12 ஆண்டுகளின் பின் ஜெர்மனி அணி ‘நொக் அவுட்’ சுற்றுக்கு முன்னேற்றம்

2 Min Read

ஐவரி கோஸ்ட் அணிக்கு எதிராக கடைசி நிமிட கோல் மூலம் 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய ஜெர்மனிய, பிஃபா உலகக் கிண்ணத்தின் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

கனடாவின் டொரொன்டோ நகரில் ஈ குழுவுக்காக இலங்கை நேரப்படி நேற்று (21) அதிகாலை 1.30 இற்கு நடைபெற்ற இந்தப் போட்டியில் ஐவரி கோஸ்ட் முதல் பாதியில் 1–0 என முன்னிலை பெற்றது. எவ்வாறாயினும் இரண்டாவது பாதியில் செயற்பட்ட ஜெர்மனி முன்கள வீரர் டெனிஸ் உன்டேவ் 68 ஆவது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். போட்டி சமநிலையை நோக்கி நெருங்கியபோது மீண்டும் செயற்பட்ட உன்டேவ் மேலதிக நேரத்தில் வெற்றி கோலை திருப்பினார். ஜெர்மனி அணி 12 ஆண்டுகளின் பின்னரே நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி 2018 மற்றும் 2022 உலகக் கிண்ணங்களில் குழு நிலை போட்டிகளுடன் வெளியேறி இருந்தன. அந்த அணி 2014 இல் கடைசியாக நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியபோது உலகக் கிண்ணத்தையும் வென்றது.

ஏற்கனவே இம்முறை உலகக் கிண்ணத்தில் ஏ குழுவில் மெக்சிகோ மற்றும் டி குழுவில் அமெரிக்க அணிகள் 32 அணிகள் கொண்ட அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எஃப் குழுவுக்காக நேற்றுக் காலை நடைபெற்ற துனீசியாவுக்கு எதிரான போட்டியில் 4–0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வெற்றியீட்டியது. இந்தத் தோல்வியை அடுத்து துனீசிய அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

நேவு லியோனில் நடைபெற்ற இந்தப் போட்டி உலகக் கிண்ண வரலாற்றில் இடம்பெற்ற 1000 ஆவது ஆட்டமாக இருந்தது. போட்டி ஆரம்பித்த நான்காவது நிமிடத்திலேயே டைச்சி காமாடா ஜப்பான் சார்பில் கோல் எண்ணிக்கையை ஆரம்பித்தார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி ஜப்பான் மேலும் மூன்று கோல்களை புகுத்தி வெற்றியீட்டியது. துனீஷியாவுடன் ஏற்கனவே துருக்கி மற்றும் ஹெய்ட்டி அணிகள் நொக் அவுட் சுற்று வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஈ குழுவுக்காக இலங்கை நேரப்படி நேற்று நடந்த ஈக்வடோர் மற்றும் கரகாஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கோலின்றி சமநிலையுற்றது.


நாளைய போட்டிகள்

மு.ப. 2.30 – பிரான்ஸ் எதிர் ஈராக் (குழு ஐ), பிலடல்பியா

மு.ப. 5.30 – நோர்வே எதிர் செனகல் (குழு ஐ), ஈஸ்ட் ரதர்போர்ட்

மு.ப. 8.30 – ஜோர்தான் எதிர் அல்ஜீரியா (குழு ஜே), சான்டா கிளாரா

பி.ப. 10.30 – போர்த்துக்கல் எதிர் உஸ்பகிஸ்தான் (குழு கே), ஹவுஸ்டன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *