சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு முடிவு கட்டுவோம்!

6 Min Read

*தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்க பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் வழங்கும் ஆலோசனைகள்.

 

சி றுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாளாந்தம் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. அதேசமயம் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நாட்டில் சமீப தினங்களாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) தரவுகளின்படி, இலங்கையில் ஆண்டுதோறும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் தொடர்பாக 10,000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகின்றன. உடல் ரீதியான துன்புறுத்தல்கள், பாலின அடிப்படையிலான துஷ்பிரயோகங்கள், புறக்கணிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெறும் இணையவழித் துஷ்பிரயோகங்கள் எனப் பல வடிவங்களில் சிறுவர்கள் பலர் அன்றாடம் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதுவொரு  உண்மைச் சம்பவம்…

‘அது ஒரு சிறுவர் இல்லம். நீதிமன்றம் மூலம் அங்கு வந்த அச்சிறுமிக்கு சுமார் 5 வயது இருக்கும். நாளுக்கு நாள் அச்சிறுமியின் நடத்தையில் ஏதோ ஒருவித மாற்றம். சில சமயங்களில் அவளின் நடத்தை சக சிறுமிகளுக்கு அருவருக்கத்தக்க வகையில் கூட இருந்தது. அவள் பாலியல் தேவையை வெளிப்படுத்தினாள். காணப்பட்டாள். தன் சக தோழியருடன் தவறாக நடந்து கொள்ள முற்பட்டாள். இதனை அறிந்து கொண்ட அவர்களின் கண்காணிப்பாளர்,  சிறுவர் இல்ல மேலாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். அப்போதுதான், அச்சிறுமியின் கடந்த காலம் பற்றி தெரியவந்தது. அவள், குழந்தைப் பருவத்தில் இருந்தே தனது சொந்த மாமாவினால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருந்துள்ளாள்.

இவ்விடயம் பொலிஸ் வரை செல்ல, அவள் அந்த சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டாள். ஆனால், அந்த உணர்வு குறித்த புரிதல் சிறிதளவு கூட அறியாத அந்த அப்பாவிச் சிறுமிக்கோ, தனக்கு முன்னர் கிடைத்த அந்த உணர்விலிருந்து விடுபட முடியாதிருந்தது.   அதன் பின்னர், அந்த சிறுவர் காப்பகத்தின் முயற்சியில், அவள் குணமடைந்தாள். இவ்வாறு சிறுவர் காப்பகங்கள் பலவற்றில் உள்ள சிறுவர் பலருக்கும் ஒவ்வொரு கதையுண்டு.

இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவதற்கும், சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும்   சட்ட மற்றும் சமூக ரீதியிலான மாற்றங்கள் அவசியமாகின்றன. இதைக் கருத்திற்கொண்டு, களனி பல்கலைக்கழகத்தின் பாலின ஆய்வுகள் மையம், NCPA, ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் UNICEF ஆகியவை இணைந்து நடத்திய சர்வதேச சிறுவர் பாதுகாப்பு மாநாட்டில், சிறுவர் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நீதி அமைச்சும் ‘சிறுவர்களுக்கு உகந்த நீதி மறுசீரமைப்பை’ (Child-friendly justice reform) முன்னெடுக்க உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) செயற்பாடுகள், சட்ட நடவடிக்கைகள், புள்ளிவிபரங்கள் மற்றும் தற்போதைய நிலைவரங்கள் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்க பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:

 

கே: NCPA இற்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் தற்போதைய புள்ளிவிபரங்கள் பற்றிக் கூறுங்கள்.

பதில்: NCPA இற்கு பொதுவாக மாதத்துக்கு 600 முதல் 1,000 முறைப்பாடுகள் வரை வருகின்றன. 2026ஆம் ஆண்டின் தரவுகளின்படி, ஜூலை மாதம் 30ஆம் திகதிக்குள் மொத்தம் 5,687 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் (4,950 முறைப்பாடுகள்) ஒப்பிடுகையில் சுமார் 800 முறைப்பாடுகள் அதிகமாகும்.

 

கே:  முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஏன்?

பதில்: விழிப்புணர்வுத் திட்டங்கள் அதிகரிக்கப்பட்டதால் மக்கள் விழிப்புணர்வு பெற்று முறைப்பாடு அளிப்பது அதிகரித்துள்ளது. இது NCPA மீதான நம்பிக்கையைக் காட்டுகிறது. சமூகவியலாளர்களின் கூற்றுப்படி, பதிவாகும் முறைப்பாடுகளை விட 7 மடங்கு அதிகமான சம்பவங்கள் சமூகத்தில் நடக்கக் கூடும்.

 

கே:  அதிகமாக பதிவாகும் முறைப்பாடுகள் எவை?

பதில்: பெற்றோர், ஆசிரியர் அல்லது தற்காலிகப் பொறுப்பாளர்களால் ஏற்படும் உடல்/மன துன்புறுத்தல், கைவிடுதல் மற்றும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுதல், பாடசாலைக்குச் செல்லாமை, குழந்தைத் தொழிலாளர், பாலியல் துஷ்பிரயோகம், இணையவழி துஷ்பிரயோகம் மற்றும் பிச்சை எடுக்க வைத்தல் என  முறைப்பாடுகள் பதிவாகின்றன. இதில், அதிக முறைப்பாடுகள் கொழும்பு, கம்பஹா, குருநாகல், இரத்தினபுரி, அநுராதபுரம் ஆகியவற்றிலிருந்து பதிவாகியுள்ளன.

 

கே:  NCPA இற்கு பொதுமக்கள் முறைப்பாடுகளை எவ்வாறு தெரிவிக்கலாம்?

பதில்: சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகளை 1929 என்ற 24 மணிநேர இலவச உதவி எண்ணுடன் தொடர்பு கொண்டு, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய எந்த மொழியிலும் தெரிவிக்கலாம். எமக்கு வரும் மொத்த புகார்களில் 80% இதன் மூலமே வருகின்றன. அழைத்த அரை மணிநேரத்துக்குள் ‘குறிப்பு எண்’ வழங்கப்படும். அல்லது, National Child Protection Authority, No. 330, Thalawathugoda Road, Madiwela எனும் முகவரியிலும் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.  முறைப்பாடு அளிப்பவரின் பெயர், முகவரி இரகசியமாக பேணப்படுவதோடு, பெயரற்ற முறைப்பாடுகளும் ஏற்கப்படும்.

 

கே:  பெறப்படும் முறைப்பாடுகள் மீது எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன?

பதில்: முதலில், சம்பவ இடத்துக்குரிய பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் அனுப்பப்படுகின்றன. 1998ஆம் ஆண்டின் 50ஆம் எண் NCPA சட்டத்தின் 14(u) பிரிவின் கீழ், எந்தவொரு பொலிஸ் நிலைய விசாரணையையும் கண்காணிக்கும் அதிகாரம் NCPA இற்கு உள்ளது. அதனடிப்படையில், முக்கிய வழக்குகளை NCPA இல் இயங்கும் பொலிஸ்துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவு நேரடியாக விசாரிக்கிறது. குழந்தை தொழிலாளர் முறைப்பாடுகளுக்கு தொழில் திணைக்களத்துடனும், இணையவழிக் குற்றங்களுக்கு ‘Sri Lanka CERT, CCID மற்றும் TRC’ ஆகியவற்றுடனும் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 

கே:   இலங்கையில் சிறுவர் பாதுகாப்புக்கான சட்டப் பிரிவுகள் எவை?

பதில்: தண்டனைச் சட்டக் கோவையில் (1995, 1998, 2006 திருத்தங்கள்) உள்ள முக்கிய பிரிவுகள்:

பிரிவு 308 மற்றும் 308A – உடலியல் மற்றும் மனரீதியான துன்புறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பு.

பாலியல் வன்கொடுமை – 16 வயதுக்குட்பட்ட பெண்களுடன் சம்மதத்துடனோ/ இன்றியோ உடல் ரீதியாக தொடர்பு கொள்வது குற்றம்.

பிரிவு 365B – 16 வயதுக்குட்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்படும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம். பிரிவு 345 – பாலியல் தொல்லைகள் (சொற்கள், சைகைகள், தொடுதல்).

பிரிவு 286 – 18 வயதுக்குட்பட்டோரின் ஆபாசப் படங்களை வைத்திருப்பது, பகிர்வது. (விற்பனை செய்தல், பாலியல் தொழில், பிச்சை எடுக்க வைப்பதும் குற்றங்களாகும்).

கே: நீதிமன்ற விசாரணைகளின் போது சிறுவர்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் எவை?

பதில்: பாதிக்கப்பட்ட குழந்தைகள்/ பெண்களின் அடையாளம், புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிட்டால் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ICCPR சட்டப் பிரிவு 5(2)இன்படி குழந்தையின் நலனுக்கே முதலிடம், குழந்தைகள் நீதிமன்றத்துக்கு வந்து அச்சமடைவதைத் தவிர்க்க, 2000ஆம் ஆண்டு முதல் NCPA காணொளி சாட்சியப் பதிவு முறையைச் செயல்படுத்தி வருகிறது.

கே: NCPA முன்னெடுக்கும் விழிப்புணர்வுத் திட்டங்கள் எவை?

பதில்: உடல் ரீதியான தண்டனைகளைத் தடுக்க இதுவரை 4,000 அதிபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாடசாலைகளில் மாணவத் தலைவர்கள் மூலமும், பல்கலைக்கழக மாணவர்களைத் தேர்ந்தெடுத்தும் விழிப்புணர்வு பரப்பப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு மாவட்ட/ பிரதேச அதிகாரிகளால் மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

 

கே:   இவ்விடயத்தில் பெற்றோருக்கு உள்ள பொறுப்புகள் எவை?

பதில்: சுமார் 80% துஷ்பிரயோகங்கள் தெரிந்த நபர்கள், உறவினர்கள் மற்றும் ஆசிரியர்களாலேயே இழைக்கப்படுகின்றன. 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் செய்யும் குற்றங்களுக்கு அவர்களே சட்டப்படி பொறுப்பாவார்கள்.

அதனால், எத்தகைய சந்தர்ப்பத்திலும் பெற்றோர் தம் பிள்ளைகள் மீது கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். பிள்ளைகளில் காணப்படும் சிறு மாற்றங்களையும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். இணையத்தில், மற்றவர்களின் தனியுரிமை மற்றும் மதிப்பை பேணுவது குறித்த ‘டிஜிட்டல் எழுத்தறிவை’ பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். தொலைபேசி சேவை நிறுவனங்களின் உதவியுடன் Parental Control செயலிகளைப் பயன்படுத்தி, பிள்ளைகள் இணையத்தில் செலவிடும் நேரத்தையும் தேடல்களையும் கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் ஒரே நாளில் இணையத்துக்கு அடிமையாவதில்லை; படிப்படியாகவே இது நடக்கிறது.

எனவே, பெற்றோர் விழிப்புடன் இருந்து ஆரம்பத்திலேயே அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும்.

சிறுவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள NCPA இணையதளத்தை (www.childprotection.gov.lk) பார்வையிடலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *