ஆர்ஜன்டீன நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ‘இந்த முடிவு கடினமாக இருந்தபோதும் அதற்கான நேரம் வந்துவிட்டதாக’ மெஸ்ஸி தனது ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார்.
39 வயதாகும் மெஸ்ஸி 2022 கட்டாரில் ஆர்ஜன்டீன அணித் தலைவராக பிஃபா உலகக் கிண்ணத்தை வென்றதோடு, ஆர்ஜன்டீன அணிக்காக 207 போட்டிகளில் ஆடி 125 கோல்களை பெற்றதன் மூலம் அந்த அணிக்காக அதிக போட்டிகளில் ஆடியவர் மற்றும் அதிக கோல்களை பெற்றவராகவும் சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் தனது ஓய்வு குறித்து மெஸ்ஸி வெளியிட்ட அறிவிப்பில், தேசிய அணிக்கு அனைத்தையும் செய்ததாகவும் இன்னும் கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘நேரம் குறைந்து கொண்டிருக்கிறது, அத்தியாயங்கள் முடிவுக்கு வருகின்றன. இது என்னை ஆழமாகப் பாதிக்கும் ஓர் அத்தியாயமாகும். தேசிய அணியின் ஒரு பகுதியாக இருப்பதை நான் நேசிக்கிறேன், நேசித்து வந்திருக்கிறேன், இனியும் எப்போதும் நேசித்துக்கொண்டே இருப்பேன்.
என்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டேன். இனி கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் எஞ்சியிருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், எனக்குப் பின்னால் உண்மையிலேயே திறமையான பல இளம் வீரர்கள் உருவாகி வருகின்றனர். அவர்களுக்கும் தங்களது வாய்ப்பைப் பெற உரிமை உள்ளது’ என்றார் மெஸ்ஸி.
கடந்த ஓகஸ்ட் ஆரம்பத்தில் தனது தந்தையின் மரணத்தை அடுத்து தனது கால்பந்து எதிர்காலம் தொடர்பில் யோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது தந்தை ஜோர்ஜ் சுகவீனம் காரணமாக 68 வயதில் மரணித்தார்.
எனினும் அமெரிக்காவின் மேஜர் லீக் கால்பந்தில் இன்டர் மியாமி அணிக்காக ஆடும் அவர் தனது கழக மட்ட போட்டிகளில் தொடர்ந்தும் ஆடவுள்ளார். மியாமி அணியுடனான அவரது ஒப்பந்தம் எதிர்வரும் 2028 வரை உள்ளது.
மெஸ்ஸி 2005 ஆம் ஆண்டிலேயே ஆர்ஜன்டீனாவுக்காக தனது முதல் போட்டியில் ஆடினார். ஹங்கேரிக்கு எதிரான நட்புறவுப் போட்டியில் 63 ஆவது நிமிடத்தில் முதல் முறை களமிறங்கினார். எனினும் அவர் அந்தப் போட்டியில் ஒரு நிமிடத்திற்குள் சிவப்பு அட்டை பெற்று வெளியேறி இருந்தார்.
என்றபோதும் அவர் சர்வதேச கால்பந்தில் மிகச் சிறந்த வீரர் ஒருவராக உருவெடுத்ததோடு ஒரு உலகக் கிண்ணம் மற்றும் இரண்டு கோபா அமெரிக்கா கிண்ணங்களை வென்றார். உலகக் கிண்ண வரலாற்றில் பிரான்ஸின் கைலிய எம்பாப்பேவுக்கு (22) அடுத்து அதிக கோல்களாக் 21 கோல்களை பெற்றுள்ளார். அத்துடன் சர்வதேச கால்பந்து போட்டியில் தனது போட்டியாளரான போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டாவுக்கு (146) அடுத்து அதிக கோல்களாக 125 கோல்களை பெற்றுள்ளார்.
மெஸ்ஸி 2016 இலும் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வை அறிவித்தபோதும் அந்த முடிவை மாற்றிக் கொண்டார். அமெரிக்காவில் நடைபெற்ற இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆர்ஜன்டீன அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்த மெஸ்ஸி எட்டு கோல்கள் மற்றும் நான்கு கோல் உதவிகளை பெற்றார்.




