வரலாறு என்பது அரசியல் தலைவர்களை அவர்கள் நடைமுறைப்படுத்திய கொள்கைகளுக்காகவும் திட்டங்களுக்காகவும் மட்டுமல்ல; ஒரு நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணங்களில் அவர்கள் வெளிப்படுத்திய தார்மீகத் துணிச்சலுக்காகவுமே முதன்மையாக நினைவுகூர்கிறது. சில நேரங்களில் அந்தத் துணிச்சல் போர் வெற்றிகளிலோ, பொருளாதாரச் சீர்திருத்தங்களிலோ வெளிப்படுவதில்லை; மாறாக, கடந்தகால வரலாற்றுத் தவறுகளை நேர்மையுடன் ஒப்புக்கொள்ளும் ஒரு உயர்ந்த பண்பில் வெளிப்படுகிறது.
2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி, அவுஸ்திரேலிய வரலாற்றில் ஒரு மிகமுக்கியமான நாளாகப் பதிவானது. அன்று, அப்போதைய அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் (Kevin Rudd), அந்நாட்டின் பூர்வகுடிகளான ஆபோரிஜினல் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுக்கு, குறிப்பாகத் தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிக்கப்பட்டுத் துயருற்ற ‘திருடப்பட்ட தலைமுறைகளுக்கு’ (Stolen Generations)பாரா ளுமன்றத்தில் நாட்டின் சார்பில் அதிகாரபூர்வமாகத் தனது மன்னிப்பைத் தெரிவித்தார்.
அவர் நெஞ்சாரக் கூறிய “நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்” என்ற வார்த்தைகள், நீண்டகாலக் காயங்களை ஆற்றி, அவுஸ்திரேலியாவின் இன நல்லிணக்கப் பாதையில் ஒரு புதிய விடியலையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தின.
அந்த மன்னிப்பு கடந்துபோன வரலாற்றை மாற்றியமைக்கவில்லை எனினும், அரசு செய்த தவறுகளை அரசு அமைப்பே ஒப்புக்கொள்ள முடியும் என்பதையும், பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணியத்தை மீட்டெடுக்க முடியும் என்பதையும் உலகிற்கு உணர்த்தியது. தற்போதைய தலைமுறை கடந்தகால அரசின் செயல்களுக்குப் பொறுப்பேற்கத் தேவையில்லை என்ற முன்னாள் பிரதமர் ஜோன் ஹோவர்டின் நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டு, அரசு முறையான பொறுப்பை ஏற்பதே நல்லிணக்கத்தின் முதல் படி என்பதை கெவின் ரட் உறுதிப்படுத்தினார்.
இதேபோன்று கனடா, தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் தங்களது வரலாற்று அநீதிகளை ஏற்றுக்கொண்டு நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.
உண்மையை நேர்மையாக ஒப்புக்கொள்ளாமல் உண்மையான நல்லிணக்கம் சாத்தியமில்லை என்ற பொதுவான செய்தியையே இம்மாற்றங்கள் உலகிற்கு வழங்கி வருகின்றன.
இலங்கையின் நவீன வரலாற்றில் 1983 ‘கறுப்பு ஜூலை’ சம்பவம் ஒரு ஆழமான வடுவாகும்.
ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரிழப்பு, சொத்துக்கள் மற்றும் வாழ்வாதார அழிவுகள் எனப் பெரும் துயரைச் சந்தித்ததோடு, பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக புலம்பெயர நேரிட்டது. இந்நிகழ்வு நாட்டின் அரசியல் மற்றும் சமூக அமைப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
கடந்த 2026 ஜூலை 24 அன்று, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கறுப்பு ஜூலை நிகழ்வை நினைவுகூர்ந்து, தமிழ் மக்கள் அனுபவித்த வரலாற்றுத் துயரத்தை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார்.
இது நாட்டின் நல்லிணக்கப் பாதையில் ஒரு குறிப்பிடத்தக்க நேர்மறை நகர்வாகப் பலராலும் வரவேற்கப்பட்டது.
எனினும், 43 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அரசின் சார்பிலான முழுமையான உத்தியோகபூர்வ மன்னிப்பு இன்னும் இடம்பெறவில்லை என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடையே நிலவுகிறது. அரசியல் தாக்கங்கள், சட்டரீதியான சிக்கல்கள் மற்றும் வரலாற்றுப் பார்வைகளில் உள்ள வேறுபாடுகளே இதற்குக் காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.




