பிஃபா இடம் நடுவர்களுக்கு எதிராக எகிப்து முறையீடு

1 Min Read

ஆர்ஜன்டீனாவுக்கு எதிரான தனது 16 அணிகள் சுற்றில் பணியாற்றிய போட்டி அதிகாரிகளை உலகக் கிண்ணத்தில் இருந்து நீக்கும்படி சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் (பிஃபா) எகிப்து கோரியுள்ளது.

அட்லாண்டாவில் நடந்த இந்தப் போட்டியில் மத்தியஸ்தர்கள் இரட்டை நிலைப்பாட்டை காண்பித்ததாக குறிப்பிட்டிருக்கும் எகிப்து கால்பந்து சம்மேளனம் அது குறித்து விசாரணை நடத்தும்படி பிஃபாவை கோரியுள்ளது.

போட்டியின் இரண்டாவது பாதியில் எகிப்து 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, வீடியோ உதவி நடுவர் ஆய்வுக்குப் பின்னர் மொஸ்தபா ஸிகோ அடித்த கோல் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. கோல் பெரும் தருணத்தில் எகிப்தின் மத்தியகள வீரர் மர்வான் அத்தியா, ஆர்ஜன்டீனாவின் லிசாண்ட்ரோ மார்டினஸின் காலை மிதித்ததாக நடுவர் தீர்ப்பளித்தார்.

அதேபோன்று ஆர்ஜன்டீனாவில் பெனால்டி பகுதியில் வைத்து எகிப்தின் நட்சத்திர வீரர் மொஹமட் சலா மீது எதிரணியினர் முறையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் எகிப்து குற்றம்சாட்டுகிறது. எனினும் ஆர்ஜன்டீனா கடைசி நேரத்தில் பெற்ற கோல்களினால் 3–2 என வெற்றியீட்டி காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.

போட்டி நடுவர் குழு செய்த மோசமான தவறுகள் மற்றும் இரட்டை நிலைப்பாடான தீர்ப்புகள் காரணமாக எகிப்து அணி உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற நேர்ந்ததாகக் கூறி, பிரான்ஸ் நடுவர் பிரான்கொயிஸ் லெடெக்சியருக்கு எதிராக விசாரணை நடத்தும்படி எகிப்து கால்பந்து சம்மேளனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *