமா என மக்களிடம் கேள்வி எழுப்புகிறேன். தவறான இந்தத் தரவுகளின் அடிப்படையில்தான் அரசாங்கம் கொள்கைகளை வகுத்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று மக்கள் படும் வேதனையானது அரசாங்கத்திற்குப் புரியவில்லை. நாட்டின் 30-40% ஆன மக்கள் ஏழ்மையில் இருக்கின்றனர். இவர்களுக்கு வறுமையிலிருந்து மீள்வதற்கான தெளிவான முறையான வேலைத்திட்டம் இல்லை. தற்சமயம் அஸ்வெசும திட்டத்திற்குக் கூட ஆபத்து ஏற்பட்டுள்ளது. அஸ்வெசும வெட்டப்பட்டு வருகின்றன. இன்று ஒவ்வொரு துறையும் வீழ்ச்சியடைந்துள்ளன. இந்த அரசாங்கம் விவசாயிகள் முதல் சகல மக்களினதும் வாழ்வாதாரத்தையும் சீரழித்துள்ளது. அன்று நெல் அறுவடையின் போது ஒரு கிலோவிற்கு 150 ரூபா தருவதாகக் கூறினாலும், இன்று விவசாயிக்கு ஒரு கிலோ நெல்லிற்கு 17 ரூபா நட்டத்தை ஏற்படுத்தி 120 ரூபா விலையே வழங்கப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட ஒவ்வொரு துறையும் வீழ்ச்சியடைந்து போயுள்ளன. புற்றுநோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் 900 ரூபா ஊசி மருந்து கள்ளச் சந்தையில் 25000 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் இந்த ஊசி மருந்துகள் இல்லாமையினால் சுமார் 75000 நோயாளர்கள் இதனால் ஆபத்தான நிலையில் உள்ளனர். எல்லாவற்றிலும் மக்களின் வாழும் உரிமை அழிக்கப்பட்டுள்ளது. 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளிலும் இந்நாட்டின் மக்கள் ஏமாற்றப்பட்டனர். வளமான நாடு அழகான வாழ்க்கையை உருவாக்கித் தருவோம் எனக் கூறப்பட்டாலும் மக்களின் வாழ்க்கை வளம் பெறவில்லை. அபிமானமான வாழ்க்கையை வாழ்ந்த நபர்கள் இன்று கூலி வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பயிர் சேதமடைந்து நீர்ப்பாசன கலாச்சாரம் வீழ்ச்சியடைந்து விவசாயத் துறை முழுமையாக அழிந்துபோயுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அன்று ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பித்தாலும் இன்று அந்த ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. பல்லாயிரக்கணக்கான இளையோர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி வீதிக்கு இறங்கி வருகின்றனர். இதனால் எமது நாட்டிற்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கூடக் கிடைப்பதில்லை. எமது நாட்டிற்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முறையொன்று இல்லை. இதனால் எமது நாட்டுப் பிரஜைகளுக்கு வேலைவாய்ப்பில்லாமல் போகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. எதிர்க்கட்சியாக நாம் எப்போதும் நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவே முயற்சிக்கின்றது. சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக தேசிய வேலைத்திட்டம் எதுவும் இல்லையென்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *