டயமன்ட் லீக்கில் தங்கம் ​வென்ற தரங்க மீண்டும் முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு

2 Min Read

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற லோசான் டயமன்ட் லீக்கில் தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்க ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேற்றம் காணவுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 88.14 மீற்றர் தூரம் எறிந்தே தரங்க முதல் இடத்தைப் பிடித்தார். இதன்போது முன்னாள் உலக மற்றும் ஒலிம்பிக் சம்பியனான நீரஜ் சொப்ரா 88.05 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். முன்னாள் உலக சம்பியனான கிரனடாவின் அன்டர்சன் பீட்டர்ஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

எனினும் கடந்த ருமேஷ் தரங்கவை பின்தள்ளி உலகத் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்ட ஜெர்மனியின் ஜூலியன் வெபர் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. வெபர் ஒரு வாரத்திற்கு முன் நடைபெற்ற ஐரோப்பிய தடகள போட்டி ஒன்றில் 90.40 மீற்றர் தூரத்தை எறிந்ததை அடுத்தே கடந்த வாரம் தரங்கவை பின்தள்ளி முதல் இடத்தைப் பிடித்திருந்தார்.

இதனால் இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்ட தரங்க, தற்போது பெற்றிருக்கும் வெற்றியை அடுத்து இந்த வாரம் உலக ஈட்டி எறிதல் தரவரிசை புதுப்பிக்கப்படும்போது மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேற்றம் காண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தரங்க இந்த மாத ஆரம்பத்திலேயே உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டிருந்தார். இது உலக தடகள தரவரிசை ஒன்றில் இலங்கை வீரர் ஒருவர் முதல் இடத்திற்கு முன்னேறும் முதல் சந்தர்ப்பமாகவும் இருந்தது.

இந்த பருவத்தில் உலக ஈட்டி எறிதலில் அதிக தூரம் எறிந்த வீரராக சாதனையை தக்கவைத்திருக்கும் தரங்க அண்மையில் நடந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில் அவர் லோசான் டயமன்ட் லீக்கில் தங்கப் பதக்கம் வென்றிருப்பது இந்தப் பருவத்தில் அவரது மூன்றாவது டயமன்ட் லீக் வெற்றியாகும். முன்னதாக அவர் ரோம் டயமன்ட் லீக்கில் 92.62 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றதோடு தொடர்ந்து டோஹா டயமன்ட் லீக்கையும் வென்றிருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *