நீதிபதிகளின் சேவையை நீடிக்கும் யோசனைக்கு சட்டத் துறையினர் எதிர்ப்பு

1 Min Read

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள யோசனைக்கு சட்டத் துறை சார்ந்த அனைவரும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் அனைவரும் தமது கரங்களை உயர்த்தி இதற்கு எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுக் காலை கொழும்பில் நடைபெற்ற அச்சங்கத்தின் விசேட பொதுச்சபை கூட்டத்தையடுத்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ள மேற்படி யோசனைக்கு நீதிபதிகளும் எதிர்ப்பு தெரிவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், நேற்றைய தினம் நேரடியாக வருகை தந்த மற்றும் சூம் தொழில்நுட்பம் ஊடாக இணைந்து கொண்ட அனைத்து சட்டத்தரணிகளும் அந்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார். அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை ஏற்க முடியாது என்றும் அது நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட பலத்த அடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப் போவதாகவும் பொதுச்சபையின் ஏகோபித்த சம்மதம் கிடைத்துள்ளதால், இதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த யோசனை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நீதித்துறை கட்டமைப்பிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமாயின் அதன் விளைவுகள் நீண்டகால அடிப்படையிலேயே அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *