ஈரானுடனான பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் நம்பிக்கை: தொடர்ந்தும் பதற்றம்

3 Min Read

ஈரானுடன் சிறந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் மோதல் தொடர்பில் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு வாய்ப்பு எட்டப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்;ப், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் அமெரிக்கா மீண்டும் தாக்குதலை ஆரம்பிக்கும் என்றும் எச்சரித்தார்.

டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டபோதும், பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதோடு சவூதி அரேபியா, ஜோர்தான் மற்றும் ஈராக்கில் புதிதாக ஆளில்லா விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சின் நெதன்யாகுவை டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்திப்பதும் ஈரான் விவகாரத்தில் தீர்க்கமானதாக பார்க்கப்படுகிறது.

ஈரானுக்கு எதிராக இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக நடத்தி வந்த வான் தாக்குதல்களை அமெரிக்கா கடந்த சனிக்கிழமை நிறுத்தியதோடு பிராந்திய நாடுகள் மீதான ஈரானின் பதில் தாக்குதல்களும் நிறுத்தப்பட்டுள்ளன. ஐந்து மாதங்கள் நீடிக்கும் மோதலில் புதிய திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.

‘நாம் சிறந்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம்’ என்று டிரம்ப் குறிப்பிட்டார். ‘ஏதாவது ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். அது நடந்தால் நல்லது. அது நடக்கவில்லை என்றால், இரண்டு நாட்களுக்கு முன்னர் நாம் செய்து கொண்டிருந்த செயல்களுக்கே மீண்டும் திரும்புவோம்,’ என்றார்.

மிச்சிகனில் பிரசார பேரணி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை பேசிய டிரம்ப், ஈரான் தொடர்பில் கூறும்போது, ‘அவர்களை லஞ்சம் கொடுத்து வளைத்துவிட முடியாது. அவர்களை தோற்கடிக்க வேண்டும்; நாங்கள் அவர்களை கடுமையாகத் தோற்கடிப்போம். ஆனால், இது எப்படி முடிகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது மிகவும் நட்புறவான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன’ என்றார்.

ஈரான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி கூறும்போது, மத்தியஸ்தர்கள் மூலம் இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து செய்திகள் பரிமாறப்பட்டு வருவதாகவும், ஈரான் இராஜதந்திர முயற்சிகளை கைவிடவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், ஈரான் பேச்சுவார்த்தைகளை கோரியதாக வெளியான தகவல்கள் ‘போலியாக உருவாக்கப்பட்டவை’ என்று அவர் நிராகரித்தார்.

எவ்வாறாயினும் தமது பெற்றொலிய இலக்குகளை நோக்கி வந்த ஆளில்லா விமானங்களை சூட்டு வீழ்த்தியதாக சவூதி அரேபியா குறிப்பிட்டுள்ளது. அந்தத் தாக்குதல்கள் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவினால் நடத்தப்பட்டதாகவும் பதில் அளிப்பதற்கு தமக்கு உரிமை உள்ளதாகவும் சவூதி எச்சரித்துள்ளது.

மறுபுறம் சவூதியின் ஆளில்லா விமானங்களின் ஊடுருவலுக்கு பதிலடியாக அதன் பிரதான செங்கடல் துறைமுகமான யன்புவுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாயை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக யெமனின் ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் கடந்த திங்கட்கிழமை இரு ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாக ஜோர்தான் குறிப்பிட்டுள்ளது. மறுபுறம் ஈராக்கின் வடக்கே குர்திஷ் எதிர்ப்புப் படைகள் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக ஈராக் கூறியுள்ளது.

சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் தீர்க்கமான கடல்வழி பாதையாக இருக்கும் ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ஈரான் கூறி வருகிறது. இந்த நீரிணை வழியாக கப்பல்களுக்கு சுதந்திரமாக கடந்து செல்ல முடியும் என்று டிரம்ப் கூறியபோதும் அண்மைக் காலத்தில் கப்பல் போக்குவரத்துகள் முடங்கியுள்ளன.

என்றபோதும் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருக்கும் சூழலில் எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றைய வர்த்தகத்தில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 1.47 டொலர்களாக அல்லது 1.66 வீதம் வீழ்ச்சி கண்டு பீப்பாய் ஒன்று 86.89 டொலர்களுக்கு குறைந்து. இது கடந்த எட்டு நாட்களில் மிகக்குறைந்த விலையாக உள்ளது. அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 81.16 அமெரிக்க டொலராக வர்த்தகமானது. இது 1.45 டொலர் குறைந்து, 1.76 வீத சரிவை பதிவு செய்தது.இந்நிலையில் அமெரிக்கா சென்றிருக்கும் பெஞ்சமின் நெதன்யாகும் அமெரிக்க நேரப்படி நேற்று வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்கவிருந்தார். ஈரானுடனான போருக்கு பின்னர் இருவரும் நேரடியாக சந்திக்கும் முதல் சந்தர்ப்பமாக இது இருந்தபோதும், டிரம்பின் தற்போதைய பதவிக் காலத்தில் இடம்பெறும் எட்டாவது சந்திப்பாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் ஈரான் விவகாரம் குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படவிருந்தது. ஈரானுடனான அமெரிக்காவின் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் இஸ்ரேல் எதிர்ப்பை வெளியிட்டு வந்ததோடு, ஈரானில் ஆட்சி மாற்றம் ஒன்றை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *