வெப்பமான வானிலை நிலவும் சூழலில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் விளைவாக 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
காட்டுத்தீ அச்சுறுத்தல் மிக்க பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
பிரான்சின் ஜிரோன்ட் பகுதியில், போர்டோவைச் சுற்றியுள்ள சில நகரங்களிலிருந்து மேலும் 55,000 பேர் வெளியேற்றப்பட்டதால், அங்கு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 220,000 ஐத் தாண்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரான்சின் போர்டோ நகரை அச்சுறுத்தி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் நேற்று தீவிர முயற்சிகளை முன்னெடுத்தனர்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது குறைந்தது 68 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினமிரவு முழுவதும், தீ வேகமாகப் பரவியதை அவதானிக்க முடிந்ததாக போர்டோ பகுதிக்குப் பொறுப்பான உள்ளூர் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஸ்பெயின் தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது, வலென்சியா அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் ஒரு முதியவர் உயிரிழந்தார்.
ரொய்ட்டர்ஸ், சி.என்.என்




