இங்கிலாந்துக்கு எதிரான எதிர்வரும் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணிக்கு முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் அழைக்கப்படவுள்ளனர்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி முதலில் மூன்று டி20 சர்வதேச போட்டிகளில் ஆடிய பின்னர் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி இந்த இரு தொடர்களும் ஆரம்பமாகவுள்ளன.
கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை அடுத்து அணித் தலைமை பெறுப்பை இழந்த அசலங்க, போட்டிகளில் சோபிக்கத் தவறியதை அடுத்து கடந்த ஜூனில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த 2025 ஜூன் தொடக்கம் அவர் 19 இன்னிங்ஸ்களில் 255 ஓட்டங்களையே பெற்றார்.
எவ்வாறாயினும் அண்மையில் நடந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் சோபித்த அசலங்க கோல் கலன்ட் அணிக்காக மூன்று அரைச்சதங்களைப் பெற்றார். அந்த ஓட்டங்கள் அவர் மீண்டும் இலங்கை டி20 அணியில் இடம்பெற வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவர் லங்கா பிரீமியர் லீக் தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றவரான லஹிரு உதாரவுடன் இலங்கை அணியில் இணையவுள்ளார். 32 வயது ஆரம்ப வீரர் லங்கா பிரீமியர் லீக்கில் வீரர் ஒருவரின் தனிப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாக ஆட்டமிழக்காது 132 ஓட்டங்களுடன் ஒன்பது இன்னிங்ஸ்களில் மொத்தம் 434 ஓட்டங்களைப் பெற்றார். இரு கைகளாலும் பந்து வீசும் தரிந்து ரத்நாயக்கவும் டி20 குழாத்திற்கு அழைக்கப்படவுள்ளார்.
மறுபுறம் அடுத்து ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான அணியை கட்டி எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கை ஒருநாள் அணியில் எதிர்பாராத மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அடுத்த மாதம் 35 வயதை எட்டும் முன்னாள் அணித் தலைவர் ஷானக்க மீண்டும் ஒருநாள் அணிக்கு அழைக்கப்படவுள்ளார்.
ஷானக்க அண்மைக் காலமாக ஒருநாள் அணியில் இடம்பெறத் தவறி வருகின்றபோதும் மத்திய வரிசையை பலப்படுத்தும் வகையில் அனுபவ வீரராக அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க தேர்வாளர்கள் தீர்மானித்துள்ளனர். 2016 இல் ஒருநாள் அறிமுகம் பெற்ற தசுன் ஷானக்க 71 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடி இரு சதங்கள் மற்றும் நான்கு அரைச் சதங்களுடன் 1,299 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
புதுமுக வீரரான சுழல் வீரர் சச்சிந்து கொலம்பகேவும் இலங்கை ஒருநாள் குழாத்திற்கு இணைக்கப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் சோபித்ததை அடுத்தே அவருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான முடிவுற்ற டெஸ்ட் தொடரில் உபாதை காரணமாக ஆடாத மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் ஆரம்ப வீரர் பத்தும் நிசங்க இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




