பாடசாலைகளில் உள்ளக மேற்பார்வையின் அவசியம்

3 Min Read

பாடசாலைகளில் கல்வியின் தரம் சீராக இருப்பதற்கும், கற்றல்-கற்பித்தல் செயல்முறைகள் திருப்திகரமாக அமைவதற்கும், மாணவர்களின் கல்வி அடைவு மட்டங்கள் உயர்வதற்கும் ‘மேற்பார்வை’ இன்றியமையாத ஒன்றாகும். 21ஆம் நூற்றாண்டின் கல்வியின் முதன்மை இலக்கான ‘தரமேம்பாட்டை’ எட்ட மேற்பார்வை ஒரு முக்கிய கருவியாகச் செயல்படுகிறது.

மேற்பார்வை என்றால் என்ன?கிடைக்கக்கூடிய அருமையான வளங்களையும், நேரத்தையும் கொண்டு, நிறுவனத்தின் (பாடசாலையின்) நோக்கங்களை வினைத்திறனுடனும் விளைதிறனுடனும்அடைவதற்காக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட வழிகாட்டல் மற்றும் கண்காணிப்புச் செயல்பாடே மேற்பார்வையாகும்.

பாடசாலைக் கல்வி அமைப்பில் மேற்பார்வையானது பொதுவாக மூன்று முக்கிய மட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது:

பாடசாலை மட்டம், கோட்ட மட்டம் / வலய மட்டம், மாகாண மட்டம் / அமைச்சு மட்டம்

இதில் உள்ளக மேற்பார்வை என்பது ஒவ்வொரு பாடசாலைக்கும் மிகக் கட்டாயமான ஒன்றாகும். ஏனெனில், இது திட்டமிடப்பட்ட வகையில் முன்னறிவித்தலுடன் நடத்தப்படும் போது, ஒவ்வொரு ஆசிரியர், மாணவர் மற்றும் வகுப்பறையையும் தனித்தனியாகவும் மிக நுணுக்கமாகவும் அவதானிக்க முடிகிறது.

பாடசாலையின் உள்ளக மேற்பார்வைச் செயல்பாடுகளில் சிறந்த அனுபவமும், கல்வியில் ஆழ்ந்த தேர்ச்சியும் கொண்ட அதிபர், பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள், பாட இணைப்பாளர்கள் மற்றும் வகுப்புப் பொறுப்பாசிரியர்கள் ஆகியோர் பங்கேற்கலாம். ஒரு சிறந்த மேற்பார்வையாளரிடம் பின்வரும் பண்புகள் காணப்பட வேண்டும்:

நண்பராக இருத்தல்: ஆசிரியர்களின் தொழில்சார் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்ட நல்ல நண்பராகப் பழக வேண்டும்.

ஆலோசனையாளர்: வகுப்பறை முகாமைத்துவம் மற்றும் கற்பித்தல் முறைகள் குறித்து வழிகாட்டும் விசேட ஆலோசகராக இருக்க வேண்டும்.

ஊக்குவிப்பாளர்:

ஆசிரியர்களின் திறமைகளை இனங்கண்டு அவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துபவராக இருக்க வேண்டும்.

ஜனநாயகவாதி:

மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் பண்பு கொண்டவராக இருத்தல் வேண்டும்.

சிறந்த வழிகாட்டி:

குறைகளை மட்டும் சுட்டிக்காட்டாமல், பிழைகளைத் திருத்திக் கொள்ள அன்பாக வழிகாட்ட வேண்டும்.

நடுநிலைமையாளர்:

எவ்வித பக்கச்சார்புமின்றி, நேர்மையாகவும் நடுநிலையாகவும் செயல்பட வேண்டும்.

அதிகாரத்தைத் தவிர்த்தல்: ஆசிரியர்களுக்குத் தொந்தரவோ அல்லது பயமோ ஏற்படும் வகையில் தனது அதிகார பலத்தைக் காட்டாதவராக இருக்க வேண்டும். உள்ளக மேற்பார்வையை முறையாகச் செயல்படுத்த அதனை மூன்று பிரிவுகளாக வகுத்து நோக்கலாம்:

ஆசிரியர் மேற்பார்வை

ஒரு ஆசிரியர் வகுப்பறையில் கற்பிப்பதை மிகவும் நுட்பமாக மேற்பார்வை செய்ய வேண்டும். ஆசிரியர்கள் பாடத்தைக் கற்பிப்பதற்கு முன்னர் முறையான முன்னாயத்தம் செய்துள்ளார்களா? கற்பித்தலுக்குத் தேவையான உசாத்துணைகள், குறிப்புக்கள் மற்றும் மேலதிகத் தகவல்களை வைத்துள்ளார்களா?

அன்றைய தினத்திற்குரிய பாடப்பரப்பு பற்றிய தெளிவான அறிவு ஆசிரியரிடம் உள்ளதா? போன்ற விடயங்கள் ஆராயப்பட வேண்டும்.

வகுப்பறை மேற்பார்வை: வகுப்பறையின் கற்றல் சூழலை மேம்படுத்த பின்வரும் பௌதீக மற்றும் நிர்வாக விடயங்கள் கண்காணிக்கப்பட வேண்டும்:

வகுப்பறையின் உட்சுத்தம் மற்றும் வெளிச்சுத்தம்:

மாணவர் பெயர்ப் பட்டியல் விபரம், தினவரவு இடாப்பு மற்றும் பாடப்பதிவுப் பேணல், வாராந்த மற்றும் நாளாந்த நேர அட்டவணைகள் காட்சிப்படுத்தப்பட்டிருத்தல். ஆசிரியர் மேசை, கதிரை மற்றும் மாணவர்களின் தளபாட ஒழுங்கமைப்பு.

மாணவர்களின் அடைவு மட்டத்தை அறிய அவர்களின் கற்றல் செயல்பாடுகளைத் தனித்தனியாகக் கண்காணிக்க வேண்டும். ஆசிரியரால் வழங்கப்படும் வினாக்கள் மற்றும் செய்முறைப் பயிற்சிகளை மாணவர்கள் பயிற்சிப் புத்தகங்களில் சரியாக எழுதியுள்ளார்களா? அவற்றை ஆசிரியரிடம் காட்டித் திருத்தம் பெற்றுள்ளார்களா? வீட்டு வேலைகளில் மாணவர்கள் அக்கறை காட்டுகிறார்களா என்பதை ஆராய ​வேண்டும்.

இவ்வாறு மாணவர்களைத் தனித்தனியாக மேற்பார்வை செய்யும்போது, கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களை (Slow Learners) ஆரம்பத்திலேயே இனங்கண்டு, அவர்களுக்கான விசேட பரிகாரக் கற்பித்தல் (Remedial Teaching) ஏற்பாடுகளைச் சுலபமாக மேற்கொள்ள முடியும்.உள்ளக மேற்பார்வையின் நன்மைகள் (அவசியத்தன்மை)

பெரிய பாடசாலையாக இருந்தாலும், சிறிய பாடசாலையாக இருந்தாலும் உள்ளக மேற்பார்வையை முறையாக ஒழுங்கமைக்கும் போது பின்வரும் சாதகமான பயன்கள் விளைகின்றன:

பாடசாலையில் பயனுள்ளதும், மாணவர்கள் விரும்பி வரக்கூடியதுமான கற்றல் சூழல் உருவாகிறது.

பௌதீக மற்றும் மனித வளங்களை உச்சட்ட வினைத்திறனுடன் பயன்படுத்த முடிகிறது.

மாணவர்களின் கல்விச் சாதனை மட்டத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடிகிறது.

ஆசிரியர்களின் தொழில்சார் அபிவிருத்திக்கு முறையான வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் கிடைக்கின்றன.பாடசாலைகளில் உள்ளக மேற்பார்வையானது நீதியாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டும். தேவை ஏற்படும் போது வலயக் கல்வி அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு, கல்வி அதிகாரிகளின் ஆலோசனைகளையும் பெற்று இதனைச் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு பாடசாலையினதும் உன்னத நோக்கங்கள் நிச்சயமாக நிறைவேறும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *