சவால்களுக்கு மத்தியில் பிரிக்ஸின் தலைமைப் பொறுப்பு

5 Min Read

உலக அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பன்முகக் கூட்டமைப்பாக பிரிக்ஸ் (BRICS) உருவெடுத்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதாரக் குழப்பங்கள் நிலவி வரும் தற்போதைய காலகட்டத்தில், இந்த அமைப்பின் 2026 ஆம் ஆண்டிற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இது உலக அரங்கில் மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படும் நிகழ்வாக பார்கப்படுகிறது..

பிரிக்ஸ் அமைப்பின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில், 2010-ல் தென்னாப்பிரிக்கா இணைந்தது. இந்த நாடுகளின் ஆங்கில முதல் எழுத்துக்களைக் கொண்டு ‘BRICS’ என இது பெயரிடப்பட்டது.

சமீபகாலமாக ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியா போன்ற புதிய நாடுகள் இந்த அணியில் இணைந்ததன் மூலம், இந்த அமைப்பு இன்று உலக மக்கள் தொகையிலும் பொருளாதாரத்திலும் பலம் வாய்ந்த ஒரு பெரும் சக்தியாக விரிவடைந்துள்ளது. எனினும், உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அவர்களுக்குள் ஒருமித்த முடிவுகளை எடுப்பது தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியாவுக்கு ஒரு சவாலான காரியமாக மாறியுள்ளது.

புதுடெல்லி வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்: முரண்பாடுகளும் ‘தலைவர் அறிக்கையும்’

இந்தியாவின் தலைமையின் கீழ், 2026 மே மாதத்தில் புதுடெல்லியில் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. பொதுவாக இத்தகைய கூட்டுக்கூட்டங்களின் நிறைவில், நாடுகள் ஒன்றிணைந்து ‘கூட்டு அறிக்கை’ (Joint Statement) ஒன்றை வெளியிடுவது மரபாகும். ஆனால், இம்முறை உறுப்பு நாடுகளுக்கு இடையே நிலவிய கடுமையான முரண்பாடுகள் காரணமாக கூட்டு அறிக்கை சாத்தியப்படாமல் போனது.

குறிப்பாக, மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து நாடுகளுக்கு இடையே நிலவிய மாறுபட்ட கருத்துக்களே இதற்குக் காரணமாக அமைந்தன. பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பினர்களான ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்தியப் போட்டி இதில் பிரதிபலித்தது. இரு நாடுகளுமே இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடுகள் என்பதால், இருதரப்பையும் காயப்படுத்தாமல் சமாதானம் செய்வது இந்திய வெளியுறவுத்துறைக்குப் பெரும் சவாலாக இருந்தது.

மேலும், கடல்வழி வர்த்தகப் பாதுகாப்பு இந்தியாவுக்கு மிக முக்கியமானது என்ற போதிலும், ஈரான் போன்ற நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கிய கடல் பகுதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்க முற்படுவதை இந்தியா எதிர்க்கிறது. இத்தகைய முரண்பாடகளுக்கும், இழுபறிகளுக்கும் மத்தியில், இந்தியா தனது சொந்தப் பொறுப்பில் “தலைவர் அறிக்கை” (Chair’s Statement) ஒன்றை வெளியிட்டது. அதில், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியிருந்தது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் மற்றும் உச்சிமாநாட்டிற்கான அடித்தளம்

சர்வதேச அரசியல் கொந்தளிப்பான சூழலில் இருக்கும் வேளையில், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி ஜூன் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் புதுடெல்லியில் நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் பங்கேற்றார். முரண்பாடுகளோடு முண்டியடித்துக் கொண்டிருக்கும் புவியரசியல் பின்னணியில் உலகளாவிய ரீதியில் நாடுகளுக்கிடையில்  நீண்டகால ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இக்கூட்டம் உதவும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பிரான்சில் நடந்த G7 உச்சிமாநாடு மற்றும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இக்கூட்டம் நடைபெற்றதால், இந்திய ஊடகங்கள் இதனை இந்தியாவின் பிரிக்ஸ் தலைமையின் முதன்மைப் பாதுகாப்பு நிகழ்வாக விவரித்தன. மேலும், இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் புதுடெல்லியில் நடைபெறவிருக்கும் 18-வது பிரிக்ஸ் தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு (BRICS Summit) ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.

உலகளாவிய அதிகாரப் போட்டியும் இந்தியாவின் இருமுனை ராஜதந்திரமும்

தற்போது உலக நாடுகள் கிழக்கு VS மேற்கு, மற்றும் ஏழை நாடுகள் VS பணக்கார நாடுகள் எனப் பல்வேறு துருவங்களாகப் பிரிந்து கிடக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, உலக அரசியல் சமநிலையில் அதிர்வுகள் எற்பட்டன. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலேயே கூட சில கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.

இந்தச் சூழலில், உக்ரைன் போரினால் மேற்கத்திய நாடுகளுடன் மோதி வரும் ரஷ்யாவும், அமெரிக்காவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள சீனாவும், ஈரானும் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை ஒரு “மேற்கத்திய எதிர்ப்பு” (Anti-Western) அணியாக மாற்றத் விரும்புகின்றன. ஆனால், இந்தியாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பானுடன் மிக நெருங்கிய நட்பும், பில்லியன் கணக்கிலான வர்த்தகமும் உள்ளது. எனவே, பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்காவிற்கு எதிரான ஒரு கூட்டணியாக மாறுவதை இந்தியா விரும்பவில்லை.

புதிய உறுப்பினர்களில் எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை அமெரிக்காவுடன் நல்ல நட்பில் இருக்கும் வேளையில், ஈரான் அமெரிக்காவைத் தீவிரமாக எதிர்க்கிறது. இந்த முரண்பட்ட நாடுகளை ஒரே பாதையில் பயணிக்க வைப்பதே இந்தியாவின் தற்போதைய ராஜதந்திரப் பரீட்சையாகும்.

பொருளாதார அழுத்தங்களும் இந்தியாவின் பதிலடியும்

கடந்த 2025 ஆம் ஆண்டு இந்தியாவுக்குப் புவிஅரசியல் ரீதியாகச் சவாலான ஆண்டாக இருந்தது. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% கூடுதல் வரி விதித்ததுடன், ரஷ்யாவுடனான ராணுவ மற்றும் எரிசக்தி உறவுகளைத் துண்டிக்குமாறு புதுடெல்லிக்கு அழுத்தம் கொடுத்தது.

இருப்பினும், அமெரிக்காவின் வர்த்தக அழுத்தங்களுக்கு அஞ்சாத இந்தியா, தனது பொருளாதாரத்தைப் பெருக்கப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. 2025-ல் பிரிட்டன், நியூசிலாந்து மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்தது. அதனைத் தொடர்ந்து, 18 ஆண்டுகள் இழுபறியாக இருந்த ஐரோப்பிய ஒன்றியத்துடனான (EU) வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை 2026 ஜனவரி 27 அன்று வெற்றிகரமாக முடித்தது. இந்தியாவின் இந்த வியூகத்தைக் கண்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உடனடியாக பெப்ரவரி 3 அன்று இந்தியாவுடன் ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

உலகளாவிய நன்மதிப்பும் இந்தியாவின் 4 முக்கிய இலக்குகளும்

கொரோனா பேரிடர் காலத்தில் ‘தடுப்பூசி மைத்ரி’ (Vaccine Maitri) திட்டத்தின் கீழ் 300 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு இலவசமாகவும் மலிவாகவும் வழங்கிய இந்தியாவின் செயல், உலக அரங்கில் அதன் தார்மீக மதிப்பை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மேற்கத்திய நாடுகளுடனும், அதே சமயம் ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளுடனும் சமமான உறவைப் பேணும் ஒரு ‘அன்புப் பாலமாக’ செயல்படும் தகுதியை இந்தியா பெற்றுள்ளது.

பிரிக்ஸ் என்பது ஒரே சிந்தனை உடைய நாடுகளின் கூட்டமைப்பு அல்ல; மாறாக அது வெவ்வேறு உள்நோக்கங்களும், தங்களுக்குள் முரண்பாடுகளும் கொண்ட நாடுகள் ஒன்றாக அமர்ந்திருக்கும் ஓர் தளம். இந்த அமைப்பில் சீனா தனது ஆதிக்கத்தைச் செலுத்தவும், எல்லைப் பிரச்சனைகளுக்கு மத்தியில் தன் சுயலாபத்திற்குப் பயன்படுத்தவும் முயல்வதை இந்தியா உன்னிப்பாகக் கவனித்துத் தடுத்து வருகிறது.

சீனாவின் ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்காமலும், இந்த பிளவுபட்ட கூட்டணியை உடைந்து போகாமல் தடுத்து, அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகளுடனான தனது சொந்த தேசிய-பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதே இந்தியாவின் தற்போதைய மிகப்பெரிய ராஜதந்திர சவாலும் வெற்றியும் ஆகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *