சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால் முக்கோண தொடர் இந்திய ஏ வசம்

2 Min Read

வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தினால் இலங்கை ஏ அணிக்கு எதிரான முக்கோண ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய ஏ அணி 66 ஓட்டங்களால் வெற்றியீட்டி சம்பியன் கிண்ணத்தை வென்றது. இதன்போது 15 வயது சூர்யவன்ஷி 11 பந்துகளில் அரைச்சதம் பெற்று ஏ தரநிலை கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்தார்.

ஆப்கானிஸ்தான் ஏ அணியும் பங்கேற்ற இந்த முக்கோண தொடரின் இறுதிப் போட்டி நேற்று (21) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இந்திய ஏ அணிக்கு சூர்யவன்சி பந்துகளை பறக்கவிட்டார்.

வெறுமனே 29 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 10 பௌண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 94 ஓட்டங்களை விளாசினார். இதில் அவர் 11 பந்துகளில் அரைச்சதம் பெற்றபோது ஏ தரநிலை கிரிக்கெட் போட்டியில் அதிவேக அரைச் சதத்தை பதிவு செய்தார். இலங்கையின் கௌஷால் வீரரத்ன 2005–26 பருவத்தில் 12 பந்துகளில் அரைச் சதம் பெற்ற சாதனையையே அவர் முறியடித்தார்.

அத்துடன் 2026-24 பருவத்தில்; டெஸ்மேனியாவுக்கு எதிராக தெற்கு அவுஸ்திரேலிய அணிக்காக 29 பந்துகளில் சதம் பெற்று ஏ தரநிலை கிரிக்கெட்டில் அதிவேக சதம் பெற்ற ஜென் பிரேசர் மக்கர்க்கின் சாதனையையும் சூர்யவன்ஷி நெருங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யவன்ஷியின் இந்த அதிவேக ஓட்டத்தின் உதவியுடன் இந்திய ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 377 ஓட்டங்களை பெற்றது.

மத்திய வரிசையில் அணித் தலைவர் திலக் வர்மா 67 ஓட்டங்களை பெற்றபோதும் அதனை பெறுவதற்கு அவர் 90 பந்துகளுக்கு முகம்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் குகதாஸ் மாதுலனுடன் ரவிந்து பெர்னான்டோ மற்றும் வனுஜ சஹன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலெடுத்தாட வந்த இலங்கை ஏ அணியினர் சவாலான வெற்றி இலக்கிற்கு முன் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆரம்ப வீரராக வந்த நிரோஷன் திக்வெல்ல 17 பந்துகளில் 25 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்ததோடு மறுமுனையில் அவிஷ்க பெர்னாண்டோவால் 3 ஓட்டங்களையே பெற முடிந்தது.

மத்திய வரிசையில் சதீர சமரவிக்ரம (52) மற்றும் வனுஜ சஹன் (62) அரைச்சதம் பெற்று நம்பிக்கை தந்தபோதும் அவர்களால் தமது ஆட்டத்தை தொடர முடியாமல் போனது. இறுதியில் இலங்கை ஏ அணி 47.1 ஓவர்களில் 311 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இந்திய ஏ அணி சார்பில் யாஷ் தகூர மற்றும் விப்ராஜ் நிகம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *