ஈரானில் அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து குவைட் மீது பதில் தாக்குதல்

4 Min Read

போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிக்கு மத்தியிலும் ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்திய இருப்பதோடு பதிலுக்கு ஈரான் குவைட் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. லெபனானிலும் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை அதிகரித்து வருகிறது. இந்தப் பதற்றங்களுக்கு மத்தியில் எண்ணெய் விலை நேற்று (01) மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த வார இறுதியில் ஈரானின் கொருக் மற்றும் கேஷிம் தீவில் உள்ள ஈரானிய ராடார் மற்றும் ஆளில்லா விமானத் தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டது. பதிலடியாக குவைட்டில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் நேற்று கூறியது. மூன்று மாத போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் ஆரம்பத்தில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் ஈரான் மற்றும் அமெரிக்கா அவ்வப்போது பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த வியாழக்கிழமையும் இரு தரப்புக்கும் இடையே இதேபோன்ற மோதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

‘சர்வதேச கடல் பகுதியில் செயற்பட்ட அமெரிக்காவின் எம்.கியூ.-1 ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது உட்பட ஈரானின் தீவிரமான செயற்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈரானின் வளைகுடா கரை மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

‘பிராந்திய கடல்வழிப் பாதையில் பயணிக்கும் கப்பல்களுக்குத் தெளிவான அச்சுறுத்தலாக இருந்த ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள், ஒரு தரைக்கட்டுப்பாட்டு நிலையம் மற்றும் இரண்டு ஒருவழித் தாக்குதல் நடத்தும் ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை அமெரிக்கப் போர் விமானங்கள் விரைவாக அழித்தன’ என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்காவினால் பயன்படுத்தப்படும் அமெரிக்க தளம் ஒன்றை இலக்கு வைத்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை நேற்று தெரிவித்தது.

அமெரிக்காவின் பிரதான தளம் அமைந்திருக்கும் குவைட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை இடைமறித்திருப்பதோடு அங்கு நாடு முழுவதும் சைரன் ஒலியும் எழுப்பப்பட்டதாக குவைட் அரச செய்தி நிறுவனமான குனா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆரம்பித்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை இழுபறியுடன் நீடித்து வருவதோடு இருதரப்புக்கும் இடையே முக்கிய விடயங்களில் தொடர்ந்தும் முரண்பாடு இருந்து வருகிறது.

இந்தப் போரின் தொடர்ச்சியாக லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்ததோடு தற்போது அங்கு தனது ஆக்கிரமிப்பை இஸ்ரேல் விரிவுபடுத்தி இருப்பது நிலைமையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது. லெபனானின் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்புடன் சண்டையிட்டு வரும் இஸ்ரேலியப் படையை மேலும் முன்னேறுவதற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படையின் சரமாரித் தாக்குதல்கள் தொடரும் நிலையில் நேற்று மேலும் அறுவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தெற்கு நகரான பரைகாவில் இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதோடு அருகாமை நகரான டவுலில் இடம்பெற்ற மற்றொரு ஆளில்லா விமானத் தாக்குதலில் சிரிய நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டதாக அது தெரிவித்தது.

லிடானி நதிக்கு வடக்கே அமைந்திருக்கும் கிபிர்சிரில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மேலும் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ஏற்கனவே தெற்கு லெபனானின் 900 ஆண்டு பழைமையான பியூட்போர்ட் கோட்டை மற்றும் அதன் மூலோபாயம் மிக்க மலைத் தொடர்களை இஸ்ரேலியப் படை கைப்பற்றிய நிலையில் லெபனானில் தரைவழி நடவடிக்கையை விரிவுபடுத்தும்படி இராணுவத்திற்கு அறிவுறுத்தியதாக நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

லிட்டானி ஆற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னர் வரையறுக்கப்பட்ட எல்லைக் கோட்டைக் கடந்து, இஸ்ரேலிய தரைப்படை லெபனான் நாட்டின் உள்பகுதிக்குள் மேலும் ஆழமாக முன்னேறி வரும் நிலையிலேயே நெதன்யாகுவின் உத்தரவு வந்துள்ளது.

இஸ்ரேலின் தற்போதைய ஆக்கிரமிப்பை பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் கண்டித்துள்ளன. இதனையொட்டி ஐ.நா பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்திற்கு பிரான்ஸ் நேற்று அழைப்பு விடுத்திருந்தது. இந்த பதற்றத்திற்கு மத்தியில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நேற்று 2 வீதம் அதிகரித்துள்ளது. இதன்படி, அமெரிக்க மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 2.37 டொலர்கள் அதிகரித்து 89.73 டொலர்களாகவும், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 2.16 டொலர்கள் அதிகரித்து 93.28 டொலர்களாகவும் உயர்ந்துள்ளன. உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் ஐந்தில் ஒரு பகுதியைத் தீர்மானிக்கும் முக்கிய கடல்வழியான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கி இருப்பதோடு அங்கு கண்ணிவெடிகளை இட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *