டி20 உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.
ஹெட், மார்ஷ் அரைசதம் விளாசல்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி பல்லேகேலேவில் நடந்தது. முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 181 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

ட்ராவிஸ் ஹெட் 56 (29) ஓட்டங்களும், மிட்செல் மார்ஷ் 54 (27) ஓட்டங்களும் விளாசினர். துஷன் ஹேமந்தா 3 விக்கெட்டுகளும், சமீரா 2 விக்கெட்டுகளும், தீக்ஷணா, வெல்லாலகே மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் குசால் பெரேரா 1 ரன்னில் ஆட்டமிழக்க, பதும் நிசங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும் அவுஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.

நொறுக்கிய நிசங்கா
இந்தக் கூட்டணியின் அதிரடியில் இலங்கை அணியின் ஸ்கோர் மளமளவென உயர, 38 பந்துகளில் 51 ஓட்டங்கள் (1 சிக்ஸ், 6 பவுண்டரிகள்) எடுத்திருந்த குசால் மெண்டிஸ் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ருத்ர தாண்டவம் ஆடிய பதும் நிசங்கா (Pathum Nissanka) 52 பந்துகளில் 100 ஓட்டங்கள் விளாச (5 சிக்ஸர், 10 பவுண்டரிகள்), இலங்கை அணி 18 ஓவர்களிலேயே 184 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கையின் வெற்றியைப் பார்த்து சனத் ஜெயசூரியா (Sanath Jayasuriya) உட்பட மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
போட்டிக்கு பின் பேசிய இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானகா, “சமீப காலத்தில் இது ஒரு சிறந்த ஆட்டம். இது எப்படி நடந்தது என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. பவர்ப்ளேயில் மதீஷா பத்திரனாவை இழந்த பிறகும் நாங்கள் ரொம்ப உறுதியாக இருந்தோம்.
எல்லா நடவடிக்கைகளும் நடந்த விதத்தைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக பதுமின் சதம். அவர் அடுத்த போட்டியிலும் இதைத் தொடர்வார். பல ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் இறுதியாக அடுத்த சுற்றுக்குள் நுழைகிறோம்” என்கிறார்.





