பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (10) ஆரம்பமாகிறது. நேற்று (09) நள்ளிரவு தாண்டி அதிகாலை 1.30 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதுகின்றன.
மொத்தம் 48 அணிகளுடன் ஆரம்பமான இம்முறை உலகக் கிண்ணத்தில் 96 போட்டிகள் நிறைவிலேயே உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான அணிகள் எட்டாக சுருங்கி உள்ளன. இதில் ஐரோப்பாவின் ஆறு அணிகள், ஆபிரிக்காவின் ஓர் அணி மற்றும் தென் அமெரிக்காவின் ஓர் அணியே அரையிறுதிக்கு முந்திய சுற்றில் ஆடுகின்றன.
குறிப்பாக முதல் முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் மொரோக்கோ, பெல்ஜியம், நோர்வே, சுவிட்சர்லாந்து அணிகள் களமிறங்கி இருப்பதோடு மீண்டும் ஒருமுறை கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் நடப்புச் சம்பியன் ஆர்ஜன்டீனா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் போட்டியிடுகின்றன.
கடந்த முறை உலகக் கிண்ணத்தில் அரையிறுதி வரை முன்னேறிய மொரோக்கோ அணி கடந்த முறை இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற பிரான்ஸுக்கு கடும் சவாலாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனினும் பிரான்ஸின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பேவின் ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு தீர்க்கமாக இருக்கும்.
மொரோக்கோ அணி கடைசியாக ஆடிய 34 போட்டிகளில் தோல்வியுறாதபோதும் பிரான்ஸுக்கு எதிராக இதுவரை வெற்றியீட்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை நேரப்படி நாளை (11) அதிகாலை 2.30 மணிக்கு இங்கில்வூட்டில் நடைபெறும் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் தோவுள்ளன. ஐரோப்பிய சம்பியனான ஸ்பெயின் எதிரணிக்கு ஒரு கோல் கூட விட்டுக் கொடுக்காமலேயே காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. கடைசியாக ஸ்பெயினை எதிர்கொண்ட 11 போட்டிகளிலும் பெல்ஜியத்தால் வெற்றியீட்ட முடியவில்லை. எவ்வாறாயினும் பெல்ஜியம் 1986 உலகக் கிண்ண காலிறுதியில் ஸ்பெயினை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் சனிக்கிழமை (11) அதிகாலை 2.30 இற்கு மியாமியில் நடைபெறும் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நோர்வே அணிகள் மோதவுள்ளன. இங்கிலாந்து உலகக் கிண்ண காலிறுதியில் ஆடுவது 11 ஆவது முறை என்பதோடு நோர்வே காலிறுதிக்கு முன்னேறியது முதல் முறையாகும். என்றபோது நோர்வேயின் கோல் இயந்திரமான ஏர்லிங் ஹார்லன்ட் அந்த அணியை எந்த உச்சத்திற்கும் அழைத்துச் செல்ல வாய்ப்பு உள்ளது.
நடப்புச் சம்பியன் ஆர்ஜன்டீனா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் ஆடும் கடைசி காலிறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 இற்கு கன்சாஸில் ஆரம்பமாகும். லியோனல் மெஸ்ஸியின் ஆர்ஜன்டீன அணி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அந்த அணி 32 மற்றும் 16 அணிகள் சுற்றுகளில் கேப் வர்டே மற்றும் எகிப்திடம் தடுமாறியே வெற்றியீட்டியது. இதனை சுவிட்சர்லாந்து சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.




