தாக்குதல்களை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு; கடல் முற்றுகை தொடரும் என்கிறது அமெரிக்கா

1 Min Read

வளைகுடா நாடுகள் மற்றும் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க நலன்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதாக ஈரான் நேற்று அறிவித்துள்ள போதிலும் ஈரானுக்கு எதிரான கடல் முற்றுகையைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய 12 சரக்கு கப்பல்களை திருப்பி அனுப்பியதாகவும் 2 கப்பல்களை முடக்கியுள்ளதாகவும் அந்த தலைமையகம் கூறியுள்ளது.

இவை இவ்வாறிருக்க ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, கடந்த 24 மணி நேரத்தில் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல முயன்ற 06 கப்பல்களை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களைத் தீர்த்துள்ளது.

இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் போர்ப்பதற்றம் உருவாகுமா என்ற அச்சம் எழுந்துள்ள சூழலில் ரஷ்யாவிலிருந்து ஈரானுக்கு பயணித்த சரக்கு கப்பலொன்றை உக்ரைன் நேற்றுமுன்தினம் தாக்கியுள்ளது.

இத்தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈரான், இது சட்டவிரோதமான குற்றச் செயல் என்று குறிப்பிட்டு தெஹ்ரானில் உள்ள உக்ரைனின் பொறுப்பாளர்களை வரவழைத்து ஆட்சேபனை தெரிவித்துள்ளது.இதேவேளை யெமனின் ஹுதிகள் சவுதி அரேபியாவின் ஜிசான் மற்றும் யான்பு நகரங்களில் உள்ள சவுதி அரச எண்ணெய் நிறுவனமான அரம்கோவுக்கு சொந்தமான தளங்கள் மீது நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தியுள்ளது. அத்தோடு தெற்கு செங்கடல் பகுதியில் கப்பலொன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை மன்றம் நேற்று தெரிவித்துள்ளது. ஹொர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை மையமாகக் கொண்டு ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல் நேற்று முன்தினம் வரையான 13 இரவுகள் நீடித்தன. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்தியுள்ளது. பதிலுக்கு ஈரானும் நிறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளதோடு பதிலடி கொடுக்கும் வகையிலேயே தாக்குதல்களை முன்னெடுத்தோம். அவர்கள் தாக்குதல்களை நிறுத்தியுள்ளதால் நாங்களும் நிறுத்திவிட்டோம் என்று ஈரானிய இராணுவத்தின் பேச்சாளர் முகமது அக்ரமினியா கூறினார்.

ஈரான்-அமெரிக்க தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து வகையான கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளும் நேற்று முதல் முழு அளிவில் ஆரம்பிக்கப்படுவதாக கட்டார் போக்குவரத்து அமைச்சு அறிவித்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *