இந்தியாவுடன் ஒரு தசாப்தத்தில் முதல் வெற்றிக்காக இலங்கை நாளை களத்தில்

2 Min Read

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் நாளை (15) ஆரம்பமாகவுள்ளது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரின் ஓர் அங்கமாக இந்தத் தொடர் நடைபெறுகிறது. எனவே, 2025–27 உலக டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம் காண்பதற்கு இந்தத் தொடர் இரு அணிகளுக்குமே முக்கியமானதாக அமையவுள்ளது. இந்தப் புள்ளிப் பட்டியலில் இந்தியா 5ஆவது இடத்திலும் இலங்கை 6ஆவது இடத்திலும் உள்ளன.

இரு அணிகளும் உபாதை காரணமாக பிரதான வீரர்களை இழந்த நிலையிலேயே முதல் டெஸ்டில் களமிறங்கவுள்ளன. இலங்கை ஆரம்ப வீரர் பத்தும் நிசங்க மற்றும் விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ் ஆகியோர் முதல் டெஸ்டில் ஆடவில்லை. இதனால் நிரோஷன் திக்வெல்லவுக்கு மூன்று ஆண்டுகளின் பின்னர் அணியில் வாய்ப்பு கிடைத்திருப்பதோடு நிசங்க இல்லாத நிலையில் ஆரம்ப வீரர்களாக நிஷான் மதுஷ்க மற்றும் லஹிரு உதார ஆகியோர் செயற்படலாம்.

மறுபுறம் இந்திய அணி முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜெஸ்பிரிட் பும்ராவை உபாதையால் இழந்திருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும். அதேபோன்று சாய் சுதர்ஷனர் மற்றும் வொஷிங்கடன் சுந்தர் ஆகியோரும் உபாதையால் அவதியுறுகின்றனர்.

இலங்கை – இந்திய அணிகள் நான்கு ஆண்டுகளின் பின்னரே டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆடவுள்ளன. இரு அணிகளும் கடைசியாக 2022 இல் இந்திய மண்ணில் ஆடிய இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2–0 என முழுமையாக வென்றிருந்தது.

இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றில் கடைசியாக வெற்றியீட்டியது 2015 ஆம் ஆண்டு இதே காலி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலாகும். அது தொடக்கம் ஆடிய 10 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி எட்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்ததோடு இரண்டு ஆட்டங்கள் சமநிலை பெற்றன.

ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் இதுவரை ஆடிய 46 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியால் 7 போட்டிகளில் மாத்திரமே வெல்ல முடிந்ததோடு இந்திய அணி 22 வெற்றிகளைப் பெற்ற நிலையில் 17 போட்டிகள் சமநிலை பெற்றன. அதிலும் இலங்கை அணி வெற்றியீட்டிய அந்த 7 டெஸ்ட் போட்டிகளும் சொந்த மண்ணில் ஆடிய ஆட்டங்களாகும்.

இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக இதுவரை இரண்டு டெஸ்ட் தொடர்களை வென்றிருப்பதோடு அந்த இரண்டு தொடர்களுமே சொந்த மண்ணில் நடந்த போட்டிகளாகும். எனவே இலங்கை தனது சொந்த மண்ணில் ஆடுவதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டால் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *