2030 உலகக் கிண்ண ‘இறுதி’ போட்டியை நடத்த போட்டி

1 Min Read

2026 பிஃபா உலகக் கிண்ண போட்டி முடிவுற்ற நிலையில் அடுத்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியை நடத்துவதில் ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ நாடுகளுக்கு இடையே போட்டி வலுத்துள்ளது.

அடுத்த பிஃபா உலகக் கிண்ண போட்டி 2030 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. அந்தப் போட்டியை ஸ்பெயின், மொரோக்கோ மற்றும் போர்த்துக்கல் இணைந்து நடத்துகின்றன. எனினும் அந்த உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி நடைபெறும் மைதானம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இறுதிப் போட்டியை நடத்துவதற்கு ஸ்பெயின் தயாராகி வருகின்றபோதும், அந்தப் போட்டியை நடத்துவதற்காக மொரோக்கோ 115,000 இருக்கைகள் கொண்ட புதிய மைதானம் ஒன்றை 12 பில்லியன் டொலர் செலவில் அமைந்து வருகிறது. மொரோக்கோ அதன் வர்த்தக நகரான காஸாபிளாங்காவில் இறுதிப் போட்டியை உறுதிசெய்ய பெரும்புள்ளிகளை வைத்துக் காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது.

இதற்காக மொரோக்கோ கட்டும் இரண்டாவது ஹசன் அரங்கின் நிர்மாணப் பணிகள் அடுத்த ஆண்டு முடிவில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அது உலகின் மிகப்பெரிய கால்பந்து அரங்காக மாறவுள்ளது.

எனினும் ஸ்பெயின் மெட்ரிட்டில் உள்ள பெர்னபே அரங்கு அல்லது பார்சிலோனாவின் கேம்ப் நூ அரங்கில் இறுதிப் போட்டியை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஸ்பெயினும் தன்னிடம் பல அரங்குகளும் போட்டிகளை ஏற்பாடு செய்த அனுபவமும் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. 1982ஆம் ஆண்டு ஸ்பெயின் உலகக் கிண்ணத்தை ஏற்று நடத்தியது. அப்போது அங்குள்ள சாண்டியாகோ பெர்னபே அரங்கத்தில் இறுதிப் போட்டி நடந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *