இந்தியா முதல் இன்னிங்ஸில் பெற்ற 503 ஓட்டங்களின் முன் இலங்கை தடுமாற்றம்

2 Min Read

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸுக்காக 503 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் இலங்கை அணி நேற்று (24) இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின்போது 8 ஓட்டங்களை பெறுவதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறு வரும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளின் கடைசி நேரத்திலேயே இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை ஆரபித்தது. எனினும் இரண்டாவது ஓவரிலேயே லஹிரு உதார ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். பின்னர் நைட் வொட்ச்மனாக வந்த பிரபாத் ஜயசூரிய 2 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததை அடுத்து இரண்டாவது நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.

இதன்படி இலங்கை அணி 3 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. கமில் மிஷார ஆட்டமிழக்காது 5 ஓட்டங்களுடன் உள்ளார். நேற்றைய தினம் பகல் போசண இடைவேளைக்கு பின்னர் கணிசமான நேரம் மழையால் தாமதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.  முன்னதாக நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக ஆடி ஓட்டங்களை அதிகரித்தது. முதல் நாளில் தேவ்துத் படிக்கல் சதம் பெற்ற நிலையில் நேற்றை தினத்தில் மத்திய பின் வரிசையில் வந்த த்ரூவ் ஜூரலும் சதம் பெற்றார். 177 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 9 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 115 ஓட்டங்களைப் பெற்றார்.

குறிப்பாக முதல் நாளில் உபாதை காரணமாக அரங்கு சென்ற ரிசாப் பண்ட் நேற்று மீண்டும் துடுப்பெடுத்தாடகளமிறங்கி 89 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பெற்றார். இதன்மூலம் இந்திய அணி 138 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 503 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.

இலங்கை சார்பில் அசித்த பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு பிரபாத் ஜயசூரிய மற்றும் கேஷர நுவன்த ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இன்று (25) போட்டியின் மூன்றாம் நாளாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *