படிகலின் மற்றொரு சதத்துடன் இந்திய அணி 300 ஓட்டங்கள்

2 Min Read

இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடும் இந்திய அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று (23) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் ஒரே மாற்றமாக கமில் முஷார தனது கன்னி டெஸ்ட் போட்டியில் ஆட அழைக்கப்பட்டார். முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய ஆரம்ப வீரர் நிஷான் மதுஷ்கவுக்கு பதிலே கமில் மிஷார அணியில் இடம்பெற்றார்.

முதல் டெஸ்டில் உபாதைக்கு உள்ளான தினேஷ் சந்திமாலுக்கு பதில் மாற்று வீரராக இணைக்கப்பட்ட பசிந்து சூரியபண்டார இரண்டாவது டெஸ்டிலும் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இந்நிலையில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இந்திய அணி 37 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. கே.எல். ராகுல் 18 ஓட்டங்களுடன் வெளியேறியதோடு மறுமுனை ஆரம்ப வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வெளியேறினார்.

எனினும் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அணித் தலைவர் சுப்மன் கில் மற்றும் தேவ்தத் படிகல் 120 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர். கில் 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோதும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய படிகல் மற்றுமொரு சதத்தைப் பெற்றார். 193 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 12 பௌண்டரிகளுடன் 117 ஓட்டங்களைப் பெற்றார்.

படிகல் இதுவரை ஆடிய தனது ஆறு டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் இரண்டு சதம் மற்றும் ஒரு அரைச் சதத்தைப் பெற்று 69.66 ஓட்ட சராசரியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ஐந்தாவது வரிசையில் வந்த ரிஷப் பண்ட் 3 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் லஹிரு குமாரவின் பந்தில் மணிக்கட்டு பகுதியில் காயத்துக்கு உள்ளாகி அரங்கு திரும்பியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. முதல் நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் நிதானமாக ஆடி வந்த ரவிந்தியர ஜடேஜா 43 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதன்படி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது இந்திய அணி 85 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இலங்கை சார்பில் அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு லஹிரு குமார மற்றும் கேஷர நுவன்த ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இன்று (24) போட்டியின் இரண்டாவது நாளாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *