தெஹிவளை கௌடான வீதி விளையாட்டு மைதானத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் ஆராயும் பொருட்டு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே கடந்த வெள்ளிக்கிழமை (28) விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
பிரதேச இளைஞர், யுவதிகள் மற்றும் பொதுமக்களுக்கு உயர்தர விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகளை வழங்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்போது மைதானத்தின் தற்போதைய நிலவரங்களை களப்பரிசீலனை செய்த அமைச்சர், அபிவிருத்திப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசேகர, தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபையின் முதல்வர், மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுனில் குமார கமகே, கிராமிய மற்றும் நகர்புற விளையாட்டு மைதானங்களை முழுமையாக அபிவிருத்தி செய்து மக்களிடம் கையளிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இம்மைதானத்தின் குறைபாடுகளையும் விரைவாக நிவர்த்தி செய்து, அதனை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.




