மெஸ்ஸியின் சாதனை கோல்கள் மூலம் ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய நடப்புச் சம்பியன் ஆர்ஜன்டீனா பிஃபா உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. பிரான்ஸ் மற்றும் நோர்வே அணிகளும் அடுத்த சுற்றை உறுதி செய்துள்ளன.
டலாசில் ஜே குழுவுக்காக நடந்த போட்டியில் மெஸ்ஸி 38 மற்றும் மேலதிக நேரத்தில் பெற்ற இரட்டை கோல்கள் ஆர்ஜன்டீனாவின் வெற்றியை உறுதி செய்தது. மெஸ்ஸி இந்த கோல்கள் மூலம் உலகக் கிண்ணத்தில் அதிக கோல்கள் பெற்ற மிரோஸ்லாவ் கிளோஸின் (16) சாதனையை முறியடித்தார். இன்று (24) தனது 39 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் மெஸ்ஸி உலகக் கிண்ணத்தில் பெற்ற மொத்த கோல்கள் எண்ணிக்கை தற்போது 18ஆக அதிகரித்துள்ளது.
இம்முறை ஆர்ஜன்டீன அணி முதல் இரு போட்டிகளிலும் புகுத்திய ஐந்து கோல்களையுமே மெஸ்ஸியே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஐ குழுவுக்காக இலங்கை நேரப்படி நேற்று (23) அதிகாலை 2.30 இற்கு பிலடல்பியாவில் ஆரம்பமான ஈராக் அணிக்கு எதிரான போட்டியில் கிலியான் எம்பாப்பே புகுத்திய இரட்டை கோல்கள் மூலம் பிரான்ஸ் 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. இதன்மூலம் அந்த அணி அடுத்த சுற்றான 32 அணிகள் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
போட்டியின் முதல் இரு கோல்களையும் புகுத்திய எம்பாப்பே உலகக் கிண்ணத்தில் அதிக கோல்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் 16 கோல்களை பெற்று கிளோஸுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். பிரான்ஸ் அணி சார்பில் ஒஸ்மானே டம்பேல் 66 ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலை புகுத்தினார்.
இந்தப் போட்டியின்போது உலகக் கிண்ணத்தில் முதல்முறை சீரற்ற காலநிலையால் இடையூறு ஏற்பட்டது. கடுமையான இடி மின்னல் காரணமாக போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டம் இரண்டு மணி நேரம் தாமதித்தே ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.
ஐ குழுவில் மற்றொரு போட்டியாக நோர்வே அணி செனகலை நேற்று எதிர்கொண்டது. நியூயோர்க்கில் நடந்த இந்தப் போட்டியில் நோர்வே நட்சத்திர வீரர் எர்லிங ஹாலன்ட் புகுத்திய இரட்டை கோல்களினால் அந்த அணி 3–2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
ஹாலன்ட் தற்போது நோர்வே அணிக்காக தொடர்ச்சியாக 12 போட்டிகளில் கோல் புகுத்தி இருப்பதோடு கடந்த ஆறு போட்டிகளில் குறைந்தது இரண்டு கோல்களையேனும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் 1–2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்ற ஜோர்தான் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. சான் பிரான்சிஸ்கோவில் ஜே குழுவுக்காக இலங்கை நேரப்படி நேற்றுக் காலை இந்தப் போட்டி நடைபெற்றது. ஜேர்தான் அணி பிஃபா உலகக் கிண்ணத்தில் ஆடுவது இதுவே முதல் முறையாகும்.
நாளைய போட்டிகள்
மு.ப. 12.30 – சுவிட்சர்லாந்து எதிர் கனடா (குழு பி), வான்குவர்
மு.ப. 12.30 – பொஸ்னியா எதிர் கட்டார் (குழு பி), சியாட்டில்
மு.ப. 3.30 – ஸ்கொட்லாந்து எதிர் பிரேசில் (குழு சி), மியாமி
மு.ப. 3.30 – மொரோக்கோ எதிர் ஹெய்ட்டி (குழு சி), அட்லான்டா
மு.ப. 6.30 – செக்கியா எதிர் மெக்சிகோ (குழு ஏ), மெக்சிகோ சிட்டி
மு.ப. 6.30 – தென்னாபிரிக்கா எதிர் தென் கொரியா (குழு ஏ) மொன்டரே
மெஸ்ஸியின் புதிய சாதனைகள்
உலகக் கிண்ணத்தில் அதிக கோல்கள் பெற்றவர் – 18
அதிக உலகக் கிண்ண போட்டிகளில் ஆடியவர் – 28
உலகக் கிண்ணத்தில் அதிக போட்டிகளில் வென்றவர் – 18
உலகக் கிண்ணத்தில் அதிக நிமிடங்கள் ஆடியவர் – 2,489




