தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியா தனது அண்டை நாடுகளுடன் நெருங்கிய, பரஸ்பர நலன் சார்ந்த உறவுகளைப் பேணுவதற்காக வகுத்த முதன்மையான வெளியுறவுக் கொள்கையே ‘அண்டை நாட்டிற்கு முதலிடம்’ (Neighbourhood First) என்பதாகும். இக்கொள்கையின் மிக முக்கிய மற்றும் மூலோபாய பங்காளியாக இலங்கை விளங்குகின்றது. பூகோள அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசார ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, இப்பிராந்தியத்தின் சமநிலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இலங்கை, சர்வதேச வர்த்தக கடல் வழிகளுக்கு மிக அருகில் இருப்பதால், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கும் பிராந்திய நலனுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடாகும். தெற்காசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றாக இலங்கை திகழ்வதுடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கையின் ஒத்துழைப்பு இந்தியாவிற்கு இன்றியமையாததாகக் காணப்படுகிறது.
நெருக்கடி கால ஆதரவு
இந்த வெளியுறவுக் கொள்கையின் கீழ், இலங்கையுடனான உறவு பல முக்கிய தூண்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இலங்கை அண்மைக்காலங்களில் எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, ‘அண்டை நாட்டிற்கு முதலிடம்’ கொள்கையின் உண்மையான வெளிப்பாடு புலப்பட்டது. பொருளாதார சரிவிலிருந்து இலங்கை மீள முயன்றபோது, இந்தியா எரிபொருள், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வாங்குவதற்காக சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியையும் கடன் வசதிகளையும் (Lines of Credit) தாராளமாக வழங்கியது. மேலும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) முதலில் உத்தியோகபூர்வமாக உத்தரவாதம் அளித்த நாடும் இந்தியாவாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தரை, கடல் மற்றும் வான்வழி இணைப்புகளை மேம்படுத்துவது இக்கொள்கையின் மற்றுமொரு முக்கிய நோக்கமாகும்.
இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான மின் வலைப்பின்னல்களை (Power Grid) இணைப்பதன் மூலம் தூய்மையான ஆற்றலை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை மற்றும் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான படகுச் சேவை போன்ற முயற்சிகள் மக்கள் மத்தியிலான தொடர்பை மேலும் பலப்படுத்தியுள்ளன.
பாதுகாப்புத் துறையைப் பொறுத்தமட்டில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை நிலைநாட்ட இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.
கூட்டு இராணுவப் பயிற்சியான ‘மித்ரா சக்தி‘
இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களின் வருடாந்த கூட்டு இராணுவப் பயிற்சியான ‘மித்ரா சக்தி’, கடந்த 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், சிறந்த இராணுவ நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதல்களின் கீழ் நாடுகடந்த பயங்கரவாதத்திற்கு எதிராகக் கூட்டுத் தந்திரோபாய நிபுணத்துவத்தை வளர்த்தெடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா, மாலைதீவுகள் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களின் தலைமையில் ஒரு முத்தரப்பு உரையாடலாகத் தொடங்கப்பட்ட ‘கொழும்பு பாதுகாப்பு கலந்துரையாடல்’ (Colombo Security Conclave – CSC) சமீபத்திய ஆண்டுகளில் புதிய வேகம் பெற்றுள்ளது. உறுப்பு நாடுகளால் கையொப்பமிடப்பட்ட ஸ்தாபன ஆவணங்களுடன் முறைப்படி மேம்படுத்தப்பட்டுள்ள இவ்வமைப்பு, பிராந்திய பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் கடல்சார் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் இரு நாடுகளும் முக்கிய பங்கு வகிக்க வழிவகுத்துள்ளது.
நீடிக்கும் சவால்களும் எதிர்கால நோக்கும்
இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான வரலாற்று உறவுகள் இருந்தபோதிலும், சில சவால்களும் நீடிக்கவே செய்கின்றன. இலங்கையில் சீனாவின் முதலீடுகள் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் (Port City), ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்றவற்றில் சீனாவின் உள்கட்டமைப்பு ஆதிக்கம் இந்தியாவின் பாதுகாப்பு கவலைகளைத் தூண்டியுள்ளது.
அதேபோல், பாக் நீரிணைப் பகுதியில் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே ஏற்படும் எல்லை தாண்டிய மீன்பிடிப் பிரச்சினைகளும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் இருதரப்பு உறவுகளில் அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.
மேலும், இலங்கையின் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில், 13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
எவ்வாறாயினும், இந்தியாவின் ‘அண்டை நாட்டிற்கு முதலிடம்’ கொள்கையானது, வெறும் அரசியல் உறவாக மட்டுமன்றி, பிராந்தியத்தின் கூட்டு வளர்ச்சிக்கான ஒரு பாலமாக உருவெடுத்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், டிஜிட்டல் தொழில்நுட்ப பரிமாற்றம் (உதாரணமாக UPI – Unified Payments Interface கட்டண முறை அறிமுகம்) மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை உள்ளூர் நாணயங்களில் மேற்கொள்வது போன்ற நவீன திட்டங்கள் மூலம் இவ்வுறவு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.
இலங்கையின் இறையாண்மையையும் அதன் சுயாதீனமான வெளியுறவுக் கொள்கையையும் மதிக்கும் இந்தியாவின் நேசக்கரங்களும், இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையுமே ‘அண்டை நாட்டிற்கு முதலிடம்’ (Neighbour First) கொள்கையின் உண்மையான அடித்தளங்களாகும். இந்தியாவின் பாதுகாப்பும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளதால், இரு நாடுகளும் பரஸ்பர புரிதலுடன் இணைந்து பயணிப்பது தெற்காசிய பிராந்தியத்தின் ஒட்டுமொத்த அமைதிக்கும் வளர்ச்சிக்கும் மிக அவசியமானதாகும்.




