இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோவை மைதானத்தில் தலையால் முட்டிய விவகாரத்தில், தனது ஆக்ரோஷமான எதிர்வினை சரியானது என்று இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆரம்ப வீரர்; யஷஸ்வி ஜெய்ஸ்வால் நியாயப்படுத்தியுள்ளார். அத்துடன், என்ன நடந்தது என்று தெரியாமல் தீர்ப்பு வழங்க வேண்டாம் என்றும் தனது விமர்சகர்களுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று முன்தினம் (23) அசித்த பெர்னாண்டோவின் பந்துக்கு ஆட்டமிழந்த ஜெய்ஸ்வாலை, பெர்னாண்டோ அக்ரோஷமான முறையில் வழியனுப்பினார். அப்போது மீண்டும் திரும்பி வந்த ஜெய்ஸ்வால், பெர்னாண்டோவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மற்ற இலங்கை வீரர்கள் இருவரையும் சமாதானப் படுத்தினர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, ஜெய்ஸ்வால் தனது எல்லையை மீறிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவின் கீழ் சமூக ஊடகத்தில் நேரடியாகப் பதிலளித்த ஜெய்ஸ்வால், தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார்.
‘அவர் என்ன சொன்னார் என்று உங்களுக்குத் தெரியாது என்றால், தயவுசெய்து தீர்ப்பு எழுதாதீர்கள். யாராவது எல்லையைத் தாண்டினால், அதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இந்த புதிய இந்தியா போராடி பதிலடி கொடுக்கும்’ என்றார்.
எனினும் இந்திய துப்பாட்ட பயிற்சியாளர் சிதன்ஷு கொடக், ஜெய்ஸ்வால் அத்தனை நெருக்கமாக சென்றிருக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.
‘பந்து வீச்சாளர் ஏதோ ஒரு கருத்தைத் தெரிவித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது ஒருவேளை அந்த நேரத்தின் பதற்றத்தில் சொல்லப்பட்டிருக்கலாம். ஜெய்ஸ்வால் அவ்வளவு நெருக்கமாகச் சென்றிருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஆனால், அந்த நேரத்தின் பதற்றத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதுண்டு,’ என்று கொடக் கூறினார்.
எனினும் அசித் பெர்னாண்டோவை நெருங்கிச் சென்ற ஜெயஸ்வால் தனது தலைக் கவசத்தை பெர்னாண்டோவின் நெற்றியில் படும் வகையில் ஆக்ரோஷமாக செயற்பட்டார். இது உடல் ரீதியான மோதலை ஏற்படுத்தும் வகையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த மோதலில் ஈடுபட்ட ஜெய்ஸ்வால் மற்றும அசித் பெர்னாண்டோ இருவருக்கு சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 25 வீத அபராதத்தை விதித்துள்ளது. இந்த இரு வீரர்களுக்கும் அவர் அவர்களின் நடத்தை பதிவில் தலா ஒரு தகுதி இழப்புப் புள்ளியை சேர்க்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சியின் 2.12 விதியினை மீறியுள்ளதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 24 மாதங்களில் இரண்டு வீரர்களும் தங்களது முதல் தகுதி இழப்புப் புள்ளியைப் பெற்றுள்ளனர்.




