இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை மோசமாக இழந்ததை அடுத்து பாகிஸ்தான் அணியில் இருந்து ஏழு வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பதோடு புதுமுக வீரர்களாக ஐவர் அழைக்கப்பட்டு தலைமை பயிற்சியாளரும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு இங்கிலாந்து சென்றிருக்கும் பாகிஸ்தான் அணி முதல் இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது. இதனையடுத்து எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள மூன்றாவது போட்டிக்கான அணியிலேயே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதில் போட்டிகளில் ஆடிய முஹமது ரிஸ்வான், இமாமுல் ஹக், சல்மான் அலி அகா, அலி உஸ்மான் மற்றும் குர்ரம் ஷஸாதுடன் ஆமிர் ஜமால் மற்றும் முஹமது அவைஸ் போட்டிகளில் ஆடாமலேயே நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர். பதிலாக ஏழு வீரர்கள் அணிக்கு அழைக்கப்பட்டிருப்பதோடு இவர்களில் துடுப்பாட்ட வீரர்களான சமி அயூப் மற்றும் அல்துல்லா பஸால் மாத்திரமே டெஸ்ட் ஆடிய அனுபவம் பெற்றவர்களாவர்.
தவிர சப்ராஸ் அஹமட் மற்றும் அவரது உதவியாளர் உமர் குல் ஆகியோர் விடுவிக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் பயிற்சியாளர் மைக் ஹேசன் மற்றும் அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷ்லி நொப்கே ஆகியோர் அணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணி ஆடிய முதல் இரு டெஸ்ட் போட்டிகளின் நான்கு இன்னிங்ஸ்களிலும் 200இற்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றிருந்தது. இதனால் ஹெடிங்லியில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸாலும் லோட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 194 ஓட்டங்களாலும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் பெர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.




