l சித்துப்பாத்தி இந்து மயானம் என்பது கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக சைவ மக்களின் பாரம்பரிய
l எரியூட்டும் சுடலையாக
l மட்டுமே இருந்துள்ளது.

l நீதிமன்றக் கட்டளைகள்
l அல்லது சிறு குழந்தைகள்
l இறக்கும் போது மட்டுமே, அதன் வடகிழக்கு
l மூலையிலுள்ள மிகச்
l சிறிய பகுதியில் உடல்கள் புதைக்கப்படுவது வழக்கம். வேறு எங்கும் உடல்களைப் புதைக்கும் வழக்கம் அங்கு இருந்ததில்லை.
இலங்கையின் வரலாற்றில் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களின் மௌனச் சாட்சியாக விளங்கும்
யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதி, தற்போது நாட்டின் மிகப்பாரிய மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடமாக உத்தியோகபூர்வமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக
இப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மற்றும் அது சார்ந்த கள
நிலவரங்கள், கடந்த முப்பதாண்டு காலப் போரின் போது இடம்பெற்ற அநீதிகளுக்கான நீதிப்
பொறிமுறையை மீண்டும் ஒருமுறை கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
யாழ்ப்பாணம், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் மின் தகன மேடை அமைப்பதற்காக, கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அத்திவாரம் வெட்டப்பட்ட போதே இந்த புதிய மனித எச்சங்கள் முதன்முதலாகக் கண்டறியப்பட்டன. இது குறித்து அரியாலை பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் என்பவரால் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வ முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இவ்விடயம் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, 2025 மே 15 அன்று நீதிமன்ற உத்தரவின் கீழ் முறையான அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் மூலம் 412 மனித என்புக் கூடுகள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
இவற்றில் 409 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 23ஆம் திகதியுடன் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியளவில் அடுத்தகட்ட அகழ்வுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
செம்மணி புதைகுழி விவகாரத்தில் உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, “மக்கள் செயல்” என்ற அமைப்பினால் கடந்த ஆண்டு “அணையா விளக்கு” எனும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் முடிவில், போராட்டம் நடைபெற்ற பகுதி “அணையா விளக்கு திடல்” எனப் பெயரிடப்பட்டு, அங்கு ஓர் நினைவுச் சின்னமும் அமைக்கப்பட்டது.
இப்போராட்டத்தின் முதலாமாண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த ஜூன் 28ஆம் திகதி அத்திடலில் “உரிமை பந்தம்” என்ற பெயரில் விசேட நினைவு நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, செம்மணியில் மீட்கப்பட்ட ஆன்மாக்களின் நினைவாக 427 தீப்பந்தங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தற்போதைய அகழ்வில் மீட்கப்பட்ட என்புக் கூடுகளின் எண்ணிக்கை 427ஆகும்.
1996ஆம் ஆண்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் மரண தண்டனை கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ 1998இல் நீதிமன்றில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், 1999ஆம் ஆண்டு பிள்ளையார் கோவில் மற்றும் உப்பளப் பகுதிகளில் தோண்டி எடுக்கப்பட்ட என்புக் கூடுகளின எண்ணிக்கை 15 ஆகும்.
இந்த நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய, அரியாலைத் தளத்தின் முக்கிய சாட்சியாளரான கிருபாகரன், இப்பகுதியின் வரலாற்று உண்மைத்தன்மை குறித்தும், போர்க்கால இராணுவச் செயல்பாடுகள் குறித்தும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்:
சித்துப்பாத்தி இந்து மயானம் என்பது கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக சைவ மக்களின் பாரம்பரிய எரியூட்டும் சுடலையாக மட்டுமே இருந்துள்ளது. நீதிமன்றக் கட்டளைகள் அல்லது சிறு குழந்தைகள் இறக்கும் போது மட்டுமே, அதன் வடகிழக்கு மூலையிலுள்ள மிகச் சிறிய பகுதியில் உடல்கள் புதைக்கப்படுவது வழக்கம். வேறு எங்கும் உடல்களைப் புதைக்கும் வழக்கம் அங்கு இருந்ததில்லை.
1995 ஒக்டோபர் மாதத்திற்குப் பிறகு யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றியது முதல், 2011ஆம் ஆண்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படும் வரை, இந்த மயானப் பகுதி முற்றுமுழுதாக இராணுவக் காவல் அரண்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் நிறைந்த ஒரு பிரதான இராணுவ முகாமாகவே செயற்பட்டு வந்தது.
செம்மணிப் புதைகுழி என்பது இந்த மயானத்துடன் மட்டும் சுருங்கிவிடவில்லை. 1999 இல் 15 உடல்கள் மீட்கப்பட்ட பகுதிகள் யாழ். வளைவுக்கு அருகிலுள்ள பிள்ளையார் கோவில் பகுதி, மருத மரக் கேணி மற்றும் உப்பளப் பாத்திகளாகும். மேலும், 2019ஆம் ஆண்டு நீர்வழங்கல் சபையினால் நாயன்மார்க்கட்டுப் பகுதியில் தண்ணீத் தொட்டி அமைக்கப்பட்ட போதும் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவையனைத்தும் ஒரே தொடர் வலையமைப்பின் கீழ் வரும் பகுதிகளாகும்.
கைதடி, மணியந்தோட்டம், கொழும்புத்துறை, அரியாலை, புங்கங்குளம் மற்றும் நாயன்மார்க்கட்டு ஆகிய பகுதிகளில் பொதுமக்களைக் கைது செய்து, சித்திரவதை செய்வதற்கென இராணுவத்தின் ‘7சி எல்ஏ’ (7 CLA) என்ற 15 உறுப்பினர்களைக் கொண்ட இரகசியப் படையணி செயற்பட்டுள்ளது. இதற்கெனப் பல சித்திரவதை முகாம்கள் இயங்கியுள்ளன:
மாம்பழச் சந்தி, தபால் கட்டை சந்தி ஜெயா பில்டிங், நெடுங்குளம் சந்தி மற்றும் பொன்னம்பலம் சந்தி ஆகிய இடங்களிலும் முகாம்கள் இருந்தன.
வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த அரியாலை கொட்டுகிணற்றடி ‘சி’ முகாமிலேயே யாழ். குடாநாட்டில் கைது செய்யப்பட்ட அனேக இளைஞர்கள் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மணியந்தோட்டம் மற்றும் கொழும்புத்துறை துண்டிச் சந்தியிலும் இவ்வாறான புதைகுழிகள் இருந்துள்ளன.
கிருஷாந்தி கொலை வழக்கின் தீர்ப்புக்குப் பின்னரும், செம்மணி விவகாரம் கடந்த 27 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டது. குறிப்பாக, பொன்னம்பலம் சந்தியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் யாழ். வளைவுப் பகுதியில் சடலங்களாக மீட்கப்பட்ட இராசையா சதீஷ்குமார் மற்றும் மகேந்திரம் பாபு ஆகிய இளைஞர்களின் வழக்குகளுக்கு இன்றுவரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை.
செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் அது சார்ந்த விசாரணைகளின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது, பாதிக்கப்பட்ட தரப்பினரிடையே சட்டத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. கடந்த 1999ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் சர்வதேசப் பிரதிநிதிகளின் அவதானிப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்றிருந்த போதிலும், அது குறித்த சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் முழுமையான இறுதி இலக்கை எட்டவில்லை என்ற கருத்துக்கள் தற்போதைய “உரிமை பந்தம்” நிகழ்வில் கலந்துகொண்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட தரப்பினரும், குறித்த காலப்பகுதியில் அநீதிகளுக்கு முகம் கொடுத்து உயிர் தப்பியதாகக் குறிப்பிடும் சாட்சியாளர்களும், தமக்கான பாதுகாப்பு மற்றும் வாக்குமூலங்களின் இரகசியத்தன்மை குறித்து அதீத அக்கறை காட்டி வருகின்றனர். உள்நாட்டு விசாரணைப் பிரிவுகள் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றின் முன்னிலையில் சாட்சியமளிப்பதில் உள்ள நடைமுறைச் சவால்களைச் சுட்டிக்காட்டும் அவர்கள், இவ்வாறான உன்னதப் புலனாய்வுச் செயல்பாடுகளில் சர்வதேசத் தரத்திலான நடுநிலையான கண்காணிப்பும், உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையான விசாரணைப் பொறிமுறைகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். அவ்வாறானதொரு பொறிமுறையின் ஊடாகவே அனைத்துத் தரப்புச் சாட்சியங்களையும் அச்சமின்றிப் பதிவு செய்ய முடியும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்றது.
இலங்கையில் தற்போதைய நிலையில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) போன்ற நிறுவன ரீதியான கட்டமைப்புகள் இயங்கி வருகின்ற போதிலும், அவை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தரவுகளைச் சேகரிப்பதிலும், அவர்களின் உறவினர்களின் விபரங்களைப் ஆவணப்படுத்துவதிலும் மட்டுமே முதன்மையாக கவனம் செலுத்துவதாகப் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன. வெறும் ஆவணப்படுத்தலுக்கு அப்பால், மனிதப் புதைகுழிகள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் மூலோபாய மற்றும் காத்திரமான கொள்கைப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.
யுத்த காலப்பகுதியில் கைதுகள் மற்றும் பல்வேறு அநீதிகளுக்கு முகம் கொடுத்து, தற்போது அரியாலை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வசித்து வரும் நேரடிச் சாட்சியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பிரதானமானதாகும். சாட்சியமளிக்கும் நபர்களுக்குப் பிந்திய காலப்பகுதியில் எவ்வித அச்சுறுத்தல்களும் ஏற்படாதவாறு சட்ட ரீதியான பாதுகாப்புக் கவசம் பலப்படுத்தப்பட வேண்டும்.
தகவல்களை வழங்கும் மற்றும் சாட்சியமளிக்கும் நபர்களின் தனிப்பட்ட விபரங்கள், அவர்களின் வாக்குமூலங்களின் உள்ளடக்கம் ஆகியன எக்காரணம் கொண்டும் கசிந்துவிடாதவாறு, முழுமையான இரகசியத்தன்மையைப் பேணக்கூடிய விசேட சட்டப் பாதுகாப்புப் பிரிவொன்று அல்லது பொறிமுறையொன்று உருவாக்கப்படுவது அவசியமாகும். இது சாட்சியாளர்கள் அச்சமின்றி முன்வருவதற்கான உந்துதலை வழங்கும்.
செம்மணி போன்ற சிக்கலான மனிதப் புதைகுழிகளின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தடயவியல் ஆய்வுகளுக்கு, சர்வதேசத் தரத்திலான நவீன தொழில்நுட்பங்களையும், பங்களிப்பையும் முழுமையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலமே, கண்டெடுக்கப்படும் சான்றுகளின் நம்பகத்தன்மையை எவ்வித விவாதங்களுக்கும் இடமின்றி நிலைநாட்ட முடியும்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரமானது, வெறுமனே கடந்த காலத்தின் ஒரு வரலாற்று எச்சமாக மட்டும் சுருங்கிவிடக் கூடியதொன்றல்ல. இது நாட்டின் மனித உரிமைகள் பாதுகாப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றோடு நேரடியாகத் தொடர்புடைய, இன்னும் தீர்வு காணப்படாத ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகும்.
பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் நேரடிச் சாட்சியங்களைப் பாதுகாப்பான முறையில் பதிவு செய்யக்கூடிய மற்றும் ஒட்டுமொத்த விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை நிலைநாட்டக்கூடிய ஒரு காத்திரமான வேலைத்திட்டத்தை அரசாங்கம் உருவாக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகின்றது.




