ஐரோப்பாவின் வலுவான அணிகளான ஸ்பெயின்–பிரான்ஸ் நாளை களத்தில்

3 Min Read

பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் முதலாவது அரையிறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இன்று (14) நள்ளிரவு கடந்து நாளை அதிகாலை 12.30 மணிக்கு அமெரிக்காவின் டலாஸ் அரங்கில் நடைபெறவுள்ளது.

சர்வதேச கால்பந்து சம்மேளன தரவரிசையின்படி ஐரோப்பாவின் முன்னணி இரு அணிகளுமான ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் இதுவரை வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியே அரையிறுதி வரை முன்னேறுள்ளது. பிரான்ஸ் தனது குழுநிலைப் போட்டிகள் அனைத்தையும் வென்றதோடு அடுத்து வந்த மூன்று நொக் அவுட் போட்டிகளையும் பெரிதாக சவால் இன்றி வெற்றியீட்டியே அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.

ஐரோப்பிய சம்பியனாக இருக்கும் ஸ்பெயின் அணி உலகக் கிண்ணத்தில் தனது ஆரம்பப் போட்டியில் முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு வந்த குட்டி தீவு நாடான கேப் வெர்டேவிடம் ஆட்டத்தை சமன் செய்தபோதும் அடுத்து வந்த அனைத்துப் போட்டிகளிலும் சௌகரியமாக வெற்றிகளை பெற்றது. குறிப்பாக பதினாறு அணிகள் சுற்றுவரை எதிரணிக்கு ஒரு கோலைக் கூட விட்டுக் கொடுக்காமல் இருந்தே போட்டிகளில் வென்றது.

இதில் பிரான்ஸ் அணியின் கோல் இயந்திரமாக பார்க்கப்படும் கிலியன் எம்பாபே மற்றும் ஸ்பெயினின் நட்சத்திர வீரராக உள்ள லமின் யமால் மீது அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இம்முறை உலகக் கிண்ணத்தில் இதுவரை 563 நிமிடங்கள் மைதானத்தில் ஆடி இருக்கும் எம்பாபே எட்டு கோல்களையும் மூன்று கோல் உதவிகளையும் பெற்று இதுவரை அதிக கோல் பெற்றவர்கள் வரிசையில் ஆர்ஜன்டீனாவின் லியோனல் மெஸ்ஸியுடன் தங்கப் பாதணிக்கான முதல் இடத்தில் உள்ளார். தவிர, ஒஸ்மான் டம்பலே (ஐந்து கோல்கள்) மற்றும் மைக்கல் ஒலிசே (ஐந்து கோல் உதவிகள்) ஆகியோரும் பிரான்ஸ் அணிக்கு முக்கியமான வீரர்களாக உள்ளனர்.

ஸ்பெயின் அணியில் இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிக கோல்களை பெற்றவராக இருக்கும் மைகெல் ஒயர்சபால் பெரிதாக அவதானத்தை பெறாதபோதும் எதிரணிக்கு அதிக சவால் கொடுக்கக் கூடியவராக பார்க்கப்படுகிறார். தவிர மைகெல் மொரேனோ (இரண்டு கோல்கள்) மற்றும் மார்க் கர்குரல்லா (இரண்டு கோல் உதவிகள்) ஆகியோர் முக்கியமானவர்களாவர். இதுவரை ஒரு கோலை பெற்றிருக்கும் யமாலின் ஆட்டம் வேகம் பெற்று வருகிறது.

பிரான்ஸின் தாக்குதல் ஆட்டம் வலுவாக இருப்பதோடு கடந்த போட்டிகளில் அதன் தற்காப்பு ஆட்டத்தில் சில தவறுகள் வெளிப்பட்டன. எனினும் ஸ்பெயினின் பின்கள ஆட்டம் இந்த உலகக் கிண்ணத்தில் வலுவாக உள்ளது. அத்துடன் தனது முன்களத்தின் வேகத்தையும் அந்த அணி சிறப்பாக பயன்படுத்தி வருகிறது. ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் இதுவரை ஆடிய போட்டிகளில் ஸ்பெயின் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளும் ஆடிய 38 சர்வதேச போட்டிகளில் ஸ்பெயின் 18 வெற்றிகளைப் பெற்றிருப்பதோடு பிரான்ஸ் 13 போட்டிகளில் வென்றுள்ளது. ஏழு போட்டிகள் சமநிலையில் முடிவுற்றுள்ளன.

எனினும் இரு அணிகளும் உலகக் கிண்ணத்தில் இதுவரை ஒருமுறை மாத்திரமே சந்தித்துள்ளன. 2016 தொடரின் 16 அணிகள் சுற்றில் வைத்து ஸ்பெயினை எதிர்கொண்ட பிரான்ஸ் 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. அப்போது பிரான்ஸ் சார்பில் பிரான்க் ரிபரி, பெட்ரிக் வியரா மற்றும் சினடின் சிடேன் ஆகியோர் கோல் புகுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் கடைசியாக ஓர் ஆண்டுக்கு முன்னரே பலப்பரீட்சை நடத்தின. 2025 ஐரோப்பிய நாடுகளின் லீக் தொடரின் அரையிறுதியில் இரு அணிகளும் சந்தித்தபோது ஸ்பெயின் அணி 5–4 என பிரான்ஸை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. இதன்படி இரு அணிகளும் கடைசியாக மோதிய ஐந்து போட்டிகளில் ஸ்பெயின் மூன்றில் வென்றதோடு பிரான்ஸ் இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *