தெற்காசிய விளையாட்டு விழாவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிற்போடுவதற்கு தெற்காசிய ஒலிம்பிக் பேரவையின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் கடந்த வாரம் நடைபெற்ற தெற்காசிய ஒலிம்பிக் பேரவையின் செயற்குழுக் கூட்டத்தில் இலங்கை உட்பட 7 தெற்காசிய நாடுகளின் தேசிய ஒலிம்பிக் குழு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் இலங்கை சார்பில் தேசிய ஒலிம்பிக் குழுவின் பொருளாளர் லெப்டினன்ட் கேர்ணல் (ஓய்வு) அஜித் சியம்பலாபிட்டிய பங்கேற்றார். இதன்போது 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழா 2027 ஏப்ரல் 3 முதல் 11 ஆம் திகதி வரை இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் ஆகிய நகரங்களில் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2026 ஜனவரியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, இப்போட்டிகள் 2027 மார்ச் 23 முதல் 31 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் போட்டி ஏற்பாட்டுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாலேயே ஒரு மாதம் பிற்போடப்பட்டுள்ளது.14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் 28 விளையாட்டுப் பிரிவுகளில் 346 பதக்கங்களுக்காக போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதுடன், சுமார் 3,200 விளையாட்டு வீரர்கள் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 25 விளையாட்டுப் பிரிவுகளில் பெண்களுக்கான போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் விளையாட்டு சமூகத்தின் ஏனைய உறுப்பினர்கள் உட்பட சுமார் 4,200 பேர் தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடைசியாக 2004 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டு விழாவை இஸ்லாமாபாத்தில் நடத்தியிருந்த நிலையில், 23 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




