முன்னைய ஆட்சிக் காலங்களில் அரசியல் அதிகாரத்தின் பின்னணியில் வளர்ந்ததாகக் கூறப்படும் ஊழல், இலஞ்சம், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாதாள உலகத் தொடர்புகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர்களின் குடும்பங்களை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளன.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC), குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகள் இணைந்து முன்னெடுத்து வரும் இந்த நடவடிக்கைகளில், ஆரம்ப கட்டமாக முன்னாள் அமைச்சர்களின் மகன்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான முன்னாள் அமைச்சர்களின் நெருங்கிய உறவினர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாத வகையில் தேவையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹரக் கட்டா வழக்கு – விசாரணையை உலுக்கிய 12 கோடி ரூபாய் இலஞ்சம் இந்த விசாரணைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது, பாதாள உலகக் குழுத் தலைவரும் பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான நந்துன் சிந்தக விக்ரமரத்ன (ஹரக் கட்டா) தொடர்பான வழக்காகும்.முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண அமைப்பாளர் சரித் அபேசிங்க, முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளர் அருண வருண ஹெந்திரிகே ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹரக் கட்டாவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டிருந்த தடுப்புக் காவலில் இருந்து விடுவித்தல், பூஸா அதியுயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து வேறொரு சிறைக்கு மாற்றுதல், அவர் மீதான வழக்குகளில் சலுகைகள் பெற்றுத் தருதல் போன்ற உதவிகளைச் செய்வதாகக் கூறி ஆரம்பத்தில் 50 கோடி ரூபாய் இலஞ்சம் கோரப்பட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.
பின்னர் அந்தத் தொகை 30 கோடியாகவும், இறுதியில் 20 கோடி ரூபாயாகவும் குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் 12 கோடி ரூபாய் முற்பணமாக பெறப்பட்டதாகவும், அந்தப் பணம் ஐக்கிய அரபு அமீரகத்தின் திர்ஹம் நாணயத்தில் இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் நடைபெற்ற இரகசியப் பேச்சுவார்த்தை
2023 மார்ச் மாதம் ரகித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க மற்றும் அருண வருண ஹெந்திரிகே ஆகியோர் டுபாய்க்குச் சென்று, அங்கு ஹரக் கட்டாவின் மனைவி மதுஷிகா மதுவந்தியை சந்தித்ததாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.
‘ஹெர்பி’ என அழைக்கப்படும் நிர்மல பண்டாராவின் வீட்டில் நடைபெற்ற இந்தச் சந்திப்பிலேயே இலஞ்சத் தொகை குறித்து இறுதி இணக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அந்தப் பணம் உண்டியல் முறை மூலம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விசாரணைகளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பது, பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பணம் ஆடம்பர வாழ்க்கைக்காக பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்களாகும். சரித் அபேசிங்க, 2024ஆம் ஆண்டு உயர்தர ரேஞ்ச் ரோவர் சொகுசு வாகனத்தை வாங்கியதுடன், கஹத்துடுவ பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய வீடொன்றையும் நிர்மாணித்ததாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, அருண வருண ஹெந்திரிகே BMW 7 Series சொகுசு காரை வாங்கியதோடு, தனது வீட்டையும் உயர்தர வசதிகளுடன் புதுப்பித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சொத்துகள் அனைத்தும் ஹரக் கட்டா தரப்பிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் இலஞ்சப் பணத்தில் வாங்கப்பட்டவை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
இடைத்தரகராகச் செயல்பட்ட மிதிகம லசா
அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்த வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லசந்த விக்ரமசேகர (மிதிகம லசா) முக்கிய இடைத்தரகராகச் செயல்பட்டதாகவும் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன.
ஹரக் கட்டா தரப்பிலிருந்து 12 கோடி ரூபாய் இலஞ்சத் தொகையை ரகித ராஜபக்ஷ உள்ளிட்டோரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை மிதிகம லசாவே மேற்கொண்டதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் மகன் ரகித ராஜபக்ஸ லஞ்ச விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவையும் நோக்கி நகர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் நீதி அமைச்சராக விஜயதாச ராஜபக்ஷ பதவி வகித்திருந்தார். அப்போது தமக்கு எதிராகக் குரல் கொடுத்த நீதிச்சேவை சங்கத்தின் தலைவர் மாவட்ட நீதிபதி ருவன் திசாநாயக்க மற்றும் செயலாளர் இசுறு நெத்திகுமார ஆகியோரை பாராளுமன்றச் சிறப்புரிமைக் குழுவுக்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்த அவர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
கைது செய்யப்பட்டுள்ள ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரும் துபாயிலிருந்து இலங்கை திரும்பிய அதே விமானப் பயணத்தில் விஜயதாச ராஜபக்ஷவும் இணைந்திருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்தத் தகவல்களின் அடிப்படையில், விஜயதாச ராஜபக்ஷவிடமும் வாக்குமூலம் பெறவுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், முதற்கட்ட விசாரணைகளில் போதிய ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ரகித ராஜபக்ஷ சார்பில் தாங்கள் ஆஜராகவில்லை என்றும், அவரை சட்டரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வழக்கின் மற்றொரு அரசியல் பரிமாணம், கைது செய்யப்பட்டுள்ள சரித் அபேசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரும், ஹொரண அமைப்பாளருமாவார் என்பதாகும். அதுமட்டுமன்றி, கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை முன்னாள் தலைவர் லசந்த விக்ரமசேகர (மிதிகம லசா), ஹரக் கட்டாவின் பாதாள உலகக் குழுவின் செல்வாக்குமிக்க உறுப்பினராக இருந்ததாக விசாரணைகள் கூறுகின்றன.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தற்போது கைது செய்யப்பட்டுள்ள கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபருடன் 53 தொலைபேசி உரையாடல்கள் மேற்கொண்டதாக முன்பு எழுந்த குற்றச்சாட்டுகளும் மீண்டும் அரசியல் விவாதத்திற்கு வந்துள்ளன.
இதனால், ராஜபக்ஷ அரசியல் அணியைப் போலவே, ஐக்கிய மக்கள் சக்தியும் ஊழல், திட்டமிட்ட குற்ற உலகத் தொடர்புகள் மற்றும் சர்ச்சைகளிலிருந்து தப்பவில்லை என்ற விமர்சனங்கள் தற்போது அரசியல் அரங்கில் வலுப்பெற்று வருகின்றன.
முன்னாள் அமைச்சர்களின் மகன்கள் மட்டும் அல்ல ஹரக் கட்டா விவகாரம் வெறும் தனி வழக்காக மட்டுமே கருதப்படவில்லை. முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் சில அமைச்சர்களின் மகன்கள், தங்களது தந்தையரின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம், சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகள் மற்றும் குற்ற உலகத் தொடர்புகளில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தற்போது விரிவான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சர்களின் மகன்கள் மட்டுமன்றி, அவர்களுடன் தொடர்புடைய உறவினர்கள், நெருங்கிய வட்டாரத்தினரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
நீதியின் முன் அனைவரும் சமம்
ஒருகாலத்தில் அரசியல் அதிகாரம், குடும்பச் செல்வாக்கு மற்றும் பதவி ஆகியவை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கக் கூடிய கவசங்களாகக் கருதப்பட்டதாகப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இன்று, முன்னாள் அமைச்சர்களின் மகன்கள், அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்கள் கூட விசாரணை அமைப்புகளின் முன் ஆஜராக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த அரசியல் பின்னணியைக் கொண்டவராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன என்ற பார்வை சமூகத்தில் வலுப்பெற்று வருகிறது. பக்கச்சார்பின்றி நடத்தப்படும் இந்த விசாரணைகளில் குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப்படும்போது, அது நாட்டின் நீதி அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்.அதேவேளை, கடந்த காலங்களில் அதிகாரம், செல்வாக்கு அல்லது அரசியல் பாதுகாப்பை நம்பி சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் பலரும், இவ்வாறான தொடர் விசாரணைகளால் பதற்றத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. இறுதியில், இந்த வழக்குகளின் உண்மை நிலையை உறுதிப்படுத்துவது நீதிமன்றங்களின் தீர்ப்புகளே என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.




