அதிகாரத்தின் மிரட்டல்களுக்கு அடிபணியாத நீதி!

6 Min Read

இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அனைத்து நீதிபதிகளினதும் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது குறித்த அரசாங்கத்தின் தற்போதைய முன்னெடுப்பு, அரசியல் அரங்கிலும் மக்கள் மத்தியிலும் பெரும் விவாத அலைகளையும் அரசியல் அதிர்வுகளையும் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக, தற்போதைய 49 ஆவது பிரதம நீதியரசரான பிரீதி பத்மன் சூரசேனவின் பதவிக்காலம் இதன் மூலம் நீடிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியல் மற்றும் சமூகத் தரப்பினர் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் தங்களின் அரசியல் செல்வாக்கு, பண பலம், சமூக அந்தஸ்து மற்றும் அதிகாரத்தைக் காட்டி சட்டத்தின் பிடியிலிருந்து மிக இலகுவாகத் தப்பித்துவிடலாம் என எண்ணியிருந்த ஒரு கூட்டத்திற்குள் இந்தச் சட்ட நகர்வு தாளாத நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு நேர்மையான, தற்துணிவுள்ள நீதிபதி மிக நீண்ட காலம் பதவியில் நீடிப்பது தங்களின் எதிர்காலப் பிழைப்புக்கு உலைவைத்துவிடும் என்ற பயமே இந்தத் தரப்பினரின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது.

வயதெல்லை நீடிப்பு என்பது ஏதோவொரு தனிநபருக்காகவோ அல்லது தற்போதைய பிரதம நீதியரசருக்காகவோ மாத்திரம் கொண்டுவரப்படும் ஒரு சலுகை அல்ல; மாறாக, ஒட்டுமொத்த நீதிபதிகளுக்குமான ஒரு பொதுவான சட்ட நகர்வாகும்.

இதற்குக் காரணம், நீதியரசர் சூரசேன, தனது நீண்ட கால நீதித்துறைப் பயணத்தில் சட்ட ஒழுங்கையும், நீதியையும் எவ்வித பாரபட்சமுமின்றி, எத்தகைய மிரட்டல்களுக்கும் அடிபணியாமல் நிலைநிறுத்திய விதம்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 1989 ஆம் ஆண்டு சட்டத்தரணியாகத் தனது பிரவேசத்தை ஆரம்பித்து, நீதித்துறையின் அடிமட்டத்திலிருந்து படிப்படியாக மேல் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் எனத் தனது திறமையால் உயர்ந்தவர் அவர். 2015ஆம் ஆண்டில் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, நாட்டின் மிகத் தீவிரமான, சர்வதேச தொடர்புகளைக் கொண்ட போதைப்பொருள் மாஃபியா தலைவனான ‘வெலே சுதா’ என்ற சமந்த குமாரவுக்கு எவ்வித தயக்கமுமின்றி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்ததன் மூலம், பாதாள உலகக் குழுக்களுக்கும் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் அதிகார வர்க்கத்திற்கும் அவர் விடுத்த எச்சரிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்கது. அதன் தொடர்ச்சியாக, 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அரங்கேறிய 52 நாள் அரசியலமைப்பு சதியின் போது, பாராளுமன்ற பெரும்பான்மையின்றி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமராகச் செயற்படும் அதிகாரத்திற்கு இடைக்காலத் தடை விதித்து, நாட்டின் ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் பாழாகாமல் நிலைநிறுத்தியவர் இவரே ஆவார்.

இத்தகைய அதிரடியான, துணிச்சலான பின்னணியைக் கொண்ட ஒரு நீதியரசரைக் கண்டு குற்றவாளிகளும் ஊழல்வாதிகளும் அச்சமடைவது வியப்பிற்குரிய ஒன்றல்ல. ஆனால், தங்களுக்கு எதிராக வழங்கப்படும் இத்தகைய நியாயமான தீர்ப்புகளையும், சட்டத்தின் முறையான தண்டனைகளையும் “அரசியல் பழிவாங்கல்” அல்லது “சட்டத்தை வளைத்துப் போடும் தந்திரம்” என மக்கள் மத்தியில் சித்தரிக்க முற்படுவது முற்றிலும் அற்பத்தனமான, சுயநலப் போக்காகும். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் முறையான சாட்சியங்கள், சான்றுகள் மற்றும் அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படியே குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்களேயன்றி, அங்கு எவ்வித தனிப்பட்ட குரோதங்களுக்கும் அரசியல் உள்நோக்கங்களுக்கும் இடமளிக்கப்படுவதில்லை.

தற்போதைய அரசாங்கம் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற உன்னதக் கொள்கையைத் தனது நிர்வாகச் செயற்பாடுகள் மூலம் முழுமையாக உறுதிப்படுத்துவதன் மூலம் இதனை நிரூபித்துக் காட்டியுள்ளது. நீதித்துறை அதன் போக்கில் சுதந்திரமாக இயங்குவதற்கு அரசாங்கம் வழங்கியுள்ள முழுமையான சுதந்திரமே, கடந்த காலங்களில் அரசர்களாக உலா வந்தவர்களை இன்று கூண்டில் ஏற்றிக் கொண்டிருக்கின்றது.

ஆட்சியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் அல்லது பெரும் கோடீஸ்வரர்கள் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, “சட்டத்தின் ஆட்சிக்கு மேல் எவரும் இல்லை” என்பதைச் சுயாதீன நீதித்துறை இன்று உரக்கப் பறைசாற்றி நிற்கிறது. பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிச்சையாக வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை நீதியரசர் சூரசேன தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு முழுமையாக இரத்து செய்து உத்தரவிட்டது. இது ஜனாதிபதியின் வரம்பற்ற அதிகாரமும் நாட்டின் சட்டத்திற்கும் அரசியலமைப்பிற்கும் உட்பட்டதே என்பதை மிகத் தெளிவாக உலகிற்கு உணர்த்தியது.

அதேபோல், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் பதவியில் இருந்தபோதே தனக்குத்தானே ஆடம்பர இல்லத்தை ஒதுக்கிக் கொண்ட அமைச்சரவை முடிவைத் தடுத்து நிறுத்தியதும், இரட்டைக் குடியுரிமை கொண்ட கீதா குமாரசிங்க மற்றும் கட்சித் தீர்மானத்தை மீறி பாராளுமன்றத்தில் வாக்களித்த முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இரத்து செய்ததும் சுயாதீன நீதித்துறையின் தற்துணிவுக்கும் நேர்மைக்கும் மிகச் சிறந்த சான்றுகளாகும்.

நீதிமன்றத்தின் மாண்பையும், அதன் உன்னத கௌரவத்தையும் காப்பதில் நீதியரசர் சூரசேன காட்டிய கண்டிப்பும் நீதியும் சமரசமற்றது. நீதிமன்றத்திற்குள் நுழைந்து அநாகரிகமாக நடந்துகொண்டு, நீதிபதியின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்குக் கடுமையான சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை, நாட்டின் சட்ட ஒழுங்கு எவ்வளவு பெரிய மதத் தலைவராக இருந்தாலும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை உணர்த்தியது.

மேலும், சமீபத்தில் இ-விசா முறைகேடு வழக்கில் உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால உத்தரவை அப்பட்டமாக மீறிச் செயற்பட்ட குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக உடனடியாக விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை போன்றவை, சட்டத்தின் சாட்டை எவ்வளவு உறுதியானது மற்றும் பலமிக்கது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது.

சுயாதீன நீதித்துறையின் இந்த உன்னத எழுச்சியும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி நிலைநிறுத்தும் அரசாங்கத்தின் கொள்கை ரீதியான உறுதியும்தான் தவறான வழிகளில் நடப்போரை இன்று அச்சுறுத்துகின்றது. உண்மையில், இந்த வயதெல்லை நீடிப்பு என்பது ஏதோவொரு தனிநபருக்காகவோ அல்லது தற்போதைய பிரதம நீதியரசருக்காகவோ மாத்திரம் கொண்டுவரப்படும் ஒரு சலுகை அல்ல; மாறாக, ஒட்டுமொத்த நீதிபதிகளுக்குமான ஒரு பொதுவான சட்ட நகர்வாகும்.

ஒரு நீதிபதியின் பதவிக்காலத்தையோ அல்லது அவர்களுக்கான வரப்பிரசாதங்களையோ குறைப்பது என்பது நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது மறைமுகமாக அழுத்தங்களை ஏற்படுத்துவதற்குச் சமமானதாகும். ஆனால், சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களுக்கான சலுகைகளையும் ஓய்வு வயதையும் அதிகரிப்பது நீதித்துறையின் மாண்பை மேலும் வலுப்படுத்துமே தவிர எவ்விதத்திலும் பலவீனப்படுத்தாது.

உலகில் முன்னேறிய பல நாடுகளிலும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை தாராளமாக நீடிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இலங்கையிலும் இந்த வயதெல்லை மேலும் இரண்டு வருடங்களால் நீட்டிக்கப்படவுள்ளது. அந்த வயதெல்லை அதிகமானது என சுயவிருப்பில் கருதுபவர்கள், தங்களுக்குத் தேவையான போது முன்கூட்டியே பதவியிலிருந்து ஓய்வுபெறவும் இயலுமாகவுள்ளது.

அதேவேளை, மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்ற ஏனைய தொழில் வல்லுநர்கள் தங்களின் துறை சார்ந்த உலகளாவிய அங்கீகாரத்தைக் கொண்டு மிக எளிதாக வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்ற முடியும். ஆனால், நீதிபதிகள் என்பவர்கள் இந்த நாட்டின் தனித்துவமான சட்டக் கட்டமைப்பு மற்றும் பாரம்பரியத்திற்கு அமையவே தங்களின் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துத் தேர்ச்சி பெற்றவர்களாவர். இதனால் அவர்களால் வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றுவது என்பது கடினமான ஒன்றாகும். இத்தகைய உள்நாட்டுத் தகைமை மிக்க மூத்த நீதிபதிகள் ஓய்வுபெற்ற பின்னரும் கூட, தங்களின் அறிவு மற்றும் அனுபவத்தைக் கொண்டு தற்போதும் அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் மிகத் திறம்படக் கடமையாற்றி வருகின்றனர். இது, அவர்களுக்குத் தொடர்ந்து பணியாற்றுவதற்கான உடல் மற்றும் மனத் தெம்பும், ஆளுமையும் முழுமையாக இருப்பதை நிரூபிக்கிறது.

எனவே, பக்கச்சார்பற்ற சமநிலை மாறாத நேர்மையுடனும் அசையாத துணிச்சலுடனும் எப்போதும் நீதியின் பக்கமே நிற்கும் ஒரு பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஒட்டுமொத்த நீதிபதிகளின் பதவிக்காலம் இம்முறையின் கீழ் நீடிக்கப்படுவதைக் கண்டு கலக்கமடைவது மக்கள் பணத்தைச் சூறையாடிய ஊழல்வாதிகளும், சட்டத்தை மதிக்காத குற்றவாளிகளும், தங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என நினைக்கும் சுயநல அரசியல்வாதிகளுமே அன்றி, நாட்டின் சட்டத்தின் ஆட்சியை நேசிக்கும் சாதாரண, நேர்மையான குடிமகன் அல்ல. இந்தத் தகைமை மிக்க ஒட்டுமொத்த நீதித்துறையினதும் கூட்டுத் தலைமைத்துவமும் அனுபவமும் மேலும் நீடிப்பது என்பது, இலங்கையில் நீதியும், சமத்துவமும், ஜனநாயகமும் இன்னும் பன்மடங்கு பலம்பெறுவதற்கும், ஊழலற்ற புத்தம் புதியதொரு சமுதாயம் மலர்வதற்குமான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய யுகத்தின் தொடக்கமே ஆகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *