இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக் தொடரின் ஐந்தாவது வாரத்திற்கான போட்டிகள் இன்று (14) ஆரம்பமாகவுள்ளன. இதில் அப்கன்ட்ரி லயன்ஸ் அணி இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் வெற்றியீட்டி முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் அடுத்த மூன்று இடங்களில் இருக்கும் ரினோன், கொழும்பு மற்றும் சீ ஹோக்ஸ் அணிகள் கடும் போட்டியாக உள்ளன.
கொழும்பு, சுகததாச அரங்கில் இன்றைய தினம் நடைபெறும் ஐந்தாவது வாரத்தின் முதல் போட்டியில் புளூ ஈகள்ஸ் மற்றும் கொழும்பு கால்பந்து கழகங்கள் மோதவுள்ளன. புளூ ஈகள்ஸ் இதுவரை ஆடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு சமநிலையுடன் இரண்டு தோல்விகளைப் ஏழாவது இடத்தில் உள்ளது. எனவே கொழும்பு அணி இன்றைய தினம் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும்.
புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ரினோன் விளையாட்டுக் கழகம் நாளை தனது ஐந்தாவது லீக் போட்டியில் ரெட் ஸ்டாரை எதிர்கொள்ளவுள்ளது. ஆறாவது இடத்தில் இருக்கும் ரெட் ஸ்டார் அணி முந்தைய போட்டிகளில் சற்று தடுமாற்றத்தை வெளிப்படுத்திய நிலையில் ரினோன் கடும் சவாலாக அமைய வாய்ப்பு உள்ளது.
சுப்பர் லீக் புள்ளிப் பட்டியலில் அனைத்து போட்டிகளிலும் வென்று முதல் இடத்தில் இருக்கும் அப் கன்ட்ரி லயன்ஸ் அணிக்கும் அனைத்து போட்டிகளிலும் தோல்வியுற்று கடைசி இடத்தில் இருக்கும் ரட்னம் அணிக்கும் இடையிலான லீக் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் அப்கன்ட்ரி லயன்ஸ் மீண்டும் ஒரு வெற்றியுடன் தனது ஆதிக்கத்தை தக்கவைப்பதற்கும் ரட்னம் அணி தொடரில் முதல் வெற்றியை பெறவும் முயற்சிக்கும்.
டிபன்டர்ஸ் அணியும் இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் ஒன்றில் கூட வெல்லாத நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை சீ ஹோக்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதேபோன்று ஐந்தாவது வாரத்தின் கடைசி போட்டியாக ஓகஸ்ட் 18 ஆம் திகதி நடைபெறும் ஆட்டத்தில் நியூ யங்ஸ் மற்றும் புளூ ஸ்டார் அணிகள் மோதவுள்ளன.
அனைத்து போட்டிகளும் சுகததாச அரங்கில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.




