உலகளாவிய ‘எல் நினோ’ சவாலை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு!

8 Min Read

உலகின் முன்னணி காலநிலை நிபுணர்களால் வெளியிடப்பட்டுள்ள அண்மைய கணிப்புகளின்படி, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் எல் நினோ (El Nino) நிலைமையொன்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

உலகளாவிய ரீதியில் மழைவீழ்ச்சிகள், வெப்பநிலை மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காலநிலை சக்தியாகக் கருதப்படும் எல் நினோவின் விளைவாக, வறட்சி, வெள்ளப்பெருக்கு, கடுமையான வெப்பநிலை நிலைமைகள், காட்டுத்தீ மற்றும் உணவு உற்பத்தி குறைவடைதல் போன்ற அபாயங்கள் உலகளவில் அதிகரிக்கக்கூடும் என விஞ்ஞான ரீதியிலான கணிப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

உலக வங்கி மற்றும் உணவுச் சந்தை குறித்து மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகள் சுட்டிக்காட்டுவதற்கு அமைவாக, எல் நினோ நிலைமையினால் பாதிக்கப்படும் உலகளாவிய உணவு உற்பத்தி மற்றும் உணவு வழங்கல் சங்கிலிகள் காரணமாக, முக்கிய தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமான அளவு உயர்வதனால், உணவுப் பணவீக்கம் அதிகரிப்பதற்கான கணிசமான அபாயமும் காணப்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்தமட்டில், தெற்காசியப் பருவக்காற்று வடிவங்களில் எல் நினோ (El Nino) நிலைமைகள் தாக்கத்தை ஏற்படுத்துவதால், அந்தத் குறிப்பிட்ட காலப்பகுதியில் மழைவீழ்ச்சியில் மாற்றங்கள், நீண்ட வறண்ட காலப்பகுதிகள் மற்றும் சில பிரதேசங்களில் அதிக மழைவீழ்ச்சி ஏற்படுவதற்கான அபாயங்கள் காணப்படுகின்றன.

அதன்படி, முழு ஆண்டுக்குமான ஒட்டுமொத்த நீர் தேவையைப் பூர்த்தி செய்வது குறிப்பிடத்தக்க சவாலாக மாறுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. குறிப்பாக, இந்நிலைமையானது குடிநீர் விநியோகம், பிரதான உணவுப் பயிர்கள் மற்றும் ஏனைய உணவுப் பயிர்களின் உற்பத்தித் திறன் மற்றும் வலுசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

அதன்படி, எதிர்பார்க்கப்படும் எல் நினோ நிலைமைக்கு மத்தியில், அரசாங்கம் முக்கிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கூட்டுப் பொறிமுறையைச் செயல்படுத்த உத்தேசித்துள்ளது. குறிப்பாக, ஜனாதிபதி செயலகமானது தற்போதைய முன்கணிப்புகள் மற்றும் உலகளாவிய போக்குகளைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களினூடாகவும் தேசிய மட்டத்தில் அடையப்பட வேண்டிய முதன்மை இலக்குகளை அடைவதற்காக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும். அத்துடன், தேவையான கொள்கை ரீதியான தீர்மானங்கள் மற்றும் நிறுவன ரீதியான நடவடிக்கைகளை சமநிலையான அணுகுமுறையின் ஊடாகச் செயல்படுத்துவதற்கான மூலோபாயங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எல் நினோ நிலைமையை இந்த வருடத்திற்கு மாத்திரம் பாதிக்கக்கூடிய குறுகிய காலப் பிரச்சினையாக விஞ்ஞானிகள் கருதவில்லை. வரலாற்றுத் தரவுகளின்படி, இது படிப்படியாக தீவிரமடைந்து வருவதாகவே அவர்களின் மதிப்பீடு குறிப்பிடுகின்றது. எனவே, அரசாங்கமாக 2026-2027 ஆம் ஆண்டுக்கான எல் நினோ சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான திட்டங்களைத் தயாரிப்பதற்கு மேலதிகமாக, ஒவ்வொரு துறைக்கும் பொருத்தமான நீண்ட கால நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

வரவிருக்கும் உலகளாவிய நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராகுதல் தேசிய மட்டத்திலான நெருக்கடிகளுக்கு “முன்கூட்டியே தயாராகும் அணுகுமுறையை” (Anticipatory Approach) பின்பற்றி, அபாயங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்கான திட்டமிடப்பட்ட முறையான அபாய முகாமைத்துவ முறையொன்றைச் செயல்படுத்துவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். இங்கு, எல் நினோ நிலைமைக்கு மத்தியில் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய பிரதான சவாலான, நீர் வளங்கள் மீதான அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை எதிர்கொள்வதற்காக, அரசாங்கம் “ஒட்டுமொத்த நீர் தேவையையும் பூர்த்தி செய்வதற்கான சமநிலையான மற்றும் ஒருங்கிணைந்த நீர் வள முகாமைத்துவ அணுகுமுறையொன்றை” பின்பற்றத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, வரவிருக்கும் எல் நினோ நிலைமையின் கீழ், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் குறைந்தபட்ச பாதிப்பு ஏற்படும் வகையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் விநியோகக் கட்டமைப்புகளைத் தொடர்ச்சியாகப் பேணிச் செல்வதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும். அதனை அடைந்து கொள்வதற்காக பின்வரும் 03 பிரதான மூலோபாயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குடிநீர் பாதுகாப்பு – “தேசிய முன்னுரிமை”

மழைவீழ்ச்சி மாற்றங்கள் காரணமாக ஏற்படக்கூடிய நீர்ப் பற்றாக்குறை சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், எல் நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக இலங்கையின் எந்தவொரு பிரஜைக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் போவதற்கு இடமளிக்காதிருப்பது அரசாங்கத்தின் கொள்கையாகும்.

எதிர்வரும் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் எல் நினோவின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால், நீர் பயன்பாட்டை சமநிலைப்படுத்துவதற்காக RO (Reverse Osmosis) கட்டமைப்புகளை நிறுவுவது குறித்தும், தேசிய குடிநீர் பாதுகாப்புத் திட்டமொன்றைத் தயாரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பாதிப்புக்குள்ளாகக்கூடிய மாவட்டங்களை முன்கூட்டியே கண்டறிதல், நீர்த்தேக்க முகாமைத்துவ மூலோபாயங்கள், நீர் பரிமாற்ற முறைகள், அவசர நீர் விநியோகத் திட்டங்கள், குடிநீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல், கடுமையான நீர்ப் பற்றாக்குறை நிலவும் சந்தர்ப்பங்களில் குடிநீருக்கு முன்னுரிமை அளித்தல் ஆகிய காரணிகளைக் கருத்திற்கொண்டு குடிநீர் பாதுகாப்புத் திட்டமொன்றைத் தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்

ஒவ்வொரு பிரஜைக்கும் போதுமான, பாதுகாப்பான, போசாக்கான மற்றும் மலிவு விலையிலான உணவைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வது அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும். இதற்காக, தேசிய உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதன் கீழ், உணவுப் பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய துறைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்கான தேசிய மட்டத்திலான கண்காணிப்பு பொறிமுறையொன்றை வலுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் கீழ், ஆண்டின் வரவிருக்கும் மாதங்களுக்கான முன்னறிவிப்புத் தேவை மற்றும் தற்போதுள்ள கையிருப்பு நிலவரங்களுக்கு ஏற்ப நெல் மற்றும் ஏனைய பயிர்ச்செய்கை முன்னேற்றம், உணவுப் பயிர் உற்பத்தி அளவுகள், மீன்பிடி, கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சந்தை விலை, தற்போதைய தேசிய உணவு கையிருப்பு, இறக்குமதித் தேவைகள், மழைவீழ்ச்சி மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் மற்றும் குடிநீர் பெற்றுக்கொள்ளும் நிலைமை போன்ற காரணிகள் தொடர்பான தரவுகளைத் தொடர்ச்சியாகச் சேகரித்தல் மேற்கொள்ளப்படும்.

நீண்டகால உறுதிப்படுத்தப்பட்ட போதுமான உணவு விநியோகம்

தற்போது கிடைத்துள்ள காலநிலை முன்னறிவிப்புகளின்படி எல்-நினோ நிலையின் தாக்கங்கள் படிப்படியாக தீவிரமடைந்து வருவதால், எதிர்கால காலநிலை சவால்களுக்குத் தயாராவதற்கான வாய்ப்பாக, காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய விவசாய முறையொன்றை நிறுவுவது பிரதான நோக்கமாகும்.

எதிர்பார்க்கப்படும் சூழ்நிலைகளின் கீழ் உள்நாட்டு உணவு உற்பத்தி வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதால், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல், போதுமான உணவு கையிருப்பைப் பேணுதல், தேவையான சந்தர்ப்பங்களில் முன்கூட்டியே இறக்குமதித் திட்டங்களை வகுத்தல் மற்றும் மாற்று உணவு ஆதாரங்களைக் கண்டறிதல் ஆகியவற்றின் மூலம் தேசிய உணவு விநியோகத்தை உறுதிப்படுத்தி, நாட்டிற்குள் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்போது, அரசாங்கத்தினால் காலநிலைக்கேற்ற விவசாயம், வறட்சியைத் தாங்கக்கூடிய விதை வகைகளை ஊக்குவித்தல், செயற்திறனான நீர்ப்பாசனம் மற்றும் சிக்கனமான நீர் விநியோக அமைப்புகளை ஊக்குவித்தல், சிறந்த விவசாய நடைமுறைகளைப் பின்பற்றுதல், உணவு உற்பத்தியைப் பன்முகப்படுத்துதல் மற்றும் விவசாய ஆலோசனைச் சேவைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல்

உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும், நுகர்வோர் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக, உள்நாட்டு உற்பத்தி நிலைமை, சந்தை விநியோகச் சங்கிலி, இறக்குமதிச் சந்தை நிலவரங்கள் மற்றும் இறக்குமதித் தேவைகள், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வரித் திருத்தங்கள் என்பன உன்னிப்பாகக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும். குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைப் பாதிக்கக்கூடிய அசாதாரண விலை உயர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான வழிமுறைகளை வகுப்பதற்கும், தேவையான தலையீடுகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட போஷாக்குப் பாதுகாப்பு

உணவுப் பாதுகாப்பில், உணவு தாராளமாகக் கிடைப்பதையும் விநியோகத்தையும் உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், மக்களின் போதுமான போஷாக்கை உறுதிப்படுத்துவதும் முக்கியமாகும். குறிப்பாக மீன் உற்பத்தி குறைவடையக்கூடிய அபாயம் காணப்படுவதால், முட்டை, கோழி இறைச்சி மற்றும் கால்நடை உற்பத்தி போன்ற மாற்றுப் புரத ஆதாரங்களை ஊக்குவித்து, மக்களின் போசாக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக விசேட கவனம் செலுத்தப்படும்.

எல் நினோ நிலைமை, இலங்கை உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் முக்கிய மூல நாடுகளையும் பாதிக்கக்கூடும் என்பதால், இறக்குமதி விநியோகச் சங்கிலிகளின் அபாயங்களை முன்கூட்டியே கண்டறிந்து மாற்று விநியோக வழிகள் தயார் செய்யப்படும்.

இதன்போது, முக்கிய உணவு இறக்குமதி ஆதாரங்களான இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் எல்-நினோ தாக்கம் ஏற்படக்கூடும் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் பயிரிடப்படும் உணவுப் பயிர்கள் மற்றும் அதிலிருந்து இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் உணவு வகைகள் மற்றும் இறக்குமதி முறைகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து விரிவான ஆய்வொன்றை மேற்கொள்வதற்கும், அந்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் உணவு வகைகள் மற்றும் இறக்குமதி முறைகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்த தரவுகள் மற்றும் தகவல்களைக் கருத்திற்கொண்டு, உணவுப் பாதுகாப்பைத் தொடர்ச்சியாக உறுதிப்படுத்துவதற்குப் பொருத்தமான இறக்குமதி மாற்று வழிமுறைகள் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் தேசிய உணவுப் கொள்கை மற்றும் பாதுகாப்புக்கான குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய வலுசக்தி பாதுகாப்பு மற்றும் மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துதல்

எல் நினோ நிலைமை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் குறைவடைவதனாலும், அந்த நீர்த்தேக்கங்களின் நீர் குடிநீர்த் தேவைக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதனாலும் நீர்மின் உற்பத்திக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதாலும், நாட்டின் மின்சார விநியோகத்தின் தொடர்ச்சியைப் பேணுவதற்கும் அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. அதற்கமைய, நீர்மின் உற்பத்திக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை முன்கூட்டியே மதிப்பீடு செய்தல், நீர்த்தேக்க முகாமைத்துவம் மற்றும் வலுசக்தி திட்டங்களை ஒருங்கிணைத்தல், மாற்று வலுசக்தி ஆதாரங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்துதல் போன்ற வழிமுறைகளின் ஊடாக மின்சார விநியோகத்தின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்குக் தேவையான கொள்கை ரீதியான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால், எதிர்பார்க்கப்படும் எல் நினோ நிலைமையானது குடிநீர், உணவு மற்றும் வலுசக்தி பாதுகாப்புக்கு தேசிய ரீதியில் பாதிக்கக்கூடிய முதன்மையான அபாயமாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இத்துறைகளில் எழக்கூடிய பிரச்சினைகளைத் தனித்தனியாகக் கருதாது, அவை அனைத்தினதும் அடிப்படையாக விளங்கும் நீர் வள நிர்வாகத்தை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டமொன்றை செயல்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கையாகும்.

எல்-நினோ நிலைக்கு மத்தியில், முன்னுரிமைகளை அடையாளம் கண்டு உணவு, நீர் மற்றும் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நிறுவன ரீதியான, தொழில்நுட்ப மற்றும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளை அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த வேலைத்திட்டமாகச் செயல்படுத்துவதற்கும், தொடர்புடைய அனைத்துத் துறைகளுக்கும் சொந்தமான அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, எழக்கூடிய சூழ்நிலைகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கத் தேவையான தலைமைத்துவம் மற்றும் ஒருங்கிணைப்பை வழங்குவதற்கும் ஜனாதிபதி அலுவலகம் எதிர்பார்க்கிறது.

இறுதியாக, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் வானிலை சவால்களுக்கு அரசாங்கம் தனித்து முகங்கொடுக்க முடியாது என்றும், ஒரு நாடாக மக்களுடன் இணைந்து கூட்டாகவே எதிர்கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. இந்தச் சவாலை எதிர்கொள்வதில் மக்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *