சீனா மற்றும் பாகிஸ்தானின் இராணுவ நகர்வுகளை எதிர்கொள்ளும் வகையில்,எதிர்வரும் பத்தாண்டுக்குள் (2035-க்குள்) இந்தியக் கடற்படையை 200-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களைக் கொண்ட பலமிக்க கடற்படையாக விரிவுபடுத்த இந்தியா இலட்சிய இலக்கு நிர்ணயித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கடற்படையைக் கொண்டுள்ள சீனா, இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை தீவிரப்படுத்தி வருவதால் புது டெல்லிக்கு பாதுகாப்பு கவலை அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் சீனாவுடன் இணைந்து மேம்பட்ட ‘ஹங்கோர்’ (Hangor-class) ரக தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற்று வருவதும் இந்தியக் கடற்படையின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில், முழுக்க முழுக்க உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது.
அண்மையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘INS மகேந்திரகிரி’ (மறைந்திருந்து தாக்கும் ரக போர்க்கப்பல் – Stealth Frigate) மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் வேட்டைத் கப்பலான ‘INS மல்வான்’ போன்ற போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தியக் கடற்படை ஒவ்வொரு 40 முதல் 45 நாட்களுக்கு ஒரு புதிய உள்நாட்டுப் போர்க்கப்பலைச் சேவைக்கு கொண்டு வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தற்போது இந்தியக் கடற்படையில் சுமார் 150 கப்பல்கள் உள்ளன (இதில் 135-க்கும் மேற்பட்டவை முன்களப் போர்க்கப்பல்கள், அழிக்கும் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகும்).
மேலும், சுமாராக 50 போர்க்கப்பல்கள் தற்போது பல்வேறு கட்ட தயாரிப்பில் உள்ளன.இந்த வார்ச்சியைக் கருத்தில் கொண்டு, 2035-க்குள் 200 கப்பல்கள் என்ற இலக்கை எளிதில் எட்ட முடியும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த வளர்ச்சி, இந்துசமுத்திர பகுதியில் நாட்டின் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, பிராந்தியத்தில் இந்தியாவின் மூலோபாய பலத்தையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




