சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) தரவரிசையில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகள் முதல் முறையாக உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளன. இதன்படி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் நடப்புச் சம்பியன் ஆர்ஜன்டீனா மற்றும் பிரான்ஸ் (03), இங்கிலாந்து (04) அணிகள் அரையிறுதியில் ஆடவுள்ளன.
இதில் இலங்கை நேரப்படி நேற்று (12) காலை நடைபெற்ற சுவிட்சர்லாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீன அணி 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. இதன்படி ஆர்ஜன்டீன அணி அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. இங்கிலாந்து அணி நேற்று நடந்த நோர்வேயுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் 1–2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
கன்சாஸ் சிட்டி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்திலேயே லியோனல் மெஸ்ஸி பரிமாற்றிய பந்தை கோலாக மாற்றினார் அலெக்சிஸ் மெக். இதன்மூலம் முதல் பாதியில் ஆர்ஜன்டீன அணி 1–0 என முன்னிலை பெற்றது. எவ்வாறாயினும் 67 ஆவது நிமிடத்தில் நெருங்கிய தூரத்தில் இருந்து டான் நிடோயே மூலம் சுவிட்சர்லாந்து பதில் கோல் திருப்பியது.
பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் சுவிஸ் முன்கள வீரர் பரில் எம்போலோ 72 ஆவது நிமிடத்தில் வைத்து சர்ச்சைக்குரிய இரண்டாவது பஞ்சள் அட்டையை பெற்று வெளியேறியது பெரும் திருப்பமாக அமைந்தது. முதலில் ஆர்ஜன்டீனாவின் லியான்ட்ரோ பரேடெஸுக்கு நடுவர்; மஞ்சள் அட்டையைக் காண்பித்திருந்தார். ஆனால், வீடியோ உதவி நடுவர் சோதனையில் எம்போலோவுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.
இதனால் போட்டியின் முக்கிய தருணத்தில் சுவிட்சர்லாந்து அணி 10 வீரர்களுடன் ஆட வேண்டி ஏற்பட்டது. மேலதிக நேரத்திற்குச் சென்ற போட்டியில் ஆர்ஜன்டீன அணி மேலும் இரு கோல்களை புகுத்தியது.
இதேவேளை மியாமியில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் நோர்வே அணிகள் அரையிறுதிக்கு முன்னேற கடைசி நிமிடல் வரை போராடின.
முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோலை புகுத்திய நிலையில் இரண்டாவது பாதியில் வெற்றி கோலுக்கான போராட்டம் அதிகரித்தது.
எவ்வாறாயினும் வீடியோ நடுவர் உதவி முறை இந்தப் போட்டியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
52 ஆவது நிமிடத்தில் நோர்வே இரண்டாவது கோலை புகுத்தினாலும் வீடியோ நடுவர் முறையின் தலையீட்டால் அது மறுக்கப்பட்டது. அப்போது ஹாலன்ட் செய்த தவறு கோல் மறுக்கப்படுவதற்கு காரணமானது.
இந்நிலையில் மேலதிக நேரத்தில் இங்கிலாந்து வெற்றி கோலை புகுத்தியது. இங்கிலாந்து அணிக்காக ஜூட் பெல்லிங்ஹாம் இந்த இரண்டு கோல்களையும் பெற்றார்.
முன்னதான நடைபெற்ற காலிறுதிகளில் மொரோக்கோ அணியை வீழ்த்திய பிரான்ஸும் பெல்ஜியத்தை வீழ்த்திய ஸ்பெயினும் அரையிறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில் 1994 ஆம் ஆண்டு பிஃபா தரவரிசை அறிமுகப்படுத்தப்பட்டது தொடக்கம் அதில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகள் அரையிறுதியில் முதல் முறையாக ஆடவுள்ளன. இம்முறை உலகக் கிண்ணத்தில் இந்த நான்கு அணிகளும் அரையிறுதி வரை சந்திக்காத வகையிலேயே பிஃபா போட்டி அட்டவணையை குழுநிலைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
****
அரையிறுதிப் போட்டிகள்
ஜூலை 15, மு.ப. 12.30 – பிரான்ஸ் எதிர் ஸ்பெயின், டலாஸ் அரங்கு
ஜூலை 16, மு.ப. 12.30 – ஆர்ஜன்டீனா எதிர் இங்கிலாந்து, அட்லாண்டா அரங்கு




